169 பேர் ஆதரவுடன் சிவசேனா கூட்டணி நம்பிக்கை வாக்கெடுப்பில் வெற்றி!

இந்தியா சற்றுமுன்
sivasena - 2026

மகாராஷ்டிர சட்டப்பேரவையில் நடைபெற்ற நம்பிக்கை வாக்கெடுப்பில் 169 எம்எல்ஏ.,க்கள் ஆதரவுடன் சிவசேனா கூட்டணி அரசு வெற்றி பெற்றது.

மகாராஷ்டிராவில் சிவசேனா-காங்கிரஸ்-தேசியவாத காங்கிரஸ் கூட்டணி ஆட்சிப் பொறுப்பு ஏற்றுள்ளது. இன்று நம்பிக்கை வாக்கெடுப்புக்காக மகாராஷ்டிரா சட்டப்பேரவை, இடைக்கால சபாநாயகர் திலிப் பாட்டில் தலைமையில் இன்று கூடியது.

இந்தக் கூட்டம், வந்தேமாதரம் இல்லாமல் தொடங்கியிருப்பதாகவும், இது விதி மீறல் என்றும் எதிர்க்கட்சி தலைவர் தேவேந்திர பட்னாவிஸ் குற்றம் சாட்டினார்.

முதலமைச்சர் மற்றும் அமைச்சர்கள் பதவிப் பிரமாணம், விதிகளின்படி நடைபெறவில்லை; சபாநாயகரை தேர்ந்தெடுக்காமல் நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்தக்கூடாது என்று எதிர்ப்பு தெரிவித்தார் தேவேந்திர பட்நாவிஸ். இதனால் அவையில் அமளி ஏற்பட்டது.

பட்னாவிஸ் கூறிய குற்றச்சாட்டுகளை இடைக்கால சபாநாயகர் ஏற்றுக் கொள்ளவில்லை. உச்ச நீதிமன்ற உத்தரவுப்படியே நம்பிக்கை வாக்கெடுப்பு நடைபெறுவதாக அவர் கூறினார்.

இதை அடுத்து சட்டப்பேரவையில் இருந்து பாஜக வெளிநடப்பு செய்தது. பின்னர் நடைபெற்ற வாக்கெடுப்பில், 169 எம்எல்ஏக்கள் ஆதரவுடன் நம்பிக்கை கோரும் தீர்மானம் வெற்றிபெற்றதாக சபாநாயகர் அறிவித்தார்.

288 எம்எல்ஏக்களை கொண்ட மகாராஷ்டிர சட்டப்பேரவையில் ஆளும் கூட்டணிக்கு 154 எம்எல்ஏக்கள் உள்ளனர். இதுதவிர சில சிறிய கட்சிகள் மற்றும் சுயேச்சைகள் நம்பிக்கை கோரும் தீர்மானத்திற்கு ஆதரவாக வாக்களித்துள்ளனர்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.