பாப்புவா நியூகினியில் நம் தமிழர் ஓர் ஆளுநர்! பாப்புவா நியூகினி ஒரு தீவுக் கூட்டம்! அது எங்கிருக்கிறது?
உலகப் பட உருண்டையை சுழற்றுங்கள்! வட பசிஃபிக் பெருங் கடலில் ஆஸ்திரேலியாவுக்கு அருகில் விரிந்து பரந்து மல்லாக்கப் படுத்துக் கிடக்கும் பசுமைப் பூமி ஒன்று தெரியும். ஸ்டாப் !,அது தான் பாப்புவா நியூகினி!).
தென் கிழக்காசிய நாடுகளின் ஆதிவாசி மக்கள் கூடிக் குடிபெயர்ந்த இயற்கை வடியும் தீவு நாடு இது. வாழ்வாதாரங்களுடன் வாழும் மக்கள்-திரும்பிய பக்கமெல்லாம் நில வளம்-நீர் வளம்- வீட்டுக்கு வீடு உழைப்பாளிகள்! அண்மையக் காலங்களில் ஜனநாயக நாடாக மலர்ந்துள்ளது பாபுவா நியூகினி.
அந் நாட்டிலிருந்து வெஸ்ட் நியூ பிரிட்டன் மாநில அரசின் கவர்னர், சென்ற வாரம் சிங்கப்பூர் வந்தபோது என்னை சந்தித்துப் பழகிச் சென்றார். அவர் என் நெருங்கிய நண்பர். வெஸ்ட் பிரிட்டன் மாநிலம், சிங்கப்பூரைப் போல் 55 மடங்கு பெரியது-மக்கள் தொகை பல லட்சத்திற்கும் மேல். தமிழக முதல்வருக்கு சமமான தகுதி இந்தக் கவர்னர் பதவி.
பாப்புவா நியூ கினியி ன் ஒரு மானிலமான வெஸ்ட் பிரிட்டனின் இந்தப் பெருமைக்குரிய ஆளுநர் யார்? ஒரு முழுமையான தமிழர். சசிந்த்ரன் முத்துவேல் தான் அந்த மகத்தான மனிதர். அப்படி ஒன்றும் தள்ளாடும் வயதில்லை. இருபதாண்டுகளுக்கு முன் ஒரு கடை நிர்வாகியாகப்பணி செய்யப் போன விருதுநகரைச் சேர்ந்த சசீந்த்ரன், தன் நாணயத்தால், உள்னாட்டு மக்களுடன் பழகிய நம்பிக்கையால், தனி ஒரு தமிழனாக இருந்து, முற்றிலும் மாறுபட்ட குடி மக்களால், அவர்களையே ஆளும் கவர்னராக வாக்களித்துத் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கின்றா
இன்னொரு தகவல் ஆளுநர் சசீந்திரன் தமிழை மறக்காதவர். மனைவி,குழந்தைகள் இல்லத்தில் தமிழில் மட்டுமே பேசும் பழக்கத்தினர். அண்மையில் ’சிங்கையில் ‘ தமிழும் தமிழரும்’ என்கிற என் நூல் சிங்கப்பூரில் வெளியானபோது, திருமதி சசிந்திரன் அந் நிகழ்ச்சிக்காகவே வந்திருந்து சிறப்பித்தார்.
காமராஜர் பிறந்த ஊரில் பிறந்ததைப் பெருமையாகக் கூறிக் கொள்ளும் ஆளுநர் சசீந்திரன், அவருடைய நேர்மைக் குணத்தை நெஞ்சில் இருத்தி வாழ்வதாகக் குறிப்பிட்டார். மீன், இறைச்சி உணவுகளுக்குப் பஞசமில்லாத அந்த நீர்வள நாட்டில், சைவ வகை உணவுகளை மட்டுமே உண்டு வாழ்வதாகக் குறிப்பிட்டபோது, நான் வியந்து தடுமாறினேன். அக் குடும்பத்தினருக்கு என் நல்வாழ்த்துகள்!
-ஏ.பி.ஆர். @ ஏ.பி.ராமன், சிங்கப்பூர்





