
பிஷப் பிராங்கோவுக்கு எதிரான பாலியல் புகார் தெரிவித்த கன்யாஸ்திரிக்கு ஆதரவாக போராட்டம் நடத்தியதால், கன்னியாஸ்திரி லூஸி தனிமைப்படுத்தப்பட்டு வருகிறார்!
கேரளத்தில் பிஷப் பிராங்கோ முலக்கல்லுக்கு எதிரான பாலியல் புகார் மீது நடவடிக்கை கோரி போராட்டம் நடத்திய கன்னியாஸ்திரிக்கு ஆதரவு தெரிவித்த கன்னியாஸ்திரி லூசி அவர் தங்கியுள்ள மடத்தின் அறையில் தனிமைப்படுத்தப்பட்டு உள்ளார். கர்த்தரே நான் இங்கு தனிமையில் என்ற அவரது வாசகம் கேரளத்தில் மிக வேகமாக பரவி வருகிறது.
பஞ்சாப் மாநிலம் ஜலந்தரில் பிஷப்பாக இருந்த பிராங்கோ தன்னை இரண்டு ஆண்டுகளாக பாலியல் பலாத்காரம் செய்தார் என்று கன்னியாஸ்திரி ஒருவர் புகார் கூறியிருந்தார். இந்நிலையில் அவர் மீது நடவடிக்கை எடுக்க தாமதம் செய்வதாக கூறி கன்னியாஸ்திரிகள் சிலர் போராட்டம் நடத்தினர். இதையடுத்து பிராங்கோ கைது செய்யப்பட்டார்~

இந்தப் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து கன்னியாஸ்திரி லூசி என்பவரும் போராட்டத்தில் கலந்து கொண்டார். ஆனால் இந்த நிகழ்வுக்குப் பின்னர், அவர் தங்கியுள்ள சர்ச் விடுதியில் பிரச்னைகள் பலவற்றை அவர் சந்தித்து வருகிறார்! இதுகுறித்து அவர் கூறியபோது, என் 18 வயதில் கன்னியாஸ்திரியாக வாழ்க்கையை அர்ப்பணித்தேன். 34 ஆண்டுகள் கடந்துவிட்டன. வாழ்க்கையின் பெரும்பகுதியை பொதுச் சேவைக்காக அர்ப்பணித்து விட்டேன்.
என் உடல் நிலையை காரணம் காட்டி சுடிதார் அணிய கோரிக்கை வைத்தபோது அதை நிராகரித்தனர். கேரளத்தில் மட்டும் தான் வஸ்திரம் கட்டாயப் படுத்தப் படுகிறது. பிஷப் பிராங்கோ போன்றவர்கள் அந்த வஸ்திரத்துக்கு என்ன மரியாதை கொடுக்கின்றனர்?

அவரால் பாதிக்கப்பட்ட கன்னியாஸ்திரி நியாயம் கிடைக்க வேண்டும் என்பதற்காகத்தான் போராட்டத்தில் பேசினேன். ஆனால், அதன்பிறகு சக கன்னியாஸ்திரிகள் என்னை புறக்கணித்தனர். அவ்வளவு ஏன் எனது நெருங்கிய தோழிகள் கூட என்னுடன் பேசுவதில்லை.
என் அறையை சுற்றி கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. டிவி பழுது உள்ளது சமையலறையில் என் உதவியாளர் திரும்பப் பெறப்பட்டு உள்ளார். ஒருவேளை உணவை மட்டும் வேறு வழியில்லாமல் நான் சாப்பிடுகிறேன்.
ஆகஸ்ட் 7ஆம் தேதி என்னை மடத்திலிருந்து நீக்கியதாக எனக்கு கடிதம் அனுப்பப்பட்டது; என்னை வெளியேற்ற முயற்சி நடக்கிறது! கர்த்தரே நான் இங்கு தனிமைப்படுத்த படுகிறேன்!
என் மரணத்துக்கு பின் உடலை மருத்துவ கல்லூரிக்கு தானம் செய்து விட்டேன் எல்லாவற்றையும் கர்த்தர் பார்த்துக்கொள்வார் … என்றார்.



