மேகதாது அணை விவகாரத்தில் கர்நாடகம் அனுமதி கோரவில்லை: மத்திய அமைச்சர்

  prakash-javadekar புது தில்லி: கர்நாடக மாநிலம் காவிரி நதியின் குறுக்கே மேகதாது பகுதியில் புதிய அணை கட்டுவது தொடர்பாக மத்திய அரசிடம் கர்நாடக அரசு இதுவரை அனுமதி எதுவும் கோரவில்லை என்று மத்திய சுற்றுச்சூழல், மற்றும் வனத் துறை இணை அமைச்சர் பிரகாஷ் ஜாவ்டேகர் தெரிவித்தார். தில்லியில் நடைபெறவுள்ள சுற்றுச்சூழல் அமைச்சர்கள் மாநாடு தொடர்பாக மத்திய இணை அமைச்சர் பிரகாஷ் ஜாவ்டேகர் தில்லியில் செய்தியாளர்களுக்கு செவ்வாய்க்கிழமை பேட்டி அளித்தார். அப்போது… மேகதாதுவில் அணை கட்டும் கர்நாடக அரசின் முயற்சி குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு அவர் பதிலளித்த போது: “காவிரியின் குறுக்கே மேகதாதுவில் கர்நாடக அரசு அணை கட்டுவது தொடர்பாக சுற்றுச்சூழல் அமைச்சகத்திற்கு அனுமதி கோரி எதுவும் வரவில்லை. பொதுவாக அணை கட்டுவது தொடர்பாக முன்மொழிவு வந்தால், அதற்காக உயர்நிலை ஆய்வுக் குழு அமைக்கப்பட்டு, தொடர்புடைய பகுதிக்கு அனுப்பி வைக்கப்படும். அக்குழு அணை கட்ட முன்மொழியப்பட்ட இடம் வனப் பகுதியில் உள்ளதா? அணையால் சுற்றுப்புறச் சூழல், வன விலங்குகளின் வாழிடம் பாதிக்குமா? என்பது பற்றியெல்லாம் ஆய்வு செய்து அறிக்கை தாக்கல் செய்யும். அதன் பிறகு அனுமதி வழங்கலாமா? என்பது பற்றி சுற்றுச்சூழல் துறை முடிவு எடுக்கும்’ என்றார். கர்நாடக மாநிலம், ராமநகரம் மாவட்டம், கனகபுரா வட்டத்தில் உள்ள மேகதாது பகுதியில் இரு அணைகள் கட்டுவதற்கு கர்நாடகம் திட்டமிட்டுள்ளது. இதற்கான விரிவான திட்ட அறிக்கையைத் தயாரிப்பதற்காக ரூ.25 கோடி நிதியையும் கர்நாடக அரசு ஒதுக்கீடு செய்துள்ளது. இந்த அணைகள் கட்டப்பட்டால் தமிழகத்தின் குடிநீர், விவசாய பாசன ஆதாரம் கடுமையாகப் பாதிக்கப்படும் எனக் கூறி, தமிழகத்தின் அனைத்துக் கட்சிகளும் இத்திட்டத்திற்கு எதிர்ப்புத் தெரிவித்து வருகின்றன.