
ஹைதராபாத் ராஜ்பவனில் விமரிசையாக தீபாவளி பண்டிகை கொண்டாடப்பட்டது. ராஜ் பவனில் உள்ள ‘பிரஜா தர்பாரில்’ அரங்கில் பொதுமக்களோடு சேர்ந்து ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் தம்பதி தீபாவளி கொண்டாடினர்.
மீட் அண்ட் கிரீட் நிகழ்ச்சியில் அலுவலக பணியாளர்களுக்கும் அவர்களின் குடும்பத்தினருக்கும் குழந்தைகளுக்கும் ஆளுனர் தமிழிசை இனிப்புகள் வழங்கி வாழ்த்து தெரிவித்தார்.
ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் தெலங்காணா மாநில மக்களுக்கு தீபாவளி வாழ்த்துக்களை தெரிவித்தார். அப்போது பேசுகையில் தீபாவளி பண்டிகையை மக்கள் அனைவரும் மகிழ்ச்சியான சூழலில் கொண்டாட வேண்டும் என்று கேட்டுக்கொண்டார். தெலங்காணா மாநிலத்திற்கு தாம் ஆளுநராக வந்ததில் மிகவும் மகிழ்ச்சி அடைவதாக கூறினார்.
தெலங்காணா மாநில மக்கள் தன்னை சொந்த சகோதரியாகவே ஏற்று அன்பு செலுத்துவதாக தெரிவித்தார். ராஜ்பவனில் பிளாஸ்டிக் தடை செய்வதோடு எப்போதும் பசுமையாக வைத்திருக்கும்படி தீர்மானித்திருப்பதாக கூறினார். அதனால் ராஜ்பவனில் பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடை விதித்து இருப்பதாக தெரிவித்தார் .
மாநில அரசு ஒவ்வொரு தொகுதியிலும் தாழ்த்தப்பட்ட மக்களுக்கான “கிரிஜன ஆசிரம பாடசாலை”களை ஏற்பாடு செய்து இருப்பது பாராட்டுக்குரியது என்றார்.
தெலுங்கு தேசம் கட்சித் தலைவர் எல் ரமணா, ராவுல சந்திரசேகர் ரெட்டி, பிசி கமிஷன் சேர்மன் ராமுலு முதலானோர் ஆளுநர் தம்பதிகளை சந்தித்து அவர்களுக்கு தீபாவளி வாழ்த்துக்களை தெரிவித்தனர்.
அப்போது சாலை போக்குவரத்து கழக தொழிலாளர்களின் வேலை நிறுத்தம் பற்றி ஆளுநரிடம் விண்ணப்பக் கடிதம் அளித்தனர். அது பற்றி அரசாங்கமே பார்த்துக் கொள்ளும் என்று நம்பிக்கை தெரிவித்தார் தமிழிசை சௌந்தர்ராஜன்.