
உன் எதிர்காலத்தை தீர்மானிப்பவன் நீயே!
ஜனவரி 12- சுவாமி விவேகானந்தர் பிறந்த நாள்!
தேசிய இளைஞர் தினம்!
பாரத தேசத்தின் கலாச்சார பாரம்பரியத்தைக் காத்துப் போற்றும் சாமர்த்தியம் இளைஞர்களுக்கு இருக்கிறது என்றும் தேசத்தை முன்னேற்றப் பாதையில் எடுத்துச்சென்று முன்னிலையில் நிறுத்தும் பொறுப்பு இளைஞர்களுக்கு உள்ளது என்றும் தீவிரமாக நம்பினார் விவேகானந்தர்.
சுவாமிஜி வெறும் உபதேசங்களோடு எல்லை வகுத்துக் கொள்ளவில்லை. தான் நம்பிய கொள்கைக்காக தன் வாழ்க்கையையே அர்ப்பணித்து அனைவருக்கும் முன்மாதிரியாகத் திகழ்ந்தார்.
கலாச்சாரமும் பண்பாட்டு பாரம்பரியமும் பாரத தேசத்தின் ஆழமான சொத்துக்கள் என்று எண்ணிய விவேகானந்தர் எங்கு சென்றாலும் இளைஞர்களின் பொறுப்புகளை அவர்களுக்கு நினைவூட்டி வந்தார். நாட்டை முன்னேற்றப் பாதையில் நடத்திச் செல்வது இளைஞர்களால் மட்டுமே சாத்தியமாகும் என்று அவர் தன் உரைகளில் முக்கியமாக குறிப்பிட்டார்.

தன்னம்பிக்கையோடும் நற்சிந்தனைகளோடும் முன்னேறிச் சென்றால் இளைஞர்களால் செய்ய முடியாதது என்று எதுவுமே இல்லை என்று எடுத்துரைத்தார்.
இளைஞர்களின் சக்திக்கு இருக்கும் முக்கியத்துவத்தை இந்தியா மட்டுமே அல்ல உலகம் முழுவதும் அடையாளம் காண வேண்டும் என்று விவேகானந்தர் முழங்கினார். தலைமுறைகள் கடந்தாலும் அவருடைய சொற்கள் இன்றும் கடைபிடிக்கத் தக்கவையாதலால் இளைய பாரதத்தின் முக்கியத்துவத்தை நினைவுறுத்தும் விதமாக ஒவ்வொரு ஆண்டும் விவேகானந்தரின் பிறந்த நாளான ஜனவரி 12ஐ தேசிய இளைஞர் தினமாக கொண்டாடி வருகிறோம்.
இளைஞர்களுக்காக அவர் ஆற்றிய சொற்பொழிவுகள், செய்த போதனைகள் பல மொழிகளில் உலகமெங்கும் சிறப்பாக பரவியுள்ளன. நவீன பாரதத்தை விரும்பிய விவேகானந்தர் காட்டிய மார்க்கத்தில் இளைஞர்கள் பயணிக்க வேண்டும் என்ற உத்தேசத்தோடு அரசாங்கம் தேசிய இளைஞர் தினம் தொடர்பாக பல நிகழ்ச்சிகளை நடத்தி வருகிறது.

சுவாமி விவேகானந்தராக புகழ்பெற்ற நரேந்திரநாத் தத்தா 1863 ஜனவரி 12 கல்கத்தாவில் பிறந்தார். ஆன்மீகத்தில் ஈடுபாடு கொண்டாலும் அவர் பழமைவாதி அல்ல. நவீன எண்ணங்கள் அவரில் ஊற்றெடுத்தது. மதத்தைவிட மானுடமே உயர்ந்தது என்று நம்பினார். அவரை வெறும் ஹிந்து சன்னியாசியாக பார்க்கக்கூடாது. எந்த காலமானாலும் கலாச்சாரமும் பண்பாடுமே அஸ்திவாரமாக நிற்கும் என்றும் நவீனத்துவத்தை அதில் கொண்டுவந்தால் மட்டுமே முன்னேற்றம் சாத்தியப்படும் என்றும் விவேகானந்தர் கூறினார்.
எதிர்காலத்தை தீர்மானிக்க கூடிய இளைஞர்கள் நல்வழியில் பயணிக்க வேண்டும் என்று பரிதவித்தார். அதனால்தான் விவேகானந்தரின் ஜெயந்தியை தேசிய இளைஞர் தினமாக நடத்த வேண்டுமென்று 1984இல் அரசாங்கம் தீர்மானித்தது. அதன் பலனாக 1985ல் இருந்து ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி 12 இளைஞர் தினமாக கொண்டாடுகிறோம். விவேகானந்தரின் வாழ்க்கை, அவருடைய எண்ணங்கள் இளைஞர்களுக்கு ஊக்கத்தை ஏற்படுத்த வேண்டும் என்ற லட்சியத்தோடு இளைஞர் தினத்தை நாடெங்கும் நடத்தி வருகிறோம். இளைஞர்கள் தங்கள் சக்தி மீதும் சாமர்த்தியம் மீதும் புரிதலை ஏற்படுத்திக் கொண்டு எதிர்காலத்தை இலக்காகக் கொண்டு நாட்டை முன்னோக்கி நடத்துவதில் தம் பங்கு தொண்டை ஆற்ற வேண்டும் என்ற ஊக்கத்தை ஏற்படுத்துவதே இளைஞர் தினத்தின் முக்கிய லட்சியம்.

நாடெங்கிலும் ராமகிருஷ்ண மடம், ராமகிருஷ்ணா மிஷன் இவற்றோடு கூட அரசாங்கம், தனியார் கல்வி நிலையங்கள் இளைஞர் தினத்தை மிகவும் சிறப்பாக கொண்டாடி வருகின்றனர். இந்த சந்தர்ப்பத்தில் கலைநிகழ்ச்சிகள், தேசபக்தி கீதங்கள், கட்டுரை போட்டிகள், தனிப்பட்ட சங்கீத போட்டிகள், விளையாட்டுப்போட்டிகள், சபைகள், விவாத மேடைகள் ஏற்பாடு செய்வது வழக்கமாக உள்ளது. நம் கலாச்சாரம் பண்பாடு பாரம்பரியம் ஆகியவற்றை காப்பாற்றுவோம் என்று மாணவர்களால் சபதம் ஏற்கச் செய்வது வழக்கமாக உள்ளது.
உனக்குத் தேவையான எல்லா வலிமையும், உதவியும் உனக்குள்ளேயே உள்ளன. உன்னை நீயே பலவீனன் என்று நினைத்துக் கொள்வது மிகப் பெரிய பாவம் என்று ழுழங்கினார் சுவாமி விவேகானந்தர்.