அமரராகிவிட்ட பாரதத்தின் அருந்தவப் புதல்வர் அடல் பிஹாரி வாஜ்பாய் குறித்த நினைவுகள்…
1987 இல் தலைவர் வைகோ அவர்களின் நாடாளுமன்ற உதவியாளராக இணைந்த காலம் முதல், பெரும்பாலான நாட்கள் அவருடன் நாடாளுமன்றம் செல்வதற்கான வாய்ப்புகள் கிடைத்தன.
அப்போதெல்லாம் கெடுபிடிகள் எதுவும் கிடையாது. பின்னாளில் நாடாளுமன்றத்தின் மீது தாக்குதல் நடைபெற்றபிறகே, பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டன. இப்போது ஆறு இடங்களில் நம்மைச் சோதித்தபிறகே உள்ளே நுழைய விடுகிறார்கள்.
வட்ட வடிவ நாடாளுமன்றக் கட்டடத்துள் நுழைந்தவுடன் நடைவழி வரும். அதில் அப்படியே ஒரு சுற்று நடந்து வரலாம். சில இடங்களில் மட்டும் ஓரிரு இருக்கைகள் இருக்கும்.
தலைவர் நாடாளுமன்றத்திற்குள் இருக்கும்போது, மேல்மாடத்தில் இருப்பேன். அல்லது, வெளியே வந்து அந்த நடைவழியில் உள்ள இருக்கையில் அமர்ந்து கொள்வேன். பிரதமர் உட்பட அனைத்துத் தலைவர்களும் அந்த வழியாகத்தான் நடந்து வருவார்கள்.
வாஜ்பாயும் வருவார். வழிநெடுகிலும் அவருக்கு எல்லோரும் வணக்கம் சொல்லுவார்கள். நானும் எழுந்து நின்று வணக்கம் சொல்லுவேன். அவர் லேசாகத் தலையை அசைத்து விட்டு, குனிந்த தலை நிமிராமல் நடப்பார்.
அப்படி எண்ணற்ற முறை அவரை, மிக நெருக்கத்தில் பார்த்து இருக்கின்றேன். நாடாளுமன்றத்திற்குள் அவரது உரைகளைக் கேட்டு இருக்கின்றேன். அந்த நடைவழியிலும் ஆங்காங்கே தொலைக்காட்சிப் பெட்டிகள் உண்டு. அவைக்குள் நாம் இல்லாவிட்டாலும், அந்தத் தொலைக்காட்சி வழியாக அவை நடவடிக்கைகளைப் பார்த்துக்கொண்டே இருக்கலாம்.
மொரார்ஜி தேசாய் அமைச்சரவையில், வெளியுறவு அமைச்சராகப் பொறுப்பு ஏற்றபோதுதான் வாஜ்பாய் என்கிற பெயர் எனக்கு அறிமுகம்.. சிறுவயது முதல் நாளிதழ்களை முழுமையாக வாசிக்கும் பழக்கம் உள்ளதால், நாள்தோறும் அவரது பெயரைக் கேள்விப்பட்டு இருக்கின்றேன்.
அவர்தான் முதன்முதலாக, அயல் உறவுத் துறை அமைச்சர் என்ற பொறுப்பில் ஏராளமான அயல்நாடுகளுக்குச் சென்று வந்தவர். அப்போதே அவர் 28 நாடுகள் வரையிலும் சென்று வந்ததாக நினைவு. அந்த வழியில்தான், மோடி இன்று பல நாடுகளுக்குச் சென்று வருகின்றார்.
அதில் குறிப்பிடத்தக்கது சீனப் பயணம். 1962 சீனப்போரின் தோல்விக்குப் பின்னர்,
இந்திய சீன உறவுகள் மிகவும் சீர்குலைந்து போயிருந்தன. அந்த நிலையில், சீனாவுக்குச் சென்று, அந்த நாட்டுடனான உறவுகளைப் புதுப்பித்தவர் வாஜ்பாய்.
அதேபோல, பாகிஸ்தான் உடனான உறவுகளையும் புதுப்பித்தார். நீண்ட காலமாக நின்று போயிருந்த இந்திய பாகிஸ்தான் கிரிக்கெட் போட்டிகள் திரும்பவும் நடைபெறுவதற்கு அவரது முயற்சிகள் அடித்தளம் அமைத்தன. இப்போது பல ஆண்டுகளாக இந்திய பாகிஸ்தான் போட்டிகள் நடைபெறாமல் இருப்பது ஒரு வேதனை.
மொரார்ஜி அரசு பதவி விலகியபோது, ஜனதா கட்சி உடைந்தது. பழைய ஜனசங்கவாதிகள், வாஜ்பாய் தலைமையில் ஒருங்கிணைந்து, 1980 ஆம் ஆண்டு பாரதிய ஜனதா கட்சியைத் தோற்றுவித்தனர். அதன் தொடக்கத் தலைவர் வாஜ்பாய்.
அக்கட்சியின் சட்டதிட்டப்படி, ஒரு தலைவர் இரண்டு ஆண்டுகள் மட்டுமே பொறுப்பு வகிக்க முடியும். அப்படி இரண்டு முறை பொறுப்பு வகிக்கலாம். 1984 வரை இரண்டு முறை வாஜ்பாய் தலைவராக இருந்தார். அவருக்குப் பின்னர் அத்வானி தலைவர் ஆனார்.
இந்தியாவில் நடைபெற்ற பொதுத் தேர்தலில், 1952 ஆம் ஆண்டு வெற்றி பெற்ற ஜனசங்க வேட்பாளர்கள் மூவருள் ஒருவர் வாஜ்பாய். 44 வயதில் அக்கட்சியின் தலைவர் ஆனார். இந்தி மொழியில் மிகச்சிறந்த பேச்சாளர். இயல்பாகவே அவர் ஒரு கவிஞர் என்பதால், அவருடைய பேச்சு வட இந்தியர்களை வெகுவாகக் கவர்ந்தது.
வாஜ்பேயி என்பது ஒரு சாதிப் பெயர்தான். வாஜபேயம் என்ற உயர்ந்த வகை யாகம் செய்யக்கூடிய தகுதியைப் பெற்ற பார்ப்பனர்கள் வாஜபேயி என்று அழைக்கப் படுகின்றார்கள். தமிழில் தொடக்கத்தில் வாஜபேயி என்றுதான் எழுதி வந்தார்கள். அது சற்று உறுத்தலாக இருந்ததால், பின்னாளில் ஏடுகள் வாஜ்பாய் என்று எழுதத் தொடங்கி விட்டன.
அவர் மத்தியப் பிரதேச மாநிலம் குவாலியரில் பிறந்தார். விதிஷா தொகுதியின் நாடாளுமன்ற உறுப்பினராகப் பலமுறை தேர்ந்து எடுக்கப்பட்டார். இந்த ஊர், சென்னை தில்லி தொடரித் தடத்தில் வருகிறது. தமிழ்நாடு வண்டி நிற்காது. ஜி.டி. நிற்கும்.. அந்தத் தொகுதிக்குள்தான் சாஞ்சி வருகின்றது. சாஞ்சி ஸ்தூபியையும், ஓடுகின்ற தொடரியில் இருந்தே பார்க்கலாம். அங்கேதான், ராஜபக்சே வருகையைக் கண்டித்துத் தலைவர் வைகோ தலைமையில் போராட்டம் நடத்தினோம்.
1984 ஆம் ஆண்டு, இந்திரா காந்தி மறைவின்போது நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலில், குவாலியர் தொகுதியில் அவரத் தோற்கடிப்பதற்காக, இளவரசர் மாதவராவ் சிந்தியாவை வேட்பாளராக நிறுத்தினார் ராஜீவ் காந்தி. இந்திரா படுகொலை அனுதாபத்தில் நடைபெற்ற அந்தத் தேர்தலில் வாஜ்பாய் தோற்றுப் போனார்.
அதன் பின்னர், பலமுறை அவர் உத்தரப் பிரதேச மாநிலம் லக்னோ தொகுதியில் இருந்து நாடாளுமன்றத்திற்குத் தேர்ந்து எடுக்கப்பட்டார். அவர் தலைவர் வைகோ அவர்கள் மீது கொண்டு இருந்த பற்றும் பாசமும் குறித்து நீங்கள் விரிவாக அறிவீர்கள். தலைவர் எப்போது சந்திக்க நேரம் கேட்டாலும் உடனே சந்திப்பார். எந்தக் கோரிக்கையை முன்வைத்தாலும் ஏற்றுக் கொண்டு செய்து கொடுத்தார். அதற்கு ஒரு பெரிய பட்டியலே இருக்கின்றது.
மறுமலர்ச்சிப் பேரணியைப் பார்வையிட வேண்டும் என்று தலைவர் கேட்டார். அப்போது அதிகாரிகள், பிரதமர் எந்தப் பேரணியையும் பார்க்கின்ற வழக்கம் கிடையாது. அது பாதுகாப்புக்கு ஆபத்து என்று தடுத்தபோதிலும், தலைவருடைய வேண்டுகோளை ஏற்று, மறுமலர்ச்சிப் பேரணியைப் பார்த்தார். கடற்கரைக் கூட்டத்தில் பேசியபோது, மேடையில் அவருக்குப் பின்னால் அமர்ந்து இருந்தேன்.
2000 ஆம் ஆண்டில், அமெரிக்காவின் நியூயார்க் நகரில் ஐ.நா.மன்றத்தின் புத்தாயிரம் ஆண்டுச் சிறப்புக் கூட்டத் தொடருக்கு, இந்திய அரசின் சார்பில் தலைவர் வைகோ அவர்களை வாஜ்பாய் அனுப்பி வைத்தார்.
அந்தப் பயணத்தில், என்னையும் தலைவர் வைகோ அவர்கள் அழைத்துச் சென்றார்கள். அது அரசுமுறைப் பயணம். என்னுடைய முதலாவது அயல் நாட்டுப் பயணம். எனக்குக் கிடைத்த பெரும்பேறு.
தலைவருடன் பலமுறை, தில்லியில் அவரது இல்லத்திற்குச் சென்று இருக்கின்றேன். மிக நெருக்கத்தில் சந்தித்து இருக்கின்றேன். மதிப்பிற்கு உரிய தலைவர். அவரது மறைவு, இந்தியாவுக்குப் பேரிழப்பு!
– சங்கரன்கோவில் அருணகிரி (வைகோ.,வின் செயலர், உதவியாளர்)




