
நியூசிலாந்துக்கு எதிரான 5வது டி20 போட்டியில் ஏற்பட்ட காயம் காரணமாக ஒரு நாள் மற்றும் டெஸ்ட் தொடர்களிலிருந்து ரோகித் சர்மா விலகியுள்ளார்.
காயம் காரணமாக இந்தியத் தொடக்க வீரர் ரோஹித் சர்மா, நியூஸிலாந்துக்கு எதிரான ஒருநாள் மற்றும் டெஸ்ட் தொடர்களிலிருந்து விலகவுள்ளதாக பிசிசிஐ தரப்பிலிருந்து தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நியூஸிலாந்துக்கு எதிரான கடைசி டி20 ஆட்டத்தில் 7 ரன்கள் வித்தியாசத்தில் வென்று தொடரையும் 5-0 எனக் கைப்பற்றி சாதனை படைத்தது இந்திய அணி. இதன் மூலம் 5-0 என முழுமையாக டி20 தொடரை வென்ற முதல் அணி என்ற சிறப்பைப் பெற்றது.
5வது டி20போட்டியில், இந்திய அணியின் பேட்டிங்கின் போது, 41 பந்துகளில் 3 சிக்ஸர், 3 பவுண்டரிகளுடன் விளையாடி வந்த கேப்டன் ரோஹித் சர்மாவுக்குக் காலில் தசைப்பிடிப்பு ஏற்பட்டது. இதனால் அவர் ரிடையர்ட் ஹர்ட் முறையில் வெளியேறினார்.
பின்னர், இந்திய அணியின் பந்து வீச்சின் போதும், கேப்டனாக செயல்பட வேண்டிய ரோஹித் களம் இறங்கவில்லை. இதனால் கே.எல். ராகுல் கேப்டனாக செயல்பட்டார்.
இந்நிலையில் காயம் காரணமாக ஒருநாள், டெஸ்ட் ஆகிய இரு தொடர்களிலிருந்தும் ரோஹித் சர்மா விலகியுள்ளதாக பிசிசிஐ தரப்பிலிருந்து தகவல் வெளியானது. ஒருநாள், டெஸ்ட் என இரண்டிலும் சிறப்பாக விளையாடி வருகிறார் ரோஹித் சர்மா. இதனால் அவரது விலகல் இந்திய அணியின் பேட்டிங் வரிசைக்கு பின்னடைவு என்று கூறப் படுகிறது.



