மும்பை: மும்பையில், கர்ப்பிணி ஒருவர் பிரசவத்துக்காக அனுமதிக்கப்பட்டிருந்தபோது, அவருக்கு மருத்துவ கண்காணிப்பு அவசியம் தேவைப்படும் என்ற நிலையில், அப்படியே விட்டு விட்டு அசிரத்தையாக வீட்டுக்குச் சென்று, சிசுவின் மரணத்துக்குக் காரணமான மருத்துவருக்கு ரூ.19 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. மும்பை மலாட் பகுதியில், கடந்த 2003ல் கர்ப்பிணிப் பெண் சோனு அங்குள்ள மாத்ருச்சயா நர்சிங் ஹோமில் பிரசவத்துக்காக அனுமதிக்கப்பட்டார். அவருக்கு எப்போது வேண்டுமானாலும் பிரசவம் ஆகும் என்ற நிலையில், மருத்துவ கண்காணிப்பு அவசியத் தேவை என்ற சூழலில், தனது மருத்துவமனையிலேயே அனுமதிக்கச் சொல்லியிருக்கிறார் மருத்துவர். அவரது அறிவுரையில் பேரில் சோனு 2003 அக்.18ம் தேதி மதியம் 12.30க்கு சேர்ந்துள்ளார். அவரை அன்று மாலை 4 மணிக்கு பரிசோதித்த மருத்துவர் அடுத்த 15 நிமிடங்களில் குழந்தை பிறந்து விடும் என்று கூறி, கண்காணிப்பு தேவைப்படும் என்றும் அறிவுறுத்திச் சென்றுள்ளார். இந்நிலையில், அதிக வலியால் அவதிப்பட்ட சோனுவுக்கு மருத்துவர் வந்து விடுவார் வந்து விடுவார் என்று இழுத்தடித்து, வேறு வழியின்றி, அங்குள்ள நர்சுகளால் பிரசவம் பார்க்கப்பட்டுள்ளது. ஆனால், குழந்தை பேச்சு மூச்சற்ற நிலையில் இருந்துள்ளதால், பின்னர் வந்த மருத்துவர் வேறு ஒரு குழந்தைகள் நல மருத்துவமனைக்கு சிசுவை எடுத்துச் செல்லும்படி கூறியுள்ளார். ஆனால், அங்கே சிசு உயிரிழந்த தகவலைக் கூறியுள்ளனர். இதை அடுத்து, இந்த விவகாரம் குறித்து புகார் அளிக்கப்பட்டுள்ளது. ஆனால், மருத்துவரோ, சிசு கொண்டு செல்லப்படும் போதுதான் உயிரிழந்ததாகக் கூறியுள்ளார். இருப்பினும் பிரேதப் பரிசோதனை அறிக்கையில், பிறந்த பின்னர், குழந்தை தொப்புள் கொடி சுற்றி மூச்சுத் திணறி உயிரிழந்தது தெரியவந்தது. இதை அடுத்து, மருத்துவ வல்லுநர் குழுவின் அறிக்கையை வைத்து, சோனு கரீர் தனது குழந்தை இறப்புக்குக் காரணம் மருத்துவரின் அசிரத்தையே என்று கூறி அவர் மீது வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கில், மருத்துவரின் அலட்சியப் போக்கு நன்றாகத் தெரிந்ததால், மும்பை புறநகர் மாவட்ட நுகர்வோர் குறைதீர்ப்பாய மன்றம் மருத்துவருக்கு வட்டியுடன் சேர்ந்து ரூ.19 லட்சம் அபராதத்தை விதித்தது.
கர்ப்பிணி பிரசவத்தின் போது அசிரத்தையாக வீடு சென்ற மருத்துவருக்கு ரூ.19 லட்சம் அபராதம்
உடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்!
தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!
https://t.me/s/dhinasari
Whatsapp - தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!
https://www.whatsapp.com/channel/dhinasari