
‘அரசு மற்றும் தனியார் நிறுவனங்களில் பணியாற்றுபவர்கள், பணியிடங்களில் எச்சில் துப்பினால் அபராதம் விதிக்கப்படும் என்று தொழிலாளர் நலத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.
கொரோனா நோய்த் தொற்று பரவல் அதிகரித்துள்ளதால் பல்வேறு நடவடிக்கைகளை அரசுகள் எடுத்து வருகின்றன. எச்சில், சளி இருமல் தும்மல் போன்றவை மூலமே கொரோனா பரவல் அதிகரித்துள்ளதாகக் கூறப் படும் நிலையில், சாலை ஓரங்களில் எச்சில் துப்பி அதை எவரும் மிதித்து சுகாதாரக் கேடின் மூலம் கொரோனா பரவி விடக் கூடாது என்று, கிருமி நாசினிகளை சாலையோரங்களில் தூவி வருகிறார்கள்.
இது போல், வணிக வளாகங்கள், முக்கிய பொது இடங்களிலும் கிருமி நாசினிகளைத் தெளித்து வருகின்றனர். பான் மசாலா, வெற்றிலை போடும் பழக்கம் உள்ளவர்களால் இந்த சுகாதார சீர்கேடு அதிகம் என்பதால், இவற்றுக்கு கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப் பட்டுள்ளன.
இந்நிலையில் கொரோனா 4ம் கட்ட ஊரடங்கில் சில தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. இதை அடுத்து, அரசு மற்றும் தனியார் அலுவலகங்கள் தொழில் நிறுவனங்கள், குறிப்பிட்ட எண்ணிக்கையிலான பணியாளர்களுடன் செயல்படத் தொடங்கியுள்ளன. வணிக நிறுவனங்களும் செயல்பாட்டுக்கு வந்துள்ள நிலையில், பணியிடங்களில் மேற்கொள்ள வேண்டிய சுகாதார நெறிமுறைகள் குறித்து சில அறிவுரைகள் அளிக்கப் பட்டுள்ளன. அதில், எச்சில் துப்புவோருக்கு அபராதம் விதிக்கப்படும் என்பது முக்கியமான ஒன்று.
பணியாளர் நல அமைச்சகத்தின் அறிவிப்பில் தெரிவிக்கப் பட்டுள்ளதாவது: மத்திய அரசு நிறுவனங்கள் மற்றும் அலுவலக பணியாளர்கள், தனியார் நிறுவன பணியாளர்கள், பான் மசாலா, குட்கா போன்றவற்றை பயன்படுத்தும் நிலையில், அலுவலக பகுதிகளில் எச்சில் துப்பக் கூடாது. இது போன்ற நடவடிக்கைகளில் ஈடுபடுவோருக்கு, அபராதம் விதிக்க வேண்டும். இதற்கான நடைமுறைகளை, சட்ட அடிப்படையில் மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேச அரசுகள் மேற்கொள்ள வேண்டும்.
பொது இடங்கள் மற்றும் பணியிடங்களில் அனைவரும் கண்டிப்பாக முக கவசம் அணிய வேண்டும். இயன்ற வரையில், வீட்டில் இருந்து பணியாற்றுவதை பின்பற்றலாம். அலுவலகங்கள், கடைகள், சந்தைகள், தொழில் மற்றும் வணிக நிறுவனங்களில், கை கழுவுதல், கிருமி நாசினி பயன்படுத்துதல், உடல் வெப்ப பரிசோதனை ஆகியவற்றை பணியாளர்கள் பின்பற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்… என்று அறிவுறுத்தப் பட்டுள்ளது.