ஸ்ரீநகர்: ஜம்மு காஷ்மீர் மாநிலம் ஸ்ரீநகரில் கன மழை விடாது பெய்து வருகிறது. இன்னும் ஒரு வாரத்துக்கு கன மழை இருக்கும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்நிலையில், ஜீலம் நதியில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது. அபாய அளவைக் கடந்து வெள்ள நீர் ஓடுவதால், கடந்த ஆண்டு ஏற்பட்ட சேதம் போல் மீண்டும் ஏற்பட்டு விடக் கூடாது என்று பிரார்த்திப்பதாக காஷ்மீர் முன்னாள் முதல்வர் உமர் அப்துல்லா கூறியுள்ளார். ஜீலம் நதியில் வெள்ளம் அபாய கட்டத்தை தாண்டி ஓடுவதால் மக்கள் பாதுகாப்பான இடங்களுக்குச் செல்ல அரசு வெள்ள எச்சரிக்கை விடுத்துள்ளது. நேற்று சுமார் 221 குடும்பங்கள் வெள்ள இடங்களில் இருந்து மீட்கப் பட்டு, பாதுகாப்பான இடங்களுக்கு அரசால் அனுப்பி வைக்கப்பட்டனர். கடந்த செப்டம்பர் மாதம் பெய்த கனமழையால் கடும் நிலச்சரிவு ஏற்பட்டு ஜம்மு- காஷ்மீர் பேரழிவைச் சந்தித்தது. அந்த பாதிப்பில் இருந்து மீண்டு, மக்கள் இன்னும் சகஜ நிலைக்கு திரும்பவில்லை. இந்நிலையில் தற்போது மழை மிரட்டி வருகிறது. தொடர்ந்து பெய்து வரும் பலத்த மழையால் மத்திய காஷ்மீரில் உள்ள பட்கம் மாவட்டம் சான்டினார் கிராமத்தில் நிலச்சரிவு ஏற்பட்டது. இதில் 8 வீடுகள், 10 மாட்டு கொட்டகைகள் முற்றிலும் இடிந்து விழுந்தன. மேலும் 26 வீடுகள் சேதம் அடைந்தன. ஆனால் உயிர்ச்சேதம் ஏற்படவில்லை. ஸ்ரீநகரில் ராஜ்பாக் பகுதியில் தண்ணீர் தேங்கி நிற்கிறது. ஜம்மு–ஸ்ரீநகர் தேசிய நெடுஞ்சாலையில் சில இடங்களில் நிலச்சரிவு ஏற்பட்டது. இதனால் அங்கு போக்குவரத்தும் பாதிக்கப்பட்டுள்ளது. இதை அடுத்து அந்த சாலை மூடப்பட்டது. தெற்கு காஷ்மீரின் சங்காம் பகுதியிலும் ஆற்றில் நீர் அபாய கட்டத்தை தாண்டி செல்கிறது. ஆற்றில் வெள்ளப்பெருக்கு காரணமாக, கரையோரம் வசிக்கும் மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்ல அறிவுறுத்தப்பட்டுள்ளனர். திங்கள்கிழமை இன்று காலை 6 மணி நிலவரப்படி சங்காம் பகுதியில் ஜீலம் ஆற்றில் தண்ணீர் அளவு 22.4 அடி உயரத்துக்குச் சென்றது. ஸ்ரீநகரில் உள்ள ராம் முன்ஷி பாக் பகுதியில் ஜீலம் ஆற்றில் தண்ணீர் அளவு 18′.8 அடி உயரத்துக்குச் சென்றது. மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் மழை பெய்து வருவதன் காரணமாக ஆற்றில் தண்ணீர் அதிகமாக செல்கிறது. 7 மாவட்டங்களுக்கு மண்சரிவு எச்சரிக்கை விடப்பட்டு உள்ளது. ஆற்றின் கரையோரத்தில் வசிக்கும் மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்ல கேட்டுக் கொள்ளப்பட்டு உள்ளனர். வெள்ளம் தொடர்பாக பீதி அடைய தேவையில்லை என்று ஜம்மு காஷ்மீர் துணை முதல்வர் கேட்டுக் கொண்டுள்ளார். இதனிடையே தேசிய பேரிடர் மேலாண்மைக் குழு மாநிலத்துக்கு விரைந்துள்ளது. மாநிலத்தில் உள்ள பள்ளிகளுக்கு மூன்று நாட்கள் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. இதனிடையே வெள்ளம் குறித்து கருத்து தெரிவித்த காஷ்மீர் முன்னாள் முதல்வர் உமர் அப்துல்லா, கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் சந்தித்த பேரழிவுப்போல் இந்த தடவை காஷ்மீர் மக்கள் சந்திக்கக்கூடாது என்று நான் பிரார்த்திக்கிறேன். மேலும், அவ்வாறு ஏற்படாது என்று நான் நம்புகிறேன் என்று கூறியுள்ளார்.
காஷ்மீரில் வெள்ள அபாயம்: கடந்தாண்டு நிலை ஏற்படக் கூடாதென உமர் உருக்கம்
Popular Categories