
காங்கிரஸ் தலைவர் அசாருதீன் வீட்டு விருந்துக்கு கே சந்திரசேகரராவ் சென்றார். பெரும் பரபரப்பான செய்தியாக இது பகிரப் பட்டது.
தெலங்காணா முதல்வர் கேசிஆர் மற்றுமொரு முக்கிய முடிவு எடுத்துள்ளதாகத் தெரிகிறது. அரசியலுக்கு அப்பாற்பட்டு காங்கிரஸ் கட்சியின் முக்கிய தலைவர் வீட்டு விருந்தில் டிஆர்எஸ் கட்சித் தலைவர் பங்கேற்கப் போகிறாராம்.
பிரபல விளையாட்டு வீரரும் காங்கிரஸ் சீனியர் தலைவருமான அசாருதீன் தான் அந்த ‘கை’க் கட்சியின் தலைவர். அவருடைய மகன் அஸதுத்தீனுக்கும் பிரபல டென்னிஸ் நட்சத்திரம் சானியா மிர்சாவின் சகோதரி ஆனம் மிர்சாவுக்கும் திருமணம்.
இன்று (12ஆம் தேதி) அசதுத்தீன் – ஆனம் திருமண விருந்து நடக்க உள்ளது. இதற்கு அழைப்பதற்காக அசாருத்தீனும் சானியாமிர்சாவும் ஹைதராபாத் பிரகதி பவனில் முதல்வர் கேசிஆர் ஐ சந்தித்தார்கள். விருந்தில் பங்கு கொண்டு புதுமண தம்பதிகளை ஆசீர்வதிக்க வேண்டும் என்று கோரினார்கள்.
ஹைதராபாத்தைச் சேர்ந்த பிசினஸ்மேன் அக்பர் ரஷீது என்பவரை முதல் மணம் செய்து கொண்ட ஆனம்மிர்சா அவரை விவாகரத்து செய்து விட்டு அசாருத்தீனின் மகன் அசதுத்தீனை மணம் செய்து கொள்ள உள்ளார். கடந்த சில காலமாக அசதுத்தீனும் ஆனமும் காதலில் உள்ளதாக செய்திகள் வெளிவந்தன .
அந்த காதலை இரு வீட்டுப் பெரியோர் அங்கீகரித்து சமீபத்தில் நிச்சயதார்த்தம் விமரிசையாக நடந்தேறியது. காங்கிரஸ் கட்சியில் உள்ள அசாருத்தீன் அண்மையில் டிஆர்எஸ் உதவியோடு ஹைதராபாத் கிரிக்கெட் அசோசியேஷன் தலைவராக வெற்றி பெற்றார்.
மறுபுறம் சானியா மிர்சாவை தெலங்காணா மாநில பிராண்ட் அம்பாசிடராக முதல்வர் கேசிஆர் நியமித்தார். இந்த நிலையில் இவ்விரு முக்கிய பிரமுகர் இல்லங்கள் இடையே நிச்சயமான திருமண விருந்துக்கு கேசிஆர் செல்லவிருப்பதாக செய்தி.



