
மகாராஷ்டிர அரசியலில் எதிர்பாராத திருப்பமாக, அஜித் பவார் துணை முதலமைச்சர் பதவியை ராஜினாமா செய்த கையுடன், முதலமைச்சர் பதவியை தேவேந்திர பட்நவிஸ் ராஜினாமா செய்துள்ளார்.
நாளை நம்பிக்கை வாக்கெடுப்புக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்ட நிலையில், துணை முதலமைச்சராக இருந்த அஜித்பவார் ராஜினாமா செய்தார். அதைத் தொடர்ந்து வேறு வழியின்றி தேவேந்திர பட்னவிஸும் பதவி விலகினார். இதை அடுத்து, பாஜக., மீண்டும் தமது ஆட்சியமைப்பு நிலையில் இருந்து விலகியது.
மகாராஷ்டிரத்தில் பாஜக.,வின் தேவேந்திர பட்நவிஸ் மீண்டும் முதல்வராக ஆட்சி அமைத்ததை எதிர்த்து, சிவசேனா, காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் ஆகிய 3 கட்சிகளும் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தன. இரு தரப்பு வாதங் களையும் கேட்ட நீதிமன்றம், மகாராஷ்டிர சட்டப்பேரவையில் நாளையே நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த வேண்டும் என்று உத்தரவு பிறப்பித்தது.

மேலும், இடைக்கால சபாநாயகர் தேர்வு செய்யப்பட்டு புதிய எம்எல்ஏக்களுக்கு நாளை அவர் பதவிப் பிரமாணம் செய்து வைத்த பிறகு நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த வேண்டும் என்றும், இந்த நடைமுறைகளை நாளை மாலை 5 மணிக்குள் முடிக்க வேண்டும் என்றும் நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

இந்த நம்பிக்கை வாக்கெடுப்பும் கூட, ரகசிய வாக்கெடுப்பாக நடத்தாமல், நேரலையாக ஒளிபரப்ப வேண்டும் என்றும் உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டதால், பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
நம்பிக்கை வாக்கெடுப்பு தாமதிக்கப்பட்டால் எம்எல்ஏக்கள் விலை பேசப்படுவர் என்பதால், அதைத் தடுக்க உடனடியாக நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்துவதே சிறந்த வழிமுறை என்றது நீதிமன்றம்.
ஏற்கெனவே தேசியவாத காங்கிரஸ் கட்சி தங்களது எம்.எல்.ஏ.,க்களை அணிவகுப்பு நடத்தி, ஆதரவைக் காட்டியுள்ள நிலையில், சிவசேனா, தேசியவாத காங்கிரஸ், காங்கிரஸ் ஆகிய 3 கூட்டணிக் கட்சிகளுக்கும் சேர்த்து 162 எம்எல்ஏக்கள் பலம் உள்ளது. இந்நிலையில் 105 எம்எல்ஏக்களை மட்டுமே பெற்றுள்ள பாஜக பெரும்பான்மையை நிரூபிப்பது சாத்தியமற்றது என்று கூறப் பட்டது.

இந்நிலையில், உச்ச நீதிமன்ற உத்தரவு வந்த சற்று நேரத்தில், அஜித் பவார் தனது துணை முதல்வர் பதவியிலிருந்து விலகுவதாக அறிவித்தார். இந்நிலையில், மும்பையில் செய்தியாளர்களை சந்தித்த தேவேந்திர பட்நவிஸ், தாமும் முதலமைச்சர் பதவியிலிருந்து விலகுவதாக அறிவித்தார்.
அப்போது அவர், தேசியவாத காங்கிரஸ் கட்சியின் சட்டமன்றக் குழுத் தலைவராக இருந்த அஜித் பவார், தமது ஆதரவு எம்.எல்.ஏ.,க்களின் பட்டியலுடன், ஓர் ஆதரவுக் கடிதத்தை அளித்து தங்கள் தரப்பை அணுகியதால்தான், ஆட்சி அமைக்கப் போவதில்லை என்ற தங்கள் முடிவை மாற்றிக் கொண்டு திடீரென ஆட்சி அமைத்ததாகவும், ஆனால் அஜித் பவார் திடீரென தங்களது ஆதரவைத் தொடர முடியாது என்று கூறியதாலும், தங்களுக்கு அவையில் பெரும்பான்மை பலம் இல்லை என்பதாலும் தாம் ராஜினாமா செய்வதாக தேவேந்திர பட்னாவிஸ் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.
சுழற்சி முறையில் முதலமைச்சர் பதவியை பகிர்ந்து கொள்வதாக சிவசேனாவுக்கு வாக்குறுதி அளிக்க வில்லை என்று தேவேந்திர பட்னாவிஸ் விளக்கம் கூறினார். மேலும், சிவசேனா கட்சியினர் தான் பேரம் பேசுவதில் தீவிரமாக ஈடுபட்டனர் என்று அவர் குற்றச்சாட்டு தெரிவித்தார்.
மூன்று நாட்கள் 8 மணி நேரம் தேவேந்திர பட்னாவிஸ் மகாராஷ்டிரா முதல் அமைச்சராக இருந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது
இதன் பின்னர் ஆளுநர் மாளிகைக்குச் சென்ற பட்நவிஸ், ஆளுநர் பகத்சிங் கோஷ்யாரியை சந்தித்து தமது ராஜினாமா கடிதத்தை அளித்தார். அவ்வகையில் தேவேந்திர பட்நவிஸ், இரண்டாவது முறையாக முதலமைச்சராகப் பதவியேற்று 4 நாட்களில் ராஜினாமா செய்துள்ளார்.



