60 வயது நஞ்சம்மா பாடின பாட்டு… இன்று கேரளாவை கலக்கிக்கொண்டு இருக்கிறது! அதுவும் ஒரு கிராமிய தமிழ்ப் பாடல்தான். அந்தப் பாடலுக்கும், பாடலின் குரலுக்கும் சொந்தக்காரர் கேரளாவில் அட்டப்பாடி மலைப்பகுதியில் வசிக்கும் தமிழக பூர்வீகக்குடியான இருளர் இனத்தைச் சேர்ந்தவர் நஞ்சம்மா. இன்று மலையாள திரையுலகமும், ஊடகங்களும் அவரை போற்றிக்கொண்டு இருக்கிறது! கேரள அரசும் கிராமியப் பாடலுக்கான விருதை அளித்து கௌரவித்து இருக்கிறது.
“ஐயப்பனும் கோஷியும் ” என்ற மலையாள திரைப்படத்தில் அவர் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து , பாடிய அவரின் சொந்தப் பாடல் இன்று கேரளாவின் சூப்பர் ஹிட் பாடல். சினிமாவைப் பற்றி ஏதும் தெரியாத பாமரத் தாய் இவர்.
“இந்த வயதில் நான் ஒரு படத்தில் பாடுவேன், நடிப்பேன் என்று யார் நினைத்தார்கள்?” என்று நஞ்சம்மா நெகிழ்ச்சியுடன் கூறுகிறார். வயநாடு மாவட்டத்தில் உள்ள அட்டப்பாடியைச் சேர்ந்தவர், பிருத்விராஜ், பிஜு மேனன், இவர் பாடிய படம் எதுவும் அவருக்குத் தெரியாது. ஆனால் பிருத்விராஜ், பிஜு நடித்த ஐயப்பனும் கோஷியும் படத்தில் உள்ள டைட்டில் பாடலுடன் சமூக ஊடகங்களில் ஒரு நட்சத்திரமாக இன்று பரவலாகியுள்ளார் நஞ்சம்மா!
ஜேக்ஸ் பிஜோய் இசையமைத்த டைட்டில் சாங், டிராக்கின் வீடியோ இந்த மாத தொடக்கத்தில் வெளியாகி பெரும் வரவேற்பைப் பெற்றது. இதில், அவரது குரல் மட்டுமல்ல, பிருத்விராஜுடனான உரையாடலின் போது அவரது அப்பாவியான, பாசாங்கு ஏதுமற்ற இயல்பான பேச்சும் அவருக்கு பல ரசிகர்களைப் பெற்றுத் தந்துள்ளது.
பிரித்விராஜ் யாருன்னு தெரியுமா? பிஜு மேனன் யாரென்று தெரியுமா? என்றெல்லாம் நஞ்சம்மாவிடம் கேட்கிறார் பிரித்விராஜ். அதற்கு அவர் தெரியாது என்கிறார். உங்க பாட்டு எந்த படத்தில் இருக்குன்னு தெரியுமா என்று கேகிறார். அதற்கு நஞ்சம்மா… எனது பாட்டா என்று பதிலுக்கு கேட்கிறார்… இந்த வீடியோ பதிவு பெரும் அளவில் பகிரப்பட்டும் பார்க்கப்பட்டும் உள்ளது.
“எங்க பாடலை மக்கள் விரும்பியதில் நான் மகிழ்ச்சியடைகிறேன்,” என்று அவர் ஒரு புன்சிரிப்புடன் கூறுகிறார். நஞ்சம்மாவின் வரிகள் அவரது சொந்த மொழியான பூர்வகுடி தமிழரான இருளர் மொழியில் உள்ளன!
‘கலக்காத சந்தன மரம் வெகு வேக பூத்திருக்க … பூப் பறிக்கான் போகிலாமோ விமானத்தே பாக்கிலாமோ …’ என்று அவரது குரலில் ஒலிக்கும் இந்த வார்த்தைகளும் அதனுடன் பின்னிப் பிணைந்து இழையோடும் துள்ளல் இசையும் கேட்பவர் உள்ளத்தில் புதிய ரத்தம் பாய்ச்சுகிறது. குழந்தைக்கு உணவூட்டும் போது, தாயின் வழியே வழிவழியாக வழங்கப்பட்டு தன்னை வந்தடைந்த பாடலிது என்கிறார் நஞ்சம்மா.
இந்தப் படத்தில் மேலும் மூன்று பாடல்களைப் பாடியுள்ளார் நஞ்சம்மா. நக்குப்பாதி பிரிவு ஊரு (காலனி)யைச் சார்ந்த நஞ்சம்மா, அட்டப்பாடியைச் சேர்ந்த ஆசாத் கலா சமிதியில் இருந்து வருகிறார். இது கேரளா மற்றும் மாநிலத்திற்கு வெளியே நடனம் மற்றும் இசை நிகழ்ச்சிகளை நடத்தி வருகிறது.
“நாட்டுப்புற அகாடமி மற்றும் மற்ற கலை, கலாச்சார அமைப்புகளால் ஏற்பாடு செய்யப்படும் நிகழ்ச்சிகளில் நாங்கள் கலந்து கொண்டுள்ளோம். அனைத்து மாவட்டங்களிலும் பாரம்பரிய கலை மற்றும் நடன வடிவங்களை மேம்படுத்துவதற்காக கேரள அரசு ஏற்பாடு செய்துள்ள விழாக்களிலும் எங்கள் நடனம் மற்றும் பாடல்களை அரங்கேற்றியுள்ளோம், ”என்கிறார் இந்த சமிதியின் தலைவர் எஸ்.பழனிசாமி!
இந்தப் படம் அட்டப்பாடியில் எடுக்கப்பட்டிருப்பதால், இயக்குனர் சச்சி பழங்குடிப் பாடல்களைச் சேர்க்க வேண்டும் என்று விரும்பினார்! அவர் சமிதியைத் தொடர்பு கொண்டபோதுதான் இது சாத்தியமானது. அவர் முதலில், நஞ்சம்மாவின் பாடலைக் கேட்டார். பின்னர் எங்கள் குழுவில் இருந்து 11 பேர் கொண்ட குழு கொச்சியில் ஓர் அமர்வுக்கு அழைக்கப்பட்டது. அதன் பின்னர், பாடல்கள் சென்னையில் பதிவு செய்யப்பட்டன, ”என்கிறார் வனத்துறையின் பழங்குடி பார்வையாளராகவும் இந்தப் படத்தில் நடித்திருப்பவருமான பழனிசாமி.
தன்னுடைய பாடல் அப்படி ஒன்றும் பெரிதாக ஈர்க்காது என்று தான் நஞ்சம்மா நினைத்துக் கொண்டிருந்தார். ஆனால் ஊடகங்களில் பாடல் வைரலானதும் அவரை மொய்க்கும் கூட்டத்தைக் கண்டு அசந்து போனார் என்கிறார் பழனி.
அவர் சிறுவயதில் இருந்தே பாடிக் கொண்டிருக்கிறார். பள்ளிக்கு போனதில்லை. கிராமிய வாழ்க்கை. இது போன்று செய்திகளில் வருவதெல்லாம் அவருக்கு புதிது. அப்படிப்பட்டவர் இந்தப் பாடல் ஒன்றிலும் நடித்துவிட்டார். வெளுத்த ராத்ரிகள் என்ற விருது பெற்ற குறும்படத்தில் இவர் ஒரு பாடல் பாடியுள்ளார்.
இந்தப் பாடலை கம்போஸ் செய்த போது, தலையில் ஹெட்செட் மாட்டிக் கொண்டு பாடுவது பெரும் சிரமமாக இருந்ததாம். இசையுடன் சேர்ந்து அவரால் பாட முடியாமல் போனதாம். எனவே பாடல் ஒலிப்பதிவு முடிந்த பின்னர் இசைவேகத்தை சரிசெய்து கொண்டார்களாம்.
நஞ்சம்மா குழுவினர் சில பாடல்களைப் பாடினர். நாங்கள் அவற்றில் இருந்து ஒரு பாடலை டைட்டில் பாடலாக தேர்வு செய்து கொண்டோம் என்கிறார் கம்போஸர் ஜேக்கஸ் அவர்ஸ். அவர்களது பாரம்பரிய இசைக்கருவிகளின் இசையுடன் பதிவு செய்துள்ளோம். இந்தப் பாடலின் ஆன்மாவே நஞ்சம்மாவின் குரல்தான். அவர் மீண்டும் மீண்டும் அதே வரிகளைப் பாடிய போதும், கேட்க அலுப்பு தட்டவில்லை என்கிறார்.