தனது 16 வயதில் ஆர்.எஸ்.எஸ்.,ஸில் இணைந்து அதன் ஷாகாக்களில் பங்கேற்று அதன் பின்னர் அரசியலில் நுழைந்தார் அடல் பிஹாரி வாஜ்பாய். அப்போது அவர் முன் அவருக்கான பெரிய அரசியல் கட்சியோ அதற்கான வலிமையான தளமோ இல்லை.
தான் இணைந்த கட்சியை மூலை முடுக்கெல்லாம் கொண்டு சேர்க்க பல இடங்களுக்கும் பயணித்தார். பின்னாளில் ஆட்சியைப் பிடித்து பிரதமர் ஆகும் நிலைக்கு உயர்ந்தார். அவர் மரணத்தைத் தழுவிய போது, பாரதத்தின் மிகப் பெரும் கட்சியாகவும், தனிப் பெரும்பான்மையுடன் ஆட்சி புரியும் கட்சியாகவும், பல மாநிலங்களில் ஆட்சிக் கட்டிலில் அமரும் கட்சியாகவும் அது விளங்கியது. ஒரு மனிதனின் நிறை வாழ்வு, முழுமையான அரசியல் வாழ்வு என்பது, வாஜ்பாய்க்கு மிகப் பொருந்தும்!
இத்தனை இருந்தும், கட்சியை வளர்ப்பதற்காகவும், கொண்ட கொள்கையை வலிமையுடன் நிறைவேற்றுவதற்காகவும் திருமணம் செய்து கொள்ளாமல், தன் சொந்த வாழ்க்கையை தியாகம் செய்தார். தனக்கேயான குடும்பம் என்று அமைத்துக் கொள்ளாததால், சொத்து சேர்ப்பதில் அவருக்கு எண்ணமில்லை. ஒரு கர்ம வீரரைப் போல் வாழ்ந்த வாஜ்பாய், கடந்த நூற்றாண்டின் தமிழகத்து காமராஜருக்கு ஒப்பிடப் படுகிறார்!
இந்திய பிரதமர்களில் மிகக் குறைந்த சொத்து மதிப்பு கொண்டவர்களில் வாஜ்பாயும் ஒருவர். 2004ஆம் ஆண்டின் கணக்குப்படி, அவரின் மொத்த சொத்து மதிப்பு ரூ.58 லட்சம் மட்டுமே!
தில்லி கிழக்கு கைலாஷ் பகுதியில் எஸ்.பி.எஸ் அப்பார்ட்மென்டில் வாஜ்பாய்க்குச் சொந்தமாக பிளாட் ஒன்று உள்ளது. இதன் மதிப்பு ரூ.22 லட்சம். மத்தியப் பிரதேச மாநிலம் குவாலியரில் பரம்பரை வீட்டில் ரூ.6,00,000 மதிப்புக்குப் பங்கு உள்ளது.
தில்லி எஸ்.பி.ஐ வங்கியில் ரூ.3,82,886 சேமிப்பாக வைத்துள்ளார். இதே வங்கியில் உள்ள மற்றொரு கணக்கில் ரூ.25,75,562 டெபாசிட் செய்துள்ளார். இது தவிர சேமிப்புப் பத்திரங்கள் ரூ.1,20,782 மதிப்புக்கு வைத்துள்ளார். இவற்றின் மொத்த மதிப்பு ரூ.58 லட்சம்தான்.
கடந்த 2004ஆம் ஆண்டு லக்னோ நாடாளுமன்றத் தொகுதியில் போட்டியிட்டபோது வேட்பு மனு தாக்கலில் அவர் அளித்த சொத்து மதிப்பு விவரம் இது. இப்போது இவற்றின் மதிப்பு சற்றே உயர்ந்திருந்தாலும், கோடிக் கணக்கில் சொத்துகளைக் குவித்து வைத்திருக்கும் எம்.எல்.ஏ.க்கள், வார்டு கௌன்சிலர்களைவிட இது மிக மிகக் குறைவுதான். அதுவும் மூன்று முறை பிரதமராக இருந்த ஒருவரின் சொத்து மதிப்பு இது என்பது, அவரின் தூய வாழ்க்கையைக் காட்டுவதாகவே அமைந்தது!




