spot_img
spot_img

சற்று முன் :

சினிமா :

ஆன்மிகம்:

― Advertisement ―

To Read this news article in other Bharathiya Languages

Homeஉரத்த சிந்தனைஇரா.நாகசாமி விவகாரத்தில்... வாய் புளித்ததோ மாங்காய் புளித்ததோ என்று அள்ளி விட்ட ஸ்டாலின்! காரணம் கலைஞரின்...

இரா.நாகசாமி விவகாரத்தில்… வாய் புளித்ததோ மாங்காய் புளித்ததோ என்று அள்ளி விட்ட ஸ்டாலின்! காரணம் கலைஞரின் மகனல்லவா?!

- Advertisement -

Stalin Nagaswamy

தமிழகத்தின் மூத்த தொல்லியல் துறை அறிஞர், தமிழகத்தின் பாரம்பரிய கலாசார பொக்கிஷங்களை, கல்வெட்டுகளை, தமிழர் நாகரிகத்தை உலகுக்குக் கொண்டு வர வேண்டும் என்பதற்காக வாழ்நாளை முழுதாய் அர்ப்பணித்த ஓர் அறிஞரை வெறுப்பின் காரணமாக வழக்கம் போல் பதவி நீக்கம் செய்ய வேண்டும் என்று ஸ்டாலின் கூறியிருப்பது நிறைமதி கொண்ட தமிழறிஞர்களை கடும் வேதனைக்கும் வெறுப்புக்கும் உள்ளாக்கியிருக்கிறது. இத்தனைக்கும் நாகசாமி, கருணாநிதியுடன் நட்புறவு பேணியவர்தான்!

தமிழகத்தில் அறிவார்ந்த தமிழை அழித்து, தமிழுணர்ச்சி என்ற பெயரில் ஆங்கிலத்தைத் திணித்து தமிழல்லாதவற்றை தமிழாகக் காட்டிய பெருமை முன்னாள் முதல்வர் கருணாநிதியையே சேரும். வாழ்நாளை தமிழுக்காகவே அர்ப்பணித்து, பணம் காசு சேர்க்காமல் தமிழாய்வில் ஈடுபட்டு, தங்கள் குடும்பங்களை வறுமையில் வாட வைத்த எத்தனையோ தமிழறிஞர்களை சாதி வெறி உச்சந்தலையில் ஏறிய கருணாநிதி உதாசீனப் படுத்தி, தொடக்கக் கல்வி கற்றுக் கொடுக்கக் கூட லாயக்கு இல்லாத நாத்திகர்களை எல்லாம் தமிழறிஞர்கள் என்று விருதுகளுக்கு பரிந்துரை செய்தவர் கருணாநிதி.

அதனால் ஏற்பட்ட விளைவு, நல்ல தமிழ் கற்றுக் கொடுப்பவர்களுக்கு பஞ்சம்! இன்று தமிழ் கற்றுக் கொடுக்கக் கூட சரியான ஆசிரியர்கள் இன்றி, தட்டுத் தடுமாறி தடுக்கித் தடம் மாறி, அந்தரங்கத்துக்கும் அந்தரத்துக்கும் வேறுபாடு அறியாத மிகக் கேவலமான சொல்லாட்சியுடன் ஸ்டாலினே மேடையேற வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது!

என்ன சொன்னார் ஸ்டாலின்?! ஏன் மறுப்பு தெரிவித்து மனம் வெதும்பிப் பேசினார் இரா.நாகசாமி!?

stalin tarred shirt

கடந்த வாரம், ஸ்டாலின் ஓர் அறிக்கை வெளியிட்டார். அதில்,”வேதங்களில் இருந்து திருக்குறள் வந்தது என்று திருவள்ளுவரை சிறுமைப்படுத்தி, திரிபு வாதத்தை முன்வைத்த முன்னாள் தொல்லியல் அதிகாரி நாகசாமியை, செம்மொழி தமிழாய்வு நிறுவனத்தின் சார்பில் வழங்கப்படும் ‘குடியரசுத் தலைவர் விருதுகளை’ தேர்வு செய்யும் கமிட்டியில் உறுப்பினராக நியமித்திருப்பதற்கு திமுக சார்பில் கடும் கண்டனத்தை தெரிவித்துக் கொள்கிறேன்.

தமிழ் மொழிக்கு எதிராகவும், தமிழ் கலாச்சாரத்தினை தன் மனம் போன போக்கில் திரித்து பாஜக மற்றும் மதவாத சக்திகளின் கவனத்தைத் தன்பால் திருப்பிடும் நோக்கில் எழுதி வரும் அவருக்கு ஏற்கெனவே பத்மவிபூஷண் விருதை வழங்கி கவுரவித்துள்ள பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய பாஜக அரசு, இப்போது செம்மொழி தமிழாய்வு நிறுவனத்திலும் ஒரு பொறுப்பினை வழங்கி செம்மொழித் தமிழுக்கும் பேரிழுக்கு ஏற்படுத்த முயற்சி செய்து பார்த்திருக்கிறது” என்று குறிப்பிட்டிருந்தார்.

சொல்லப் போனால், வாய் புளித்ததோ மாங்காய் புளித்ததோ என்ற பாணியில், யாரைச் சொல்கிறோம், எப்படிச் சொல்கிறோம் என்ற அடிப்படை அறிவு கூட இல்லாமல், காரணம் நான் கலைஞரின் மகன் என்று சொல்லியபடி, கருணாநிதி என்ன வேலை பார்த்தாரோ அதே வேலையை தமிழறிவு சிறிதும் அற்ற ஸ்டாலின் பார்த்திருக்கிறார்! யார் தமிழன் என்று சான்றிதழ் கொடுக்க வேண்டிய நிலையில் ஸ்டாலின் இல்லை என்பதை நற்றமிழறிஞர்கள் நன்றாகப் பதிவு செய்வார்கள். தமிழ் மாணவர் சமுதாயத்தையே கெடுத்துவிட்டிருக்கிற சுபவீரபாண்டியன் போன்ற தொடக்கப் பள்ளி தமிழாசிரியராக இருக்கக் கூட தகுதியற்றவர்கள் வேண்டுமானால் ஸ்டாலினுக்கு ஒத்திசைவு பாடிக் கொண்டிருப்பார்கள்!

ஆனால், இரா.நாகசாமி தன் வாழ்நாளை தமிழ்ப் பண்பாட்டுக்காகவே அர்ப்பணித்துக் கொண்டிருப்பவர். அவர், மனம் நொந்து நான் தமிழுக்கு எதிரானவனா? என்று கேட்டு தனது ஆதங்கத்தை வெளிப்படுத்தியிருக்கிறார் என்றால், தமிழ் மண்ணில் திமுக., என்ற சாதிவெறிச் சீழ் பிடித்து புரையோடிய புண் எத்தகைய வலியையும் வேதனையையும் தந்திருக்க வேண்டும் என்பதை சாதாரண மனிதனும் உணரமுடியும்!

nagasamy

ஸ்டாலின் கூறியது தொடர்பாக நாகசாமி வியாழக்கிழமை வெளியிட்ட விளக்கத்தில் …

செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனத்தின் விருது தேர்வுக் குழுவின் உறுப்பினராக என்னை நியமித்திருப்பது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு ஏதும் எனக்கு இதுவரை கிடைக்கப் பெற வில்லை. இக்குழுவின் உறுப்பினராக எனக்கான பணி வரன்முறைகள் தொடர்பாகவும் தெரிவிக்கப் படவில்லை. செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனத்துக்கு மத்திய அரசானது போதிய நிதிகளை ஒதுக்கி அதனை ஊக்கப்படுத்தவில்லை என்ற குற்றச்சாட்டை மு.க.ஸ்டாலின் முன்வைத்துள்ளார். அதுகுறித்தும் நான் கருத்துகளைத் தெரிவிக்கப் போவதில்லை.

வேதங்களில் இருந்து திருக்குறள் வந்ததாக நான் திரிபுவாதத்தை முன்வைத்ததாக ஸ்டாலின் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார். இதை நான் ஏற்கவில்லை.

முன்னாள் முதல்வரான கருணாநிதியுடன் 1967-ஆம் ஆண்டில் இருந்து அவர் மறையும் வரையில் அவருக்கு மிகவும் நெருக்கமாக இருந்தவர்களில் நானும் ஒருவன். பூம்புகாரிலும், பாஞ்சாலங்குறிச்சி கட்டபொம்மன் நினைவிடம் அமைக்கும் போதும் அதில் வைக்கத் திட்டமிடப்பட்டிருந்த கல்வெட்டில் தமிழ் கவிதைகளை எழுதித் தரும்படி என்னிடம் அப்போது முதல்வராக இருந்த கருணாநிதி கோரினார்.

எனது தமிழ்ப் பணிகள் தொடர்பாக 2010-ஆம் ஆண்டில் தனது ஏட்டிலேயே என்னைப் புகழ்ந்து எழுதியுள்ளார். கோவையில் செம்மொழி மாநாடு நடைபெற்ற போது காட்சி அரங்குக் குழுவின் துணைத் தலைவராக என்னை நியமித்தார். சோழர்களின் கலைகள் குறித்த எனது புத்தகத்தை தஞ்சை பெரிய கோயிலில் வைத்து வெளியிட்டு எனக்கு சிறப்புச் சேர்த்தார். தனக்கு எப்போதும் ஆதரவாக இருக்க வேண்டும் என்று கருணாநிதி என்னிடம் கூறியிருந்தார்.

தஞ்சாவூரில் சங்கீத மகாலில் நடந்த நிகழ்ச்சியில் மு.க.ஸ்டாலின் என்னைப் புகழ்ந்து பேசியதையும் இப்போது நினைவுபடுத்த விரும்புகிறேன்.

தமிழ் கலை மற்றும் கலாசாரத்தில் எனது பணிகள் என்பது கடந்த 60 ஆண்டுகளாக உலகம் அறிந்தது. எனவே, என்னை தமிழ் மொழிக்கு எதிரானவன் என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கூறியது ஏற்றுக் கொள்ளத்தக்கது அல்ல.

thiruvalluvar yagnam

திருக்குறள் வேதங்களில் இருந்து வந்தது என்று நான் தெரிவித்ததாக ஸ்டாலின் கூறியுள்ளார். இது எனது தனித்த பார்வை அல்ல. எனக்கு முன்பாக ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த மிகப்பெரிய அறிஞர்களின் கருத்துகளாகும். தமிழைக் கற்றுணர்ந்த மிகப்பெரும் அறிஞர்களான பாதிரியார் பெஸ்கி, எல்லீஸ், ஜி.யு.போப், உ.வே.சாமிநாதய்யர் ஆகியோரின் கருத்துகளையே எதிரொலித்தேன். போப் தனது புத்தகத்தில், பகவத்கீதையை திருக்குறள் பின்பற்றுகிறது எனத் தெரிவித்து இருக்கிறார். எனவே, திருக்குறள் தொடர்பாக திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தமிழ் அறிஞர்களிடம் விளக்கத்தைக் கோரியிருக்க வேண்டும்.

இதையும் படிக்க..: வேள்வியை திருவள்ளுவர் மறுத்தாரா? – ஓர் ஆய்வு

300 ஆண்டுகள் பழமையான தமிழ் வரலாற்று ஆய்வுகளைப் பற்றி மு.க.ஸ்டாலின் அறிந்திருப்பார் என நான் கருதவில்லை. உலக தமிழ் அறிஞர்கள் மத்தியில் அவர் தமிழ் மொழி குறித்த தனது அறியாமையை வெளிப்படுத்தி விட்டார். எனவே, தர்மசங்கடமான சூழலில் இருந்து தன்னை காத்துக் கொள்ள மத்திய அரசுக்கு விடுத்த வேண்டுகோளை அவர் திரும்பப் பெற வேண்டும்… என்று கூறியிருக்கிறார்.

ஸ்டாலினுக்கு இதை விடக் கேவலம் வேறு எதுவும் இல்லை. ஆனால் மானம் மரியாதை வெட்கம் இதையெல்லாம் துறந்ததால்தான் இப்போது கட்சியின் தலைவர் ஆகியிருக்கிறார்! வாய்புளித்தது; மாங்காய் புளித்தது…! மண்டபத்தில் எவனோ எழுதிக் கொடுத்ததைப் பகிர்ந்து, மடையனும் ஆகிவிட்டாயிற்று! சாதாரண மடையன் அல்ல… மாங்காயுடன் சேர்ந்து!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

உடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்!
தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!

https://t.me/s/dhinasari
Whatsapp - தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!
https://www.whatsapp.com/channel/dhinasari

Follow us on Social Media

19,184FansLike
386FollowersFollow
93FollowersFollow
0FollowersFollow
4,866FollowersFollow
18,200SubscribersSubscribe