கும்மிடிப்பூண்டி அருகே கரை கடக்கிறது வர்தா புயல்: சென்னையில் பலத்த மழை

சென்னை:

வர்தா புயல் பழவேற்காடு – கும்மிடிப்பூண்டி இடையே இன்று கரையை கடக்கிறது. சென்னையில் பலத்த மழை பெய்து வருகிறது.

தென்கிழக்கு வங்கக் கடலில் கடந்த 7-ஆம் தேதி உருவான காற்றழுத்த தாழ்வு பகுதி வலுப்பெற்று தாழ்வு மண்டலமாக மாறியது. பின்னர் அது புயலாக உருவானது. ‘வர்தா’ என்று பெயரிடப்பட்ட இந்தப் புயல் மேலும் வலுப்பெற்று அதிதீவிர புயலாக மாறியது.

இந்நிலையில் வர்தா புயல் சென்னைக்கு கிழக்கே 50 கிலோ மீட்டர் தொலைவில் மையம் கொண்டுள்ளது. தற்போது சென்னையை நோக்கி மிக வேகமாக நகர்ந்து வருகிறது. கரையை நோக்கி நகர்ந்து வருவதால் சென்னையை புயல் தாக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

இந்தப் புயல் பழவேற்காடு – கும்மிடிப்பூண்டி இடையே இன்று பிற்பகல் கரையைக் கடக்கிறது. புயல் கரையைக் கடக்கும் போது கனமழை பெய்யும் என எச்சரிக்கப்பட்டு உள்ளது. சென்னையில் 67 கி.மீ. வேகத்தில் காற்று வீசத் தொடங்கிவிட்டது. புயல் கரையைக் கடக்கும் போது 120 கி.மீ. வேகத்தில் காற்று வீசும் என்று எச்சரிக்கப்பட்டுள்ளது.

திருவள்ளூர் பழவேற்காடு சுற்றியுள்ள பகுதியில் உள்ள மக்கள் வெளியேற்றப்பட்டு வருகின்றனர். அங்கு பலத்த காற்று வீசி வருகிறது. தாழ்வான பகுதிகளில் வசிக்கும் மக்கள் பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டு வருகின்றனர். பலத்த காற்று வீசுவதால் மின்கம்பங்கள் மரங்கள் சாய்ந்து உள்ளன.

சென்னை நகருக்குள்ளும் பலத்த காற்றுவீசியது. காலை நேரம் வீசிய காற்றில் பல இடங்களில் மரங்களின் கிளைகள் முறிந்து விழுந்தன. சாலையில் இலைகள்,சருகுகள், மரங்களில் குச்சிகள் பரவலாக விழுந்து கிடந்தன.

பல இடங்களில் மழை நீர் தேங்கியுள்ளது. இதனால் வாகனங்கள் ஊர்ந்து சென்றன. இன்று பெரும்பாலான அலுவலகங்களுக்கு பணியாளர்கள் செல்லாததால், பேருந்து, புறநகர் ரயில்களில் பயணிகள் கூட்டம் இன்றி வெறிச்சோடிக் கிடந்தன. பெரும்பாலான கடைகள், வணிக வளாகங்களும் அடைக்கப்பட்டுள்ளன.