கோவிலை அல்ல; குடும்ப அமைப்பை எதிர்க்கிறார்கள்

நம் கலச்சாரத்தில் குடும்பமே அடிப்படை, அதை ஒட்டியே அனைத்தும் கட்டமைக்கப்படுகிறது தேசம் எனும் வீட்டின் அஸ்திவாரமாக, சிறு சிறு செங்கற்களாக விளங்குவது நம் நாட்டின் குடும்ப அமைப்பு முறையே. என்று நம் நாட்டின் குடும்ப அமைப்பு முறை சீரழிகிறதோ அன்று நம் நாடும் பாழடையும், குடும்பமே இங்கு அனைத்துமாக உள்ளது. ஓர் உதாரணம் : உலகமெங்கும் பொருளாதார நெருக்கடி ஏற்பட்டபொழுது, மென்பொருள் துறை வீழ்ச்சி அடைந்த பொழுது உலக நாடுகளில் இதன் தாக்கம் எதிரொலித்த பொழுது நம் பாரத நாடு அசராமல் தைரியமாக இருந்தது, காரணம் நம் குடும்ப பெண்களிடம், தாய்மார்களிடம் இயல்பாகவே இருக்கும் சேமிக்கும் பழக்கம், நெருக்கடி நிலையில் பலர் வேலையை இழந்த பொழுது இந்த சேமிப்புப் பணம் பலரின் குடும்பங்களைக் காப்பற்றியது. சேமிக்கும் பழக்கம் இயல்பாகவே நமக்கு நம் முன்னோர்களால் கற்றுக் கொடுக்கப்படுகிறது.

ஒரு குழந்தையின் முதல் படிப்பிடம், பள்ளி, குடும்பம் அங்கு தான் அதன் வாழ்க்கையின் முதல் அத்தியாயம் செதுக்கப்படுகிறது, ‘முதல் கோணல் முற்றும் கோணல்’ என்பது போல முதல் செதுக்களில் ‘உழி’ தவறுதலாக விழுமாயின் வாழ்வும் தவறிவிடும். இதை உணர்ந்திருந்த நம் முன்னோர் நம்மை குடும்பம் எனும் அடைப்புகுறியில் ஆன்மிகம் எனும் அரண் அமைத்துக் காத்தனர். இன்று குடும்பமும் நம் அடிப்படை ஆன்மிகமும் சிலரால் கேள்விக்குறியாகப்படுவது வாடிக்கையாகிவிட்டது.

தனிமனித சுதந்திரம், நவீனத்துவம், நவீன நாகரிகம் எனும் பெயரில் அனைத்திற்கும் மாற்று என்று கொடி பிடிக்கும் காலம் இன்று. பாரதத்தின் வேர் ஆன்மிகத்தில் பலமாக ஊன்றி இருப்பதால் ஆன்மிக அடிப்படையை அழிப்பதாக நினைத்து கொண்டு; ஆன்மிகத்தின் வேரை அறுப்பதாக நினைத்துக் கொண்டு சிலர் செய்யும் காரியம் நம் குடும்ப வாழ்வியலை சிதைக்கிறது. நம்மைப் பொறுத்தவரையில் கோயில் என்பது நம் குடும்பத்தின் ஒரு அங்கம், எந்த ஒரு செயலும் நமக்கு கோயிலின் வாசற்படிகளில் இருந்தே தொடங்குகிறது. அந்தக் கோயிலின் அரவனைப்பில் இருந்து நம்மை அன்னியப்படுத்தும் நடைமுறையையே நவீனம் பற்றி, முற்போக்கு பற்றி பேசுபவர்கள் வைப்பது.

இவர்கள் எதிர்ப்பது கோயிலை அல்ல, மறை முகமாக நம் நாட்டின் குடும்ப அமைப்பை. காலம் காலமாக நம் முன்னோர் பின்பற்றி வந்த, கொண்டாடி வந்த நடைமுறைகளை , விழாக்களைக் கேலிபேசுவது, குறைத்து மதிப்பிடுவது நம்மை சிறுமைப் படுத்தி ஒதுக்குவது சிலரின் திட்டமிட்ட, நம் கலாச்சாரத்தை கேலிப் பொருளாக்குகிற வேலை.

தீபாவளியை விமர்சனம் செய்வது, பெண்களின் தாலியை கேலி செய்வது, இந்து தர்மக் கடவுளர்களை, நூல்களை, பழக்கவழக்கங்களை தவறாக விமர்சனம் செய்வது, இதன் மூலம் மக்களிடம் நம் கலாச்சாராம் தவறானது, பிற்போக்கானது என்று பொய் பிரச்சாரம் செய்வது, மக்களின் நம்பிக்கைகளை இம்மண்ணில் இருந்து பிரிப்பது, நம் புராதன வழிமுறைகளை விமர்சிப்பது, ஏதோ புதுமை, முற்போக்கு என்று பார்க்கப்படும் சிலரின் முட்டாள் தனம் நிறைந்த நடவடிக்கை.

நம் பண்பாடு அனைவரையும் அரவனைக்கும் தன்மை கொண்டதால், பிற நாகரிகங்கள், பிற கலாச்சாரங்கள், பிற வழிபாட்டு முறைகளில் நல்லவை, சிறப்பானவை என்று இருப்பதை நாம் ஏற்றுக் கொள்கிறோம், ஆனால் அதே சமயம் நம்முடைய சொந்தமான, இம்மண்ணின் மரபுகளையும் மறக்காமல் இருப்பதே புத்திசாலித்தனம், நம் மண்ணின் வேர்களை மறந்து விட்டு அல்லது புரந்தள்ளி விட்டு மற்ற நாட்டின் வழி முறைகளைப் பின்பற்றுவது எப்படி சரியாகும் ?

ஒவ்வொரு நாட்டிற்கும் ஒரு இயல்பு, ஒரு தனி தன்மை உண்டு அந்த இயல்பிலேயே அந்த நாடுகளை வளர்த்தெடுக்க வேண்டும், ஒருவருக்கு ஏற்றது பிறருக்கு ஒத்துவராது “மற்றவர்களுக்கு ஏற்ற ஒன்று, நமக்கு நஞ்சகலாம்” என்கிறார் சுவாமி விவேகானந்தர், பிறரின் வழிமுறைகளை நாம் அறிந்து கொள்ளலாம் அவற்றை வழிமொழிவது, பின்பற்றுவது நம் மண்ணிற்கு உகந்ததள்ள. நம் பாரத தேசியத்தின் அடிப்படையாக விளங்கும் நம் ஆன்மிக மரபுகளைப் பாதுகாப்பது நம் ஒவ்வொருவரின் கடமையாக உள்ளது, இந்த நாடு நமக்கு எவ்வளவோ கொடுக்கிறது, பதிலுக்கு நாமும் ஏதேனும் செய்ய வேண்டும், முக்கியமாக நம் ஆன்மிக வேர்களை, நம் கலாச்சார வெளிப்படுகளைப் பாதுகாக்க வேண்டும். நம் பழம்பெரும் பாரதத்தைப் போற்றிப் பாதுகாக்க வேண்டும், பாதுகாப்போம். ஜெய் ஹிந்த்.

கட்டுரையாளர்: அ.பரிவழகன்