
உலர்ந்த சருமம் உள்ளவர்கள் கிளிசரினுடன் ரோஸ் வாட்டர் மற்றும் எலுமிச்சை சாறு கலந்து முகத்தில் தடவி வரலாம்.
முகம் மிருதுவாகவும், ரோஸ் நிறத்துடனும் இருக்க ரோஜாப் பூ (பன்னீர் ரோஜா) இதழ்களை அரைத்து, அதோடு பால், பச்சை பயிறு மாவு, மற்றும் ரோஸ் வாட்டர் கலந்து முகம் மற்றும் கழுத்தில் தடவி வர வேண்டும். இவ்வாறு செய்து வந்தால் பளபளப்பாக மாறுவதை காணலாம்.
கரும்புள்ளிகள் உள்ள இடத்தில்,பச்சை பயிருடன் சிறிது தயிர் சேர்த்து தடவி வர வேண்டும். பின் அது காய்ந்ததும் கைகளால் மேலும் கீழும் நன்கு தேய்த்த பின்னர் முகத்தை கழுவ வேண்டும். இவ்வாறு செய்தால் முகத்தில் உள்ள கரும்புள்ளிகள் நாளடைவில் மறையும்.
கடலை மாவு ஆறு டீஸ்பூன், பாலாடை இரண்டு டீஸ்பூன், எலுமிச்சம் பழச்சாறு 10 சொட்டு, கிளிசரின் ஒரு டீஸ்பூன் கலந்து தினமும் ஒருமுறை முகம், கை, கழுத்து பகுதிகளில், தடவி வந்தால் வெயிலினால் ஏற்படும் கருமை நிறம் மறையும்.
வெள்ளரிச்சாறு ஒரு ஸ்பூன், சந்தனப்பொடி ஒரு ஸ்பூன், கடலைமாவு ஒரு ஸ்பூன் எடுத்து மூன்றையும் நன்கு கலந்து முகம், கை கால்களுக்கு தினமும் போட்டு வந்தால் முகம் பிரகாசமாக மாறுவதை பார்க்கலாம்.
ஒரு லிட்டர் தேங்காய் எண்ணெயில் நெல்லிக்காய் பொடி, தான்றிக்காய் பொடி, மருதாணி பொடி, கறிவேப்பிலை பொடி, கரிசலாங்கண்ணி பொடி, வெட்டிவேர், ரோஜா இதழ்கள், சந்தன பொடி ஆகியவை தலா 10 கிராம் அளவு சேர்த்து, எண்ணெயில் போட்டு கொதிக்க வைக்கவும்.
இந்த கலவையை நாலு நாள் வெயிலில் வைத்து வர வேண்டும். சூரிய கதிர்கள் பட்டு எண்ணெயில் எசன்ஸ் இறங்கும். பின் அதை வெள்ளைத் துணியில், வடிகட்டவும். குளிக்கும் முன் இதை தலையில், தேய்த்து வந்தால், முடி உதிர்தல், நரைமுடி குறையும், செம்பட்டை முடி கருமையாகும், பொடுகு தொல்லையும் நீங்கும்.