முட்டி மோதிப் பார்த்தும்… ம்ஹும்..! திஹார் சிறையில் சிதம்பரம்!

Published:

chidamabaram court - 2026

ஐ.என்.எக்ஸ். மீடியா முறைகேடு வழக்கில் ப.சிதம்பரத்தை நீதிமன்றக் காவலில் திகார் சிறையில் அடைக்க உத்தரவு பிறப்பித்துள்ளது சிறப்பு நீதிமன்றம்!

அமலாக்கத்துறை விசாரணைக்குச் செல்வதாக ப.சிதம்பரம் கூறிய நிலையில் சிறைக்கு அனுப்ப சி.பி.ஐ. சிறப்பு நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது.

மேலும், ப.சிதம்பரம்த்தை, வரும் செப்டம்பர் 19 ஆம் தேதி வரை நீதிமன்றக் காவலில், சிறையில் வைக்க நீதிபதி உத்தரவு பிறப்பித்தார்.

சிதம்பரத்தை வரவேற்கத் தயாராகிறது திஹார் சிறை…..

திஹார் சிறையில் உள்ள பொருளாதாரக் குற்றங்கள் செய்தவர்களுக்கான வளாகத்தில் சிறை எண் 7ல் சிதம்பரம் அடைக்கப்படுவார் எனத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த 7ஆம் எண் சிறை மிகவும் பாதுகாப்பானது என்கிறார்கள்.

இரு அடுக்கு பாதுகாப்புடன், மிகச் சிறிய அறைகளைக் கொண்டிருக்கும் இந்த வளாகத்தில் பொருளாதாரக் குற்றவாளிகள் மட்டுமல்லாது, பெண்களுக்கு எதிரான குற்றம் செய்தவர்கள், பாலியல் பலாத்கார குற்றவாளிகள் ஆகியோரும் அடைக்கப் படுவார்கள்.

சிறை விதிப்படி நீதிமன்றக் காவலில் வருவோரும்கூட தரையில்தான் உறங்க வேண்டும். ஆனால், ப.சிதம்பரம் ஒரு மூத்த குடிமகன், முன்னாள் நிதியமைச்சர் மற்றும் எம்.பி. என்பதால் மெத்தை இல்லாமல், மரக்கட்டில் மட்டும் வழங்கப்படும். சிறையில் தயார் செய்யப்பட்டஉணவுகளைத்தான் ப.சிதம்பரம் உண்ண வேண்டும். மதிய உணவு, இரவு உணவுடன் பருப்பு, ஒரு காய், 4 முதல் 5 சப்பாத்திகள் ஆகியன வழங்கப்படும்.

ALSO READ:  ஆடிப்பெருக்கை முன்னிட்டு சிவகாசியில் காலண்டர் ஆல்பம் வெளியீடு!

ஒரு வேளை ப.சிதம்பரம் தென்னிந்திய உணவுகள் வழங்க வேண்டும், சிறை உணவு பிடிக்கவில்லை என்று கோரினால், ஏற்பாடு செய்வர். சிறை கேண்டீனில் இருந்து தயார் செய்யப்பட்ட நொறுக்குத் தீனிகளை வரவழைத்து அவர் சாப்பிடலாம். நீதிமன்ற அனுமதி பெற்று வேறு உணவுகளையும் வரவழைத்து சாப்பிடவும் சிதம்பரத்துக்கு அனுமதி உண்டு.

நீதிமன்றக் காவலில் இருக்கும்போது ப.சிதம்பரத்துக்கு தேவையான உடைகளை அவர் குடும்பத்தினர் அளிக்கலாம். அதை அணிந்து கொள்ளவும் அவருக்கு அனுமதி வழங்கப்படும்.

முன்னாள் உள்துறை அமைச்சரான ப.சிதம்பரத்துக்கு, பயங்கரவாதிகளால் அச்சுறுத்தல் இருக்கிறது என்று உளவுத்துறை தெரிவித்திருப்பதாலும், சிறையிலும் அந்த அச்சுறுத்தல்கள் தொடர்வதாக இருக்கும் பட்சத்தில் அவர் சிறை எண்-1க்கு மாற்றப்படுவார். அங்கே கடந்த 30 ஆண்டுகளாக தமிழகத்தின் சிறப்பு போலீ்ஸ் பிரிவு பாதுகாப்பு அளித்து வருகிறது.

திஹார் சிறையின் 1-ஆம் வளாகத்தில் உள்ள சிறையில்தான் 2ஜி அலைக்கற்றை ஊழல் குற்றவாளியான சஹாரா நிறுவனத்தின் சுபத்ரா ராய், காமென்வெல்த் அமைப்பின் முன்னாள் தலைவர் சுரேஷ் கல்மாதி ஆகியோர் அடைக்கப்பட்டு இருந்தனர்.

ALSO READ:  BRICS: ரஷ்ய அதிபர் புடினுக்கு மோடி அளித்த தமிழர் ‘நிர்வாகப் பொக்கிஷ’ பரிசு!

இந்தச் சிறையில் சமையல் அறையும், வெஸ்டர்ன் டாய்லட்டும் உண்டு. சிறையில் வழங்கப்படும் அதே உணவுகள்தான் இங்கும் வழங்கப்படும்!

Related articles

Recent articles

spot_img