பின்னாளில் காந்தி கொலை வழக்கில் ஆயுள் தண்டனை பெற்று, சிறைவாசமும் முடிந்து பல வருடங்களுக்குப் பின்,ஒரு பத்திரிகையாளரிடம் பேசும் போது,
அன்று.. அந்த 9ஆம் தேதியன்று… நாராயண் ஆப்தே,நாதுராம் கோட்ஸே ஆகியோரை விஷ்ணு கார்கரேயும், மதன்லால் பஹ்வாவும் சந்தித்து பேசியதை.. நினைவுகூர்ந்த கார்கரே …
’’ நாட்டிலே நிலவி வந்த சூழ்நிலையைப் பற்றி கவலைக் கொண்டு பேசினோம். தேசப் பிரிவினையும்,முஸ்லீம்களின் அடாவடித்தனமான தேசத் துரோகச் செயல்களும், அவர்களுக்கு துணையாக காந்தி, நேரு உள்ளிட்ட காங்கிரஸ் தலைவர்கள், சற்றும் ஹிந்துக்களின் நலன் பற்றி,அவர்களின் பாதுகாப்பு பற்றிக் கவலைக் கொள்ளாது இருந்ததற்கு பதிலடிக் கொடுக்கும் விதத்தில் ஏதாவது செய்ய வேண்டும் என்று விவாதித்தோம்.
ஹைதராபாத்திற்குள்,புகுந்து ‘ ரஸாக்கர்கள் ‘ மீது கமாண்டோ முறையில் ஒரு தாக்குதல் நடத்துவது.. பாகிஸ்தானிற்கு துப்பாக்கிகள், வெடிகுண்டுகள், வெடி பொருட்கள் முதலிய ஆயுதங்களை கொண்டு சென்று கொண்டிருந்த ரயிலை வெடிகுண்டுகள் எறிந்து தகர்ப்பது, ஹைதராபாத் எல்லையிலிருந்த சுங்கச்சாவடி மீது தாக்குதல் நடத்துவது என பேச்சு இவற்றை சுற்றி சுற்றியே வந்தது’’ என்று தெரிவித்தார்.
இப்போது அவர்களிடையே,மதன்லால் பஹ்வா வடிவத்தில் ஒரு ‘ வெடிகுண்டு நிபுணர்‘ அமர்ந்திருந்தார். ஆகவே , யதார்த்தத்தில் என்ன செய்ய முடியும் என்பதை முடிவுச் செய்வது இப்போது சாத்தியமாக இருந்தது.
முதல் இரண்டு திட்டங்களுக்குத் தேவையான ஆயுதங்கள் இல்லை. கடைசி திட்டத்தை நிறைவேற்ற தேவைப்பட்ட கார் இல்லை. அவர்களுக்கு கோபம் கொந்தளித்தது :
‘ ரஸாக்கர்கள் ‘ தலைவன் காஸிம் ரஸ்வி பற்றி.. அவனுடைய முஸ்லீம் மதவெறித்தனமான சவால்கள் பற்றி… காந்தியும்,நேருவும் இதரத் தலைவர்களும் ரஸ்வியையும் ரஸாக்கர்களையும் மற்ற முஸ்லீம்களையும் சரியாக கையாளாதது பற்றி…
ஆனால் அந்த 1948 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 9ந் தேதி மாலை வரை காந்தியை கொல்வதைப் பற்றி எந்த சிந்தனையும் எழவில்லை.
அன்றைய கூட்டத்தில் எதுவுமே முடிவு செய்யப்படவில்லை. மதன்லால் பஹ்வாவும் கார்கரேயும் ‘ மால் (வெடி ஆயுதங்கள் ) சப்ளையரை’ தேடி பம்பாய் புறப்பட்டுச் சென்றனர்.
ஆப்தேயும், நாதுராமும் பூனாவிலேயே தங்கி அடுத்தக்கட்ட நடவடிக்கைப் பற்றி யோசிக்கலாயினர்.
ஒரே ஒரு விஷயத்தில் அவர்கள் எல்லோருக்கும் ஒருமித்தக் கருத்து இருந்தது. அது…
எங்காவது,ஏதாவது விதத்தில் தாக்குதல் நடத்த வேண்டும் என்பது… பம்பாயில் கார்கரேயை எங்கு தொடர்பு கொள்ள வேண்டும் என்பதை அவர்கள் அறிந்திருந்தார்கள்.
கார்கரே தன் மனைவியின் சகோதரி திருமதி லலித்தின் கிர்கஹாம் பகுதி வீட்டிலோ,அல்லது தானேயின் புறநகர் பகுதியிலிருந்த நண்பர் ஜி.எம்.ஜோஷி வீட்டிலோ தங்குவது வழக்கம்.
ஜி.எம்.ஜோஷி தாதரில் ‘ சிவாஜி பிரிண்டிங் பிரஸ் ‘ என்ற பெயரில் ஒரு அச்சகம் நடத்தி வந்தார். ஆகவே ஏதாவது அவசரமான விஷயம் என்றால் கார்கரேயை உடனடியாக தொடர்பு கொள்ள முடியும்.
மதன்லாலும்,கார்கரேயும்,10ந்தேதி விடியற்காலையில் பம்பாய் சென்றடைந்தனர்.
(தொடரும்)
#காந்திகொலையும்பின்னணியும்
- எழுத்து: யா.சு.கண்ணன்