ராமர் தன்னைப் பற்றி பிறரிடம் அறிமுகம் செய்து கொள்ளும் போதெல்லாம் இஷுவாகு குலத்தின் தோற்றமான சூரியனில் தொடங்கி, இஷ்வாகு, அம்பரீசன், திரிசங்கு, அசமஞ்சன், பகீரதன், ரகு உட்பட அனைவரின் பெயர் மற்றும் புகழையும் வரிசையாகச் சொல்லி, இறுதியில் தசரதனின் புகழையும் சொல்லி அவரின் மைந்தனானவன் அடியேன் என்று ஒவ்வொரு முறையும் சொல்வாராம்”.
இதை, ஸ்வாமி வேளுக்குடி கிருஷ்ணன் அவர்கள் ராமாயண உபன்யாசங்களில் ஸ்ரீ ராமரைப் பற்றி கொஞ்சம் வேடிக்கையாக, ஒருமுறை கேட்பவருக்கே இத்தனை பேரின் புகழைக் கேட்கச் சின்னதா அயற்சி வந்திடுமே… சீதாப் பிராட்டியார் ஒவ்வொரு முறையும் கேட்கும் போது எப்படி நினைச்சுக்குவாரோ தெரியலை என்று சொல்வார்.
ஆரம்பத்தில், அகிலாண்ட கோடி ப்ரம்மாண்ட நாயகன் ஸ்ரீராமன் ( நாம கீர்த்தி உபயம் ஸ்வாமி கோபாலவல்லிதாசர்) எதற்கு பிறர் புகழ் பாடுகிறார் என்று கூட தோன்றியது. சரி முன்னோர்கள் புகழ் பாடுவது மரபு போல என்று நினைத்துக் கொண்டு சமாதானம் ஆனேன். ஆனால், இன்று தான் உண்மையான காரணம் அறிந்தேன்.
வாட்ஸ்-அப்பில் 26 நிமிட வீடியோ ஒன்று வந்தது. அனுப்பியவர் அவ்வளவு சாதாரணமாக வாட்ஸ்-அப் மெஸேஜ் அனுப்புபவர் இல்லை என்பதால் ஏதோ சிறப்பு இருக்கும் என்பதால் பார்க்க ஆரம்பித்தேன். சகோதரி, ஸ்ரீமதி விஷாகா ஹரி அவர்களின் உபன்யாசம் அது! முன்பெல்லாம் சங்கீத உபன்யாசம் தான் அதிகம் செய்வார். காலத்தின் தேவைக்கேற்ப, சமீபத்தில் சமூகச் செய்திகளைக் கலந்து கொடுத்து பிரமிக்க வைக்கிறார்.
ஃபேஸ்புக்கில் எப்படி நடந்து கொள்வது பற்றி ஏதோ சொல்லியிருக்கிறார் போல என்று கொஞ்சம் ஈடுபாடு குறைவாகக் கேட்க ஆரம்பித்தேன். ஆனால், விசயம் பிரமிப்பாக இருந்தது.
இத்தனை காலமாக அரசியல் அறிவு என்பது, ப்ளாட்டோ, அரிஸ்டாட்டில் போன்ற மேற்கத்திய அரசியல் ஞானிகள் முழுமையான அரசியலறிவு பெற்ற தேசம் எப்படி அமையவேண்டும்? மன்னர்களுக்கும் மந்திரிகளுக்குமான தகுதிகள் யாவன என்று பட்டியல் போட்டு அதற்கு “கனவு தேசம்” ( The Ideal State) என்று பெயர் வைத்து அறிவுறுத்தியிருந்ததையும், சாணக்கியர் வகுத்துக் கொடுத்த ஆட்சி நிர்வாக முறையையுமே ஆகச் சிறந்த அரசியற் சிந்தனைகள் என்பதாக நினைத்துக் கொண்டிருந்த என்னைப் போன்ற தத்திகளுக்கு சாபவிமோசனமாக அமைந்திருந்தத சகோதரி விஷாகா ஹரியின் இந்த உபன்யாசம்!
வால்மீகி, இஷ்வாகு குல ஆட்சியில் மந்திரிகளின் குணநலன்கள் என்னென்ன என்று பட்டியலிடுகிறார். அதாவது என்னென்ன இருக்க வேண்டும் என்றல்ல! என்னென்ன குணங்களுடன் இருந்தார்கள் என்று பட்டியலிட்டிருக்கிறார். மன்னரின் மேற்பார்வையில், எட்டு வகையான முக்கிய அமைச்சகங்களும், அதன் கீழ் மேலும் எட்டு வகையான அமைச்சகங்களும் இருந்திருக்கின்றன. அதை நிர்வகித்த அமைச்சர்களுக்கு இருக்க வேண்டிய தகுதிகளையும் பட்டியலிட்டிருக்கிறார். பட்டியலைக் கேட்டாலே தலை சுற்றுகிறது. அப்பொழுது தான் புரிகிறது, ஸ்ரீராமச்சந்திர மூர்த்தி ஏன் ஒவ்வொரு முறையும் தன்னை அறிமுகப்படுத்திக் கொள்ளும் போதெல்லாம் ஏன் தன் குல முன்னோர்களை எல்லாம் வரிசையாகத் துதித்துக் கொள்கிறார் என்று!
இப்படியெல்லாம் ஆட்சி புரிந்த இஷுவாகு குலத்தில் தோன்றிய ஸ்ரீராமரின் ராஜ்ஜியம் எப்படி இருந்திருக்கும்?
சித்திரக் கூடத்தில் ராமனைச் சந்திக்க வந்த பரதனிடம் எப்படி ராஜ்ஜியம் நடத்தவேண்டும் என்று பட்டியலிட்டாராம். அதாவது, அதுவரை ஸ்ரீராமன் எப்படி ஆண்டுவந்தார் என்பதையே ஆலோசனையாகச் சொல்லியிருக்கிறார். இது நூறு பாடல்களாக இருக்கின்றதாம். அந்த ராமராஜ்ஜியத்தை தான் நம் தேசத்தில் மீண்டும் அமைக்க வேண்டும் என்று காந்தியடிகள் அறிவுறுத்தியிருக்கிறார்.
ப்ளாட்டோ, தன் கனவு தேசத்தைப் பற்றிய விளக்கத்துடன் ஒரு குறிப்பிட்ட விசயத்தை உறுதியாகச் சொல்கிறார். அது,“ கனவு தேசம் என்பது அடைதற்கு முடியாதது. ஒருவேளை அறிஞர்கள் இட்ட பட்டியலின் படி ஆட்சி அமைந்து விட்டால், அது கனவு தேசம் அல்ல”. என்பதே!
உலகின் மிகச் சிறந்த அரசியல்ஞானிகள் என்று நம்பப்படுபவர்களின் அரசியல் நீதி என்பது, “அடைய முடியாதது” என்று அவர்களும், உலகமும் நம்பிக் கொண்டிருக்கிறது. அதை நாம் பாடமாகப் படித்துக் கொண்டிருக்கி்றோம். ஆனால், அதை விடச் சிறப்பான அரசியல் ஒழுக்கம், நிர்வாக நீதியுடன் ஆண்டு வந்த ராம ராஜ்ஜியம் என்ற வரலாற்றினை நம் சந்ததியினருக்குக் கற்றுக் கொடுக்கப் பாடத்தில் வைக்காமல், ஒரே அம்பில் ஏழு மரத்தை எப்படி துளைத்தான்? ஏன் வாலியை மறைந்திருந்து கொன்றான்? மாயமான் எது, நிஜ மான் எது என்று தெரியாத மன்னனா? ராவணனுக்கு எப்படி பத்து தலைகள்? அனுமன் மனிதனா குரங்கா என்று வெட்டி ஆராய்ச்சிகள் செய்து நம்மை நாமே ஏமாற்றிக் கொண்டிருக்கிறோம்.
ராமாயணமும் மகாபாரதமும் ஒன்றும் புராணங்கள் அல்ல, அவை இதிகாசங்கள். ஆம்! அப்படி நடந்ததே! அவை நம் வரலாறு.
கதைகளைத் தாண்டி, வால்மீகி சொன்ன ராம ராஜ்ஜிய அரசியல் நெறிகளையும், வியாசர் சொன்ன, விதுர நீதி, பீஷ்மர் உபதேசங்கள், பகவத் கீதை, பாகவதம் சொல்லும் உத்தவ கீதை போன்றவை தான் உண்மையாகக் கற்பிக்கப்பட வேண்டியவை. அதை விட்டு விட்டு இதிகாசங்கள் குழந்தைகளுக்கு எளிதாகப் புரியும் வண்ணம் சொல்லப்பட்டக் கதையமைப்பை எண்பது வயதிலும் கதையாக மட்டுமே கேட்டுக் கொண்டிருப்பதால் தான் நம் பாரம்பரியப் பெருமையும், நம் தேசம் உலகின் குருவாக இருந்தது, அது மீண்டும் உலகின் குருவாக அமையக் கூடியது என்று உணராமல் இருக்கிறோம்.
ஜெய் ஸ்ரீராம்!
குறிப்பு :
இதிகாசங்களில் கதைகள் மட்டுமன்றி மேற்சொன்ன உயர்ந்த விசயங்களைக் கூர்ந்து ஆழமாக உணர்ந்தவர்கள் நிறைய இருப்பர். அடியேன் குறிப்பிட்டுள்ளது என்னைப் போன்ற சாதாரணர்களுக்காக. ஆகவே பெரியவர்கள் மன்னிக்க!




