
கோவில்பட்டி அருகே உள்ள எட்டயபுரத்தில் பக்ரீத் குர்பானி கொடுக்க களை கட்டியதால் ஆட்டுச்சந்தையில் இன்று ஒரே நாளில் ரூ.5 கோடிக்கு ஆடுகள் விற்பனையானது.
தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி அருகேயுள்ளது எட்டயபுரம். தமிழகத்தில் புகழ்பெற்ற ஆட்டுசந்தைகளில் எட்டயபுரம் ஆட்டுச்சந்தையும் ஒன்று,
தூத்துக்குடி, நெல்லை, விருதுநகர், இராமநாதபுரம், தேனி, மதுரை, கோவை, சிவகங்கை என சுமார் 12 மாவட்டங்களை சேர்ந்த ஆட்டு வியாபாரிகளும், பொதுமக்களும் இங்கு வருவது வழக்கம். ஒவ்வொரு வரமும் சனிக்கிழமை நடைபெறும் இந்த ஆட்டுச்சந்தையில் சராசரியாக 3 ஆயிரம் ஆடுகள் வரை விற்பனையாகி வருகிறது.
இந்நிலையில் வரும் 22ந்தேதி பக்ரீத் பண்டிகை நடைபெற உள்ளதால் இன்று விற்பனை அமோமாக இருந்ததாக வியாபாரிகள் தெரிவித்தனர். இன்று அதிகாலை முதலே ஆடுகளின் வரத்து அதிகமாக காணப்பட்டது,
வெள்ளாடு, செம்மறி ஆடு என 10 ஆயிரம் ஆடுகள் இன்று விற்பனைக்கு கொண்டு வரப்பட்டது. ஆட்டின் எடைக்கு ஏற்ப குறைந்த பட்சமாக ரூ 3 ஆயிரம் முதல் 28 ஆயிரம் வரை ஆடுகள் விற்பனை செய்யப்பட்டன. இந்தாண்டு ஆடுகளின் விலை இரு மடங்கு உயர்ந்துள்ளதாக வியாபாரிகளும், பொதுமக்களும் தெரிவித்தனர்.
ஆடுகள் வரத்து அதிகமாக இருந்தது போல, ஆடுகள் வாங்க வந்த மக்களின் கூட்டமும் கடந்த ஆண்டை விட கணிசமான அளவு அதிகமாக காணப்பட்டது. பல்வேறு மாவட்டங்களில் இருந்து வந்து ஆடுகளை ஆர்வமுடன் வாங்கி சென்றனர். அதிக ஆடுகள் விற்பனை மற்றும் விலை அதிகம் என்பதால் இன்று மட்டும் சுமார் 5 கோடி ரூபாய் வரை வர்த்தகம் நடைபெற்றுள்ளது. இது கடந்த ஆண்டை விட இரு மடங்கு அதிகமாகும். இதனால் வியாபாரிகளும், ஆடு வளர்ப்போரும் மகிழ்ச்சியடைந்தனர்.



