ஜனவரி 9 ஒரு வெள்ளிக்கிழமை. கார்கரேயும் மதன்லால் பஹ்வாவும்,மதியம் ரயிலில் அஹமத்நகரிலிருந்து புறப்பட்டு,மாலையில் பூனா சென்றடைந்தனர். தாங்கள் பத்திரமாகப் பதுக்கி வைத்திருந்த வெடிகுண்டுகள் போலீசாரால் கைப்பற்றப்பட்டு விட்டதால், இப்போது புதிதாக வாங்க வேண்டியிருந்தது.
ரயில் நிலயத்திலிருந்து ஒரு ‘ டோங்கா ‘வில் ( குதிரை வண்டியில் )பாட்கேயின் கடைக்கு இரவு 8.30 மணி சுமாருக்கு வந்தனர் . பின்னாளில் காந்தி கொலை வழக்கின் போது,பாட்கே இது பற்றி வாக்குமூலம் அளித்த போது, கார்கரே முதன்முதலாக அப்போதுதான் மதன்லால் பஹ்வாவை தனக்கு அறிமுகம் செய்து வைத்ததாக தெரிவித்தார்.
அதன் பின்,அவரிடம் என்ன ‘ மால் ‘ இருக்கிறது என்று காட்டும்படி கேட்டார்கள் ‘ என்றும் தன் வாக்குமூலத்தில் தெரிவித்தார். கார்கரேயும், மதன்லால் பஹ்வாவும் ,திகம்பர் பாட்கேயிடம் மராத்தியில்தான் பேசினார்கள்.
‘ மால் ‘ என்பது பாட்கேயிடமிருந்த வெடிகுண்டுகள்,ஆயுதங்கள்,வெடிபொருட்கள் மற்றும் டிடோனேடர்களை குறிப்பிட அவர்கள் பயன்படுத்திய வார்த்தை. வீட்டின் பின்புறம் கல் ஸ்லாபின் கீழ் ஒளித்து வைத்திருந்த பொருட்களை கொண்டு வரும்படி,தன் வேலையாள் ஷங்கர் கிஷ்டய்யாவை அனுப்பினார் பாட்கே.
சங்கர் கிஷ்டய்யா,’ gun cotton slabs,cartridges,ஒரு பிஸ்டல் ,மற்றும் ஃப்யூஸ் வயர் ஆகிய பொருட்களை கொண்டு வந்தார். அவற்றை நன்கு பரிசீலித்த மதன்லால் பஹ்வா ,’ அவற்றை எப்படி பயன்படுத்த வேண்டும் என்று தனக்குத் தெரியும் என்று கூறினார்.
அதன்பின்,எந்த பொருளையும் வாங்காமல்,இருவரும் சென்று விட்டனர். பம்பாய் செல்லும் ரயில் நள்ளிரவிற்கு சற்று முன்னர் தான் புறப்பட இருந்தபடியால்,ஆப்தே மற்றும் நாதுராம் கோட்ஸேயை சந்தித்து நீண்டதொரு ஆலோசனை நடத்த போதிய நேரமிருந்தது.
பாட்கேயிடமிருந்த பொருட்கள் அனைத்தும் பயன்படுத்தக் கூடியதுதான் என்றாலும், அதற்கு அவர் கூறிய விலை மிக அதிகம் என்று மதன்லால் பஹ்வா தெரிவித்தார்.
நிதி ஏற்பாட்டை கவனிக்க வேண்டிய ஆப்தே, வேறு இடத்தில் அந்த பொருட்கள் மலிவாக கிடைக்கிறதா என்று பார்க்கலாம் என்று கூறினார். பம்பாயில் மதன்லால் வேலை பார்த்து வந்த பழைய நிறுவனம் அப்போது செயல்பாட்டில் இல்லை.
செம்பூர் அகதிகள் முகாமிலிருந்த தன் நண்பர்கள் சிலரை சந்தித்தால்,பொருட்கள் மலிவாகக் கிடைக்கும் இடங்கள் பற்றிய தகவல்கள் கிடைக்கலாம் என்று மதன்லால் பஹ்வா கூறினார். தான் டெல்லி செல்ல இருப்பதாகவும்,ஊர் திரும்ப சில நாட்களாகலாம் எனவும் அவர்களிடம் பஹ்வா தெரிவித்தார்.
டெல்லிக்கு வரும்படியாக பஹ்வாவின் தந்தை கடிதம் எழுதியிருந்தார். தந்தையையும், மாமா உள்ளிட்ட சில உறவினர்களை காணவும் தான் டெல்லிக்கு பயணம். ஆனால் டெல்லி செல்லும் முன் தான் சில நாட்கள் பம்பாயில் இருக்கப்போவதாகவும்,
அப்போது தங்களுக்கு வெடிகுண்டுகள் உள்ளிட்ட வெடிப்பொருட்கள் கொடுக்கக் கூடிய ஒருவரை கண்டு பிடித்து கார்கரேக்கு அறிமுகம் செய்து விட்டுச் செல்வதாக தெரிவித்தார்.
கார்கரேயும், மதன்லால் பஹ்வாவும் பம்பாய் புறப்பட்டுச் சென்றனர்.
( தொடரும் )
#காந்திகொலையும்பின்னணியும்
- எழுத்து: யா.சு.கண்ணன்




