
முன்னாள் மத்திய ரயில்வே அமைச்சராக இருந்த லாலுபிரசாத் யாதவின், மண்குவளைத் திட்டம் இப்போது மீண்டும் சூடுபிடிக்கத் தொடங்கியுள்ளது.
கடந்த 2004 ஆம் ஆண்டில், அப்போது ரயில்வேத் துறையின் அமைச்சராக இருந்த ராஷ்ட்ரீய ஜனதா தள தலைவர் லாலு பிரசாத் யாதவ், ரயில்களிலும் ரயில் நிலையங்களிலும் பிளாஸ்டிக், பேப்பர் கப் ஆகியவற்றின் பயன்பாட்டுக்கு தடை விதித்து, மண் குவளைகளில் டீ, காபி, பால் என சூடான பானங்களை வழங்க வேண்டும் என ஓர் உத்தரவினைப் பிறப்பித்தார்.
சுற்றுச்சூழல் மாசுபாடு, ரயில் நிலையங்களும் ரயில்வே பாதைகளின் இருபுறங்களும் அசுத்தமடைவதுடன், குப்பைகள் மலை போல் குவிவதைத் தடுக்க முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும்
ஆனால் அவரது அந்த உத்தரவு அப்போது சரியாக நடமுறைப் படுத்தப் பட இயலவில்லை. இருப்பினும், அப்போது தொற்றிக் கொண்ட பழக்கம், இப்போதும் உத்தரப் பிரதேசத்தில் உள்ள வாராணசி மற்றும் ரே பேரலி ஆகிய ரயில் நிலையங்களில் மண்குவளைகளில் டீ, காபி என சூடான பானங்களை வழங்கி வருகின்றனர்.

இந்நிலையில், தற்போது, நாடெங்கிலும் பிளாஸ்டிக் ஒழிப்பு, பேப்பர் கப் பயன்பாடு குறைப்பு என சுற்றுச் சூழல் பாதுகாப்பு நடைமுறைகளை அமல்படுத்த மத்திய அரசு தீவிரம் காட்டி வருகிறது.
ரயில் நிலையங்களில் வழங்கப் படும் பிளாஸ்டிக் கப்புகள், குடிநீர் பாட்டில்களை கொஞ்சம் கொஞ்சமாக நிறுத்துவதற்கு ஏற்பாடு செய்து வருகிறது. வரும் அக்.2 காந்தி ஜெயந்தி, 150வது பிறந்த நாள் விழாவாக நாடெங்கிலும் கொண்டாடப் படுகிறது.
காந்தி ஜெயந்தியை முன்னிட்டு, தூய்மை இந்தியா இயக்கத்தின் மூலம் பல்வேறு திட்டங்களை மத்திய அரசு அறிவித்து, செயல்படுத்த உள்ளது. அதன் படி, ரயில் நிலையங்களில், ஆர்.ஓ., தண்ணீர் வழங்கும் இயந்திரங்களை அதிகப் படுத்தி, பிளாஸ்டிக் பாட்டில் விற்பனையை குறைப்பதற்கு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது.

மேலும், நாட்டின் முக்கிய ரயில் நிலையங்கள், பஸ் நிலையங்கள், மற்றும் வணிக வளாகங்களில், ‘பிளாஸ்டிக் கப்’ பயன்பாட்டை முடிவுக்கு கொண்டு வந்து, மண்ணால் ஆன குவளைகள் பயன்படுத்த மத்திய அரசு வலியுறுத்தி வருகிறது.
இது தொடர்பில், மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நடுத்தர, சிறு, குறு தொழில்கள் துறை அமைச்சர் நிதின் கட்கரி, ரயில்வே அமைச்சர் பியூஷ் கோயலுக்கு ஒரு கடிதம் எழுதியுள்ளார்.
அதில், முக்கிய 200 ரயில் நிலையங்களில் இந்த ஆண்டில் மண் குவளைகள் மற்றும் மண் தட்டுகளையே கட்டாயம் பயன்படுத்த உத்தரவிட வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார். அதுபோல, விமான நிலையங்கள், மாநில போக்குவரத்து கழகங்கள் நடத்தும் டீக்கடைகள் உள்ளிட்ட இடங்களிலும் மண் குவளைகளை பயன்படுத்த வலியுறுத்தி உள்ளதாக அவர் கூறியுள்ளார்.

இந்த நடவடிக்கையால், ஏழை மண்பாண்ட தொழிலாளர் களின் வாழ்வாதாரம் மேம்படும் என்றும், பிளாஸ்டிக் பயன்பாடு வெகுவாகக் குறையும்; சுற்றுச் சூழலும் மேம்படும் என்று கூறியுள்ளார்.
மேலும் மண் குவளைகளுக் கான தேவைகள் அதிகரிக்கும் போது, அவற்றை அதிக அளவில் தயாரிப்பதற்கான கருவிகளைத் தயாரிக்குமாறு, காதி மற்றும் கிராமப்புற தொழில்கள் ஆணையத்தைக் கேட்டுக் கொண்டுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.
கடந்த ஆண்டில் மின்சாரத்தால் இயங்கும் 10 ஆயிரம் மண்பாண்ட தயாரிப்பு சக்கரங்களை தயாரித்து வழங்கியதாகவும், இந்த ஆண்டில் அதனை 25 ஆயிரமாக அதிகரிக்க உத்தரவிடப் பட்டுள்ளதாகவும் காதி கிராம தொழில் ஆணையம் தெரிவித்துள்ளது.



