காவல் நிலையங்களில் பதிவு செய்யப்படும் முதல் தகவல் அறிக்கைகள (எஃப்ஐஆர்), பதிவு செய்த 24 மணி நேரத்துக்குள் இணையதளத்தில் பதிவேற்றம் செய்ய அனைத்து மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களுக்கு உச்ச நீதிமன்றம் புதன்கிழமை உத்தரவிட்டது.
தில்லியில் குற்ற வழக்குகளில் காவல் நிலையங்களில் பதிவு செய்யப்படும் எஃப்ஐஆரை பதிவு செய்த 24 மணி நேரத்துக்குள் இணையதளத்தில் பதிவேற்றம் செய்யுமாறு மாநகர காவல் துறைக்கு, தில்லி உயர் நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.
அதைச் சுட்டிக் காட்டி, அதேபோல் அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கும் உத்தரவிட வேண்டும் என வலியுறுத்தி உச்ச நீதிமன்றத்தில் இந்திய இளம் வழக்குரைஞர்கள் சங்கம், பொது நல வழக்கைத் தொடுத்தது.
இந்த வழக்கு உச்ச நீதிமன்ற நீதிபதிகள் தீபக் மிஸ்ரா மற்றும் சி.நாகப்பன் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு புதன்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள் கூறுகையில், “காவல் நிலையங்களில் பதிவு செய்யப்படும் எஃப்ஐஆரைப் பதிவு செய்த 24 மணி நேரத்துக்குள் அனைத்து மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களும் இணையதளத்தில் பதிவு செய்ய வேண்டும்.
வன்முறை, பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிராக பாலியல் வழக்குகள் உள்ளிட்ட உணர்வுபூர்வமான வழக்குகளை இணையத்தில் பதிவேற்றம் செய்வதிலிருந்து விலக்கு அளிக்கப்படுகிறது. அதேபோல், மலைப்பாங்கான பகுதிகளில் இணையதள இணைப்பு மிகவும் குறைந்த வேகத்தில் செயல்படும். எனவே அதுபோன்ற பகுதிகளில் பதிவு செய்யப்படும் வழக்குகளை 72 மணி நேரத்துக்குள் இணையதளத்தில் பதிவேற்றம் செய்யலாம் என்று நீதிபதிகள் தங்கள் உத்தரவில் தெரிவித்தனர்.



