போராட்டம் போதும்; நாட்டின் வளர்ச்சிக்கு உதவுங்கள்: காஷ்மீர் இளைஞர்களுக்கு மோடி அறைகூவல்
உதம்பூர்: ”போராட்டத்தில் ஈடுபடும் ஜம்மு – காஷ்மீர் இளைஞர்கள் கற்களை வீசித் தாக்குதல் நடத்துவதை நிறுத்தி கொள்ள வேண்டும். கற்கள் மூலம் வளர்ச்சிக்கு தேவையான கட்டமைப்பை உருவாக்க முன் வாருங்கள்” என, பிரதமர் நரேந்திர மோடி அறிவுறுத்தினார்.
ஜம்மு – காஷ்மீர் மாநிலத்தில், ஜம்மு – ஸ்ரீநகரை இணைக்கும் வகையில் அமைக்கப்பட்டுள்ள, நாட்டிலேயே முதலாவது மற்றும் ஆசியாவிலேயே மிக நீளமான செனானி – நாசரி சுரங்க சாலையை, பிரதமர் நரேந்திர மோடி, ஞாயிற்றுக்கிழமை நேற்று நாட்டுக்கு அர்ப்பணித்தார்.
அதன் பின்னர், அந்தச் சாலையில் பயணம் செய்த அவர் உதம்பூரில் நடந்த நிகழ்ச்சியில் பங்கேற்றுப் பேசினார். அப்போது,
கடந்த 40 ஆண்டுகளாக, இந்த மாநிலத்தில் பலர் ரத்தம் சிந்தியுள்ளனர். அதனால் யாருக்கும் எந்தப் பலனும் ஏற்படவில்லை. அந்த நேரத்தில் சுற்றுலா வளர்ச்சியில் ஈடுபட்டிருந்தால், உலகின் மிகச் சிறந்த சுற்றுலா மையமாக ஜம்மு – காஷ்மீர் உருவாகியிருக்கும். நாட்டின் மற்றும் ஜம்மு – காஷ்மீரின் பொருளாதார வளர்ச்சியை மேம்படுத்தும் வகையில், சர்வதேச தரத்துடன் இந்த சுரங்க சாலை அமைக்கப்பட்டுள்ளது. வளர்ச்சிக்கான இந்த திட்டப் பணியில் ஈடுபட்ட காஷ்மீர் இளைஞர்களைப் பாராட்டுகிறேன்.
ஒரு பக்கம் இளைஞர்கள் கற்களால் வளர்ச்சிப் பணியில் ஈடுபடும் அதே நேரத்தில் சில அப்பாவி இளைஞர்கள், சிலரின் தவறான துாண்டுதலால், கற்களை வீசித் தாக்குதல் நடத்தி வருகின்றனர். தங்கள் நாட்டு மக்களைக் காப்பாற்ற முடியாதவர்களின் தவறான துாண்டுதலில், காஷ்மீர் இளைஞர்கள் தங்கள் எதிர்காலத்தை வீணடிக்க வேண்டாம். கற்களை வீசித் தாக்குதல் நடத்துவதை நிறுத்தி, மாநிலத்தின், நாட்டின் வளர்ச்சியில் பங்கு பெற வேண்டும். இளைஞர்களின் பங்களிப்பு இல்லாமல் வளர்ச்சியைக் காண முடியாது.
‘காஷ்மீரம், ஜனநாயகம், மனித நேயம்’ ஆகியவை ஒன்றுக்கு ஒன்றுக்கு இணைந்ததாக இருக்க வேண்டும் என முன்னாள் பிரதமர் வாஜ்பாய் கூறியுள்ளார். அந்த கோஷத்தின்படி, மாநிலத்தின் வளர்ச்சி என்ற ஒரே குறிக்கோளுடன் நாம் அனைவரும் இணைந்து செயல்பட வேண்டும். வளர்ச்சியின் மூலமே, சிறந்த எதிர்காலத்தை உருவாக்க முடியும். இந்த சுரங்க சாலை, மாநிலத்தின் தலையெழுத்தை நிர்ணயிக்கக் கூடியதாக உள்ளது. அதாவது, இதுவரை தங்கள் பொருட்களை வெளியே கொண்டு செல்ல முடியாமல் தவித்து வந்த ஜம்மு – காஷ்மீர் விவசாயிகளின் வாழ்வாதாரத்தை, இந்த சுரங்க சாலை உயர்த்த உள்ளது.
இது வெறும் ஒரு வளர்ச்சி திட்டம் மட்டுமல்ல. இது ஒரு துவக்கத்தின் ஆரம்பம்தான். ஜம்மு – காஷ்மீர் மாநிலத்தில், மேலும், ஒன்பது சுரங்க சாலைகள் அமைக்க திட்டமிட்டுள்ளோம்… என்று பேசினார் மோடி.
இந்த விழாவில், மாநில ஆளுநர் என்.என்.வோரா, முதல்வரும், மக்கள் ஜனநாயகக் கட்சித் தலைவருமான மெஹபூபா முப்தி, மத்திய அமைச்சர்கள் நிதின் கட்கரி, ஜிதேந்திர சிங் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.




