மும்பை,
பாரத ஸ்டேட் வங்கி(எஸ்.பி.ஐ) யுடன் அதனுடன் தொடர்புடைய ஐந்து துணை வங்கிகளான ஸ்டேட் பேங்க் ஆஃப் பிகானீர் &ஜெய்ப்பூர் (எஸ்.பி.பி.ஜே.), ஸ்டேட் பேங்க் ஆஃப் மைசூர் (எஸ்.பி.எம்.) மற்றும் ஸ்டேட் பேங்க் ஆஃப் திருவாங்கூர் (எஸ்.பி.டி.) மற்றும் கூடுதலாக பாரதீய மஹிலா பங்க்(பி.எம்.பி) ஆகிய வங்கிகள் ஏப்ரல் 1 ஆம் தேதி இணைக்கப்பட்டன.
இந்த நிலையில், பாரத ஸ்டேட் வங்கியின் தலைவர் அருந்ததி பட்டாச்சார்யா செய்தியாளர்களுக்கு பேட்டி அளிக்கையில், துணை வங்கிகளில் பணியாற்றிய ஊழியர்களில் 2,800பேர் வி.ஆர்.எஸ் பெற முடிவு செய்துள்ளனர் என்று தெரிவித்தார். இது குறித்து அவர் மேலும் கூறுகையில், ஊழியர்கள் ஏப்ரல் 5- ஆம் தேதி வரை வி.ஆர்.எஸ் பெறுவதற்கான முடிவு எடுக்க கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.
ஐந்து துணை வங்கிகளில் பணியாற்றிய 12,500 ஊழியர்கள் வி.ஆர்.எஸ் பெறுவதற்கான தகுதியை பெற்றுள்ளனர். வி.ஆர்.எஸ் பெறுவதற்கு சில விதிமுறைகளை வங்கி வகுத்துள்ளது. 20 ஆண்டுகளுக்கு மேலாக பணியும் 55 வயதை பூர்த்தி செய்துள்ளவர்கள் வி.ஆர்.எஸ் பெறுவதற்கு தகுதி பெற்றவர்கள் ஆவர். இத்தகைய தகுதி கொண்டவர்கள் வி.ஆர்.எஸ் பெறலாம்” என்றார்.
துணை வங்கிகள் இணைப்புக்கு பிறகு ஸ்டேட் வங்கியின் ஊழியர்களின் எண்ணிக்கை 2,70,011 ஆக அதிகரித்துள்ளது. இந்த எண்ணிக்கையில் 69,191 துணை வங்கிகளின் ஊழியர்களும் அடங்கும். 24 ஆயிரம் கிளைகள் கொண்ட ஸ்டேட் வங்கியில் வாடிக்கையாளர்கள் எண்ணிக்கை 37 கோடியாக உயர்ந்துள்ளது. நாடு முழுவதும் 59 ஆயிரம் ஸ்டேட் வங்கி ஏ.டி.எம்கள் உள்ளன.



