பயங்கரவாதத்துக்கு எதிராக புதிய சட்டம்: குஜராத் சட்டசபையில் நிறைவேற்றம்

ஆமதாபாத்: குஜராத் மாநிலத்தில் பயங்கரவாதம் மற்றும் திட்டமிட்டு செயல்படுத்தப்படும் கொடுங் குற்றங்களை எதிர்கொள்ளும் வகையில் புதிய சட்டம் இன்று நிறைவேற்றப்பட்டது.

  • குஜராத் சட்டசபையில் நிறைவேற்றப்பட்ட இந்தப் புதிய சட்டத்தின்படி, சந்தேகத்துக்குரிய நபர்களின் டெலிபோன் மற்றும் செல்போன் பேச்சுகளை மாநில அரசு அதிகாரிகள் இடைமறித்து ஒட்டுக் கேட்கலாம்.
  • கொடுங்குற்ற சம்பவங்கள் தொடர்பாக கைது செய்யப்படும் நபர்களிடம் போலீசார் விசாரிக்கும் காலத்தை நீட்டிக்கலாம்.

  • போலீஸ் உயரதிகாரிகளிடம் பிடிபடும் நபர்கள் அளிக்கும் வாக்குமூலங்களை கோர்ட் வழக்குகளில் சாட்சியங்களாக பயன்படுத்தலாம் .

முன்னதாக, கடந்த 2004 மற்றும் 2009-ம் ஆண்டுகளில் இந்த சட்ட முன்வரைவு அந்நாள் குடியரசுத் தலைவர்கள் அப்துல் கலாம் மற்றும் பிரதிபா பாட்டீல் ஆகியோரிடம் அனுப்பி வைக்கப்பட்ட வேளைகளில் அவர்கள் இருவரும் இதற்கு ஒப்புதல் அளிக்க மறுத்திருந்தனர். இந்நிலையில், குஜராத்தை மையமாக வைத்து பாகிஸ்தான் பயங்கரவாதிகள் பயங்கரவாத செயல்களில் ஈடுபட்டு வருவதால் இந்த சட்டம் மிகவும் அவசியமாகும் என கருதிய ஆனந்தி பென் தலைமையிலான குஜராத் மாநில அரசு இன்று இந்தப் புதிய சட்டத்தை அம்மாநில சட்டசபையில் நிறைவேற்றியுள்ளது. ஆனால் இதனை அரசியல் ஆதாயத்துக்காகவே இதை அரசு சட்டமாக நிறைவேற்றியுள்ளது என காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டியுள்ளன.