மதம், ஜாதிகளின் அடிப்படையில் வாக்கு சேகரிப்பது சட்டவிரோதம்: உச்ச நீதிமன்றம் அதிரடி உத்தரவு

புது தில்லி:
மதம், ஜாதிகளின் அடிப்படையில் வாக்கு சேகரிப்பது சட்டவிரோதமானது என்று உச்ச நீதிமன்றம் அதிரடியாகத் தீர்ப்பளித்து உள்ளது.

நாட்டில் அரசியல் முக்கியத்துவம் வாய்ந்த உத்தரபிரதேசம் உள்பட 5 மாநிலங்களில் சட்டப்பேரவைத் தேர்தல்கள் நடைபெற உள்ளநிலையில் உச்ச நீதிமன்றம், மதங்கள், ஜாதிகள் பெயரில் வாக்குகள் சேகரிப்பது சட்டவிரோதமானது என்று கூறியுள்ளது.

மராட்டிய சட்டசபை தேர்தலில் போட்டியிட்ட மனோகர் ஜோஷி இந்துத்துவா கொள்கையை அடிப்படையாக வைத்து பிரசாரம் மேற்கொண்டதாகவும், எனவே அவரது வெற்றி செல்லாது என அறிவிக்குமாறும் என்.பி.பாட்டீல் என்பவர் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து இருந்தார்.

இந்த வழக்கை கடந்த 1995–ம் ஆண்டு விசாரித்த 3 நீதிபதிகளை கொண்ட அமர்வு, இந்துத்துவா அல்லது இந்து மதம் என்பது துணைக்கண்ட மக்களின் வாழ்க்கை முறை என்றும், அது ஒரு மனநிலை எனவும் தீர்ப்பளித்தது. இவற்றின் அடிப்படையில் வாக்குகளை சேகரிப்பது எந்த ஒரு வேட்பாளரையும் பாதிக்காது எனவும் நீதிபதிகள் தங்கள் தீர்ப்பில் கூறியிருந்தனர்.

நீதிபதி ஜே.எஸ்.வர்மா தலைமையிலான அமர்வின் இந்தத் தீர்ப்பை எதிர்த்து, உச்ச நீதிமன்றத்தில் சீராய்வு மனு தாக்கல் செய்யப்பட்டது. கடந்த 20 ஆண்டுகளுக்கும் மேலாக கிடப்பில் போடப்பட்டுள்ள இந்த வழக்கை 7 நீதிபதிகள் கொண்ட அமர்வு விசாரிக்கும் என கடந்த பிப்ரவரி மாதம் உச்ச நீதிமன்றம் அறிவித்தது. அதன்படி இந்த வழக்கை தலைமை நீதிபதி டி.எஸ்.தாக்குர் தலைமையில் 7 நீதிபதிகளை கொண்ட அமர்வு விசாரணைக்கு எடுத்துக் கொண்டது.

உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி டி.எஸ்.தாக்கூர் தலைமையில் நீதிபதிகள் லோகூர், பாப்டே, கோயல், லலித், சந்திராசூட், நகேஸ்வர ராவ் ஆகியோர் அடங்கி அமர்வு விசாரணையை தொடங்கியது.

இந்த விவகாரம் தொடர்பாக பல்வேறு தரப்பில் இருந்து தாக்கல் செய்யப்பட்ட மனுக்களும் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது. அதன் பேரிலான பதில்களும் பெறப்பட்டது. வழக்குகள் விசாரணையில் தீர்ப்பளித்த 7 நீதிபதிகள் கொண்ட அமர்வு, மதங்கள், ஜாதிகளின் அடிப்படையில் வாக்கு சேகரிப்பது சட்டவிரோதமானது என்று கூறியது.

நாட்டில் தேர்தல் நடைபெறுவது மதசார்பற்ற நடைமுறையாகும். இது தொடர்ந்து பின்பற்றப்பட வேண்டும். ஒரு நபர் மற்றும் இறைவன் இடையே உள்ள உறவானது தனிப்பட்ட தேர்வாகும்; இதுபோன்ற நடவடிக்கைகளில் அரசு தலையிடுவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது என்று நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.