
5 கிலோக்கும் குறைவான உடல் எடையுடன் இருந்த 5 மாதக் குழந்தைக்கு கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சை செய்து மும்பையைச் சேர்ந்த மருத்துவர்கள் சாதனை படைத்துள்ளனர்.
இந்த அறுவை சிகிச்சை கடந்த ஜூன் மாதம் நடைபெற்று வெற்றிகரமாக முடிந்தது. அறுவை சிகிச்சைக்குப் பின் குழந்தை பூரண நலம் அடைந்து உடல் நலம் தேறி வருகிறது. இதனைப் பற்றிய தகவல்கள் வெளியிடப்பட்டுள்ளது.
சூரத்தைச் சேர்ந்த சுசித்ரா – க்ருனல் வால்வியின் மகள் இப்ஸா. பிறக்கும் போதே மஞ்சள் காமாலையுடன் பிறந்த குழந்தை. வழக்கமான சிகிச்சைகளால் மஞ்சள் காமாலை குணம் அடையவில்லை. இதனால் அடுத்து மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டது, அவருக்கு பிலியரி அட்ரெஸியா எனப்படும் குறைபாடு இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
20 ஆயிரம் குழந்தைகளில் ஒருவருக்கு இந்த குறைபாடு இருக்கும். இதானது, கல்லீரல் முழுமையாக வளர்ச்சியடையாத நிலை ஆகும். இதற்கு அறுவை சிகிச்சை மூலம் சிகிச்சை அளிக்க வேண்டும். ஆனால், தாமதித்தால் பிரச்னை ஆபத்தில்விடும் என்பதால், உடனடியாக அறுவை சிகிச்சை மேற்கொள்ள முடிவு எடுக்கப்பட்டது.
5 மாதக் குழந்தையாக இருக்கும் போது இந்த நோய் கண்டறியப்பட்டதால் கல்லீரல் மாற்று மட்டுமே ஒரே தீர்வு என்று குளோபல் மருத்துவமனை மருத்துவர் அனுராக் ஷ்ரிமால் தெரிவித்தார்.
சுசித்ராவின் தங்கை க்ருபாலியின் கல்லீரலின் ஒரு பகுதியை எடுத்து இப்ஸாவுக்கு பொறுத்தியுள்ளனர். பூரண குணம் அடைந்து வீடு திரும்பிய இப்ஸாவுக்கு மஞ்சள் காமாலையும் குணமடைந்து வருவதாகவும், தற்போது அவர் நன்கு விளையாடி மகிழ்ச்சியாக இருப்பதாகவும் இப்ஸாவின் தாய் சுசித்ரா தெரிவித்தார். இந்த அறுவை சிகிச்சைக்காக ரூ.16 லட்சம் செலவானதாகவும் அவர் கூறினார்.