
“பசுக்களை வயிறு வாடாமல் ரக்ஷிப்பதற்கு நம்மில் அத்தனை பேரும் ஏதோ ப்ரமாத த்யாகம் பண்ண வேண்டும், ச்ரமப்பட வேண்டும் என்றுகூட இல்லை. பசுவுக்காக எவ்வளவு த்யாகம் பண்ணினாலும் தகும்”,
ஜகத்குரு ஸ்ரீ சந்திரசேகரேந்திர சரஸ்வதி ஸ்வாமிகள்
பசுக்களை வயிறு வாடாமல் ரக்ஷிப்பதற்கு நம்மில் அத்தனை பேரும் ஏதோ ப்ரமாத த்யாகம் பண்ண வேண்டும், ச்ரமப்பட வேண்டும் என்றுகூட இல்லை. பசுவுக்காக எவ்வளவு த்யாகம் பண்ணினாலும் தகும், ச்ரமப்பட்டாலும் தகும் என்பதும் வாஸ்தவம். அப்படிச் சில பேரோ, பல பேரோ புறப்பட்டால் பாராட்ட வேண்டியதுதான்.
ஆனால் எல்லோரும் அவ்வளவு தூரம் போகாமல் ஒரு சின்ன விஷயத்தைக் கவனித்தாலே போதும், எத்தனையோ கோக்களின் வயிறு நிறைந்துவிடும். அதாவது நாம் தினமும் சாப்பிடும் கறிகாய்களில் உதவாதது என்று சீவித் தள்ளுகிற மேல் தோலியெல்லாம் கோவுக்கு ஆஹாரமாகப் போடும்படித் தக்க ஏற்பாடு செய்துவிட்டாலே எத்தனையோ பசுக்களின் வயிறு ரொம்பும்.
தினந்தோறும் வீட்டுக்கு வீடு கறிகாய்கள் நறுக்குகிறோம். ஹாஸ்டல்களிலும் ஹோட்டல்களிலும் நூற்றுக் கணக்கானவர்கள் சாப்பிடுவதால் ஏராளமாகக் கறிகாய்கள் நறுக்கப்படுகின்றன. நறுக்கும்போது ‘வேஸ்ட்’ என்று மேல் தோலிகளை குப்பைத் தொட்டியில் கொட்டி, தோட்டிகளுக்கு அவற்றை சுத்தப்படுத்தும் வேலையை வைக்கிறோம்.
இதற்குப் பதில் ஒவ்வொரு வீட்டிலும், ஹாஸ்டல், ஹோட்டல் போன்ற இடங்களிலும் கறிகாய்த் தோலியைப் போட்டு, ஈ, எறும்பு வராமல் மூடி வைக்கும்படியாகத் தனியாகத் தொட்டி வைத்திருக்கவேண்டும். இவற்றை வீட்டுக்கு வீடு சேகரித்துப் பசுவின் வயிற்றுக்குக் கொண்டு சேர்ப்பதற்கென்றே தொண்டர்கள் திரள வேண்டும். இதிலே அப்படியென்ன கிடைத்துவிடப் போகிறது என்று அலக்ஷ்யமாக நினைக்க வேண்டாம். –



