
நியூயார்க்: ரூ.2,780 கோடி முதலீட்டில் தமிழகத்தில் தொழில் தொடங்குவதற்காக 16 நிறுவனங்கள் முதல்வர் எடப்பாடி கே. பழனிசாமி முன்னிலையில் புரிந்துணர்வு ஒப்பந்தங்களில் கையெழுத்தாகின.
வெளிநாடுகளில் இருந்து புதிய தொழில்நுட்பங்களை அறிந்து, அவற்றை தமிழகத்தில் செயல்படுத்தவும், வெளிநாடு வாழ் தமிழர்கள், பிற முதலீட்டாளர்களிடம் இருந்து தமிழகத்துக்கு அதிகளவில் முதலீடுகளை ஈர்க்க 14 நாள் அரசு முறை பயணமாக வெளிநாடுகளுக்கு சென்றுள்ளார். கடந்த 28-ஆம் தேதி முதல் மூன்று நாள்கள் அரசு முறை பயணமாக பிரிட்டனுக்கு முதல்வர் எடப்பாடி கே. பழனிசாமி மேற்கொண்டார்.

பிரிட்டனில் மருத்துவர்கள், மருத்துவப் பணியாளர்களின் மேம்பாடு, லண்டன் ஆம்புலன்ஸ் சேவையின் சிறப்பு அம்சங்கள் குறித்தும், அங்குள்ள புகழ்பெற்ற கிங்ஸ் மருத்துவமனையின் செயல்பாடுகள் பற்றியும் கேட்டறிந்தார். அவற்றை தமிழகத்தில் செயல்படுத்துவது பற்றியும், தொழில் முதலீடுகளை ஈர்ப்பது குறித்தும் பிரிட்டன் நாடாளுமன்ற வளாகக் கூட்டரங்கில் பேசியதுடன் விரிவான ஆலோசனையும் நடத்தினார்.
பிரிட்டனில் உள்ள சஃபோக் நகரில் ஐ.பி.ஸ்விட்ச்-ஸ்மார்ட் கிரிட் நிறுவனத்தில் காற்றாலை மின் உற்பத்தி மற்றும் சூரிய சக்தி மூலம் பெறப்படும் மின்சாரத்தை மின் கட்டமைப்பில் எளிய முறையில் சேர்த்திடும் வழிமுறைகள் மற்றும் அதைச் சார்ந்த தொழில் நுட்பங்கள் குறித்தும் கேட்டறிந்தார்.
இந்நிலையில் அமெரிக்கா நியூயார்க் நகரில் நடைபெற்ற முதலீட்டாளர்கள் கூட்டத்தில் பங்கேற்று பேசிய முதல்வர் பழனிசாமி, “தமிழகத்தில் அமெரிக்க நிறுவனங்கள் அதிகளவில் முதலீடு செய்ய வேண்டும் என அழைப்பு விடுத்தார். மேலும், மின்சார வாகனங்கள் உற்பத்தி செய்ய தமிழகம் உகந்த மாநிலம் என்றும், தடையற்ற மின்சாரம், சிறந்த உள் கட்டமைப்பு வசதிகள் மற்றும் திறன்மிக்க மனித வளம் தமிழகத்தில் உள்ளதாகவும் கூறினார்.
விவசாயம் சார்ந்த தொழில்கள், கால்நடை மற்றும் பால்வள தொழில்களை அரசு தொடர்ந்து ஊக்குவிக்கும் எனவும் குறிப்பிட்டார். தமிழ்நாட்டில் தொழில் தொடங்க ஏதுவாக தமிழ்நாட்டில் 8 ஆயிரம் ஏக்கர் நிலம் தயார் நிலையில் இருப்பதாக கூறினார்.
ரூ.2,780 கோடி முதலீட்டில் தமிழகத்தில் தொழில் தொடங்குவதற்காக 16 நிறுவனங்கள் முதல்வர் எடப்பாடி கே. பழனிசாமி முன்னிலையில் புரிந்துணர்வு ஒப்பந்தங்களில் கையெழுத்தாகின. இந்த புதிய ஒப்பந்தம் மூலம், 20 ஆயிரத்துக்கும் அதிமான வேலைவாய்ப்புகள் உருவாகும், இதனால் இளைஞர்கள் பயனடைவார்கள் என முதல்வர் தெரிவித்துள்ளார்.