கர்நாடகத்தில் இருந்து தமிழர்களை வெளியேற்றுவோம்: வெறியேற்றும் மஞ்சுநாத்

மேகதாது விவகாரத்தில் தமிழகம் எதிர்ப்பு தெரிவித்தால், கர்நாடகத்தில் வாழும் தமிழர்களை இங்கிருந்து வெளியேற்றுவோம் என்று கன்னட வேதிக அமைப்பின் தலைவர் மஞ்சுநாத் பேசியுள்ளார். மேகதாது அணை கட்ட ஆதரவு தெரிவித்தும், தமிழகத்துக்கு எதிர்ப்பு தெரிவித்தும் கர்நாடகாவில் இன்று முழு அடைப்புப் போராட்டம் நடத்தப் படுகிறது.. இதனால் தமிழக எல்லையில் தமிழகத்தில் இருந்து கர்நாடகா செல்லும் வாகனங்கள் நிறுத்தப்பட்டுள்ளன. ஹோசூர்- பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் வாகனப் போக்குவரத்து முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளது. பெல்காம், பீஜப்பூர், பெல்லாரி, வடகர்நாடகாவில் இந்த முழு அடைப்புக்கு ஆதரவு இல்லை என்றாலும், பெங்களூரு, ராம்நகர், கார்வார்ட், மைசூர், தாவனகெரே உள்ளிட்ட பகுதிகளில் முழு அடைப்பு நடக்கிறது. இந்தப் பகுதிகளில் ரயில், பஸ்கள் ஏதும் ஓடவில்லை. இந்நிலையில், கன்னட அமைப்பினர் பலர் மேகதாது அணை தொடர்பாக கர்நாடகாவில் பல்வேறு இடங்களில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டு பேசிய கன்னட வேதிக அமைப்பின் தலைவர் மஞ்சுநாத், மேகதாது பகுதியில் கர்நாடக அரசு அணை கட்டுவதற்கு தமிழகம் தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்தால் கர்நாடகாவில் வாழும் 25 லட்சம் தமிழர்கள் வெளியேற்றப்படுவார்கள். தமிழர்கள் சார்பில் கர்நாடகாவில் நடத்தப்படும் கல்வி நிறுவனங்களும் மூடப்படும் என எச்சரிக்கை விடுத்துள்ளார்.