
இடம் பெயர்ந்து வேற்று மாநிலங்களில் வசித்து வந்த தொழிலாளர்களுக்காக ஆயிரம் பேருந்துகளை ஏற்பாடு செய்திருப்பதாக பிரியங்கா வத்ரா மேற்கொண்ட அரசியல் நடவடிக்கை இப்போது அவரது சொந்த கட்சி எம்.எல்.ஏ., மூலமே கடும் விமர்சனத்தைச் சந்தித்திருக்கிறது.
நேரு வழி ‘காந்தி’ குடும்பத்துக்கு நெருக்கமானவர் என்று அறியப்பட்ட ரேபரேலியைச் சேர்ந்த காங்கிரஸ் எம்.எல்.ஏ, அதிதி சிங், உத்தரப் பிரதேசத்தில் ஆயிரம் பேருந்து விவகாரத்தில் தனது சொந்தக் கட்சியை மீண்டும் குதறித் தள்ளியுள்ளார். இடம்பெயர்ந்த தொழிலாளர்களுக்காக அனுப்பப்பட வேண்டிய பேருந்துகளில் பெரும்பாலானவை சிறிய வாகனங்கள் என்றும் இது என்ன கொடூரமான நகைச்சுவை என்றும் கேட்டுள்ளார் அதிதி சிங்.
காங்கிரஸ் எம்.எல்.ஏ அதிதி சிங் தனது டிவிட்டர் பதிவில், “ஒரு பேரழிவின் போது இத்தகைய மோசமான மலின அரசியலின் தேவை என்ன? ஒரு 1,000 பேருந்துகளின் பட்டியல் கேட்டு அதுவும் அனுப்பப்பட்டது. ஆனால் அந்தப் பதிவு எண்களில் பாதிக்கும் மேற்பட்டவை போலியானவை, 297 குப்பை பேருந்துகள், 98 ஆட்டோரிக்ஷாக்கள் மற்றும் ஆம்புலன்ஸ் போன்ற வாகனங்கள், 68 வாகனங்கள் எந்த ஆவணங்களும் இல்லாமல் இருந்தன. இது என்ன கொடூரமான நகைச்சுவை? பேருந்துகள் இருந்தால் ராஜஸ்தான், பஞ்சாப் மற்றும் மகாராஷ்டிராவுக்கு ஏன் அனுப்பவில்லை? ”
கொளுந்து விட்டு எரிகின்ற இந்த சர்ச்சையில் எண்ணெயைச் சேர்த்தது போல், காங்கிரஸ் எம்.எல்.ஏ அதிதி சிங் மேலும் கூறுகையில், “உ.பி.யிலிருந்து ஆயிரக்கணக்கான குழந்தைகள் கோட்டாவில் சிக்கித் தவிக்கும் போது பேருந்துகள் என்று அழைக்கப்படுபவை எங்கே போயின? பின்னர் ராஜஸ்தான் காங்கிரஸ் அரசாங்கத்தால் இந்தக் குழந்தைகளை வீட்டிலேயே விட்டுவிட முடியவில்லை, அவ்வளவு ஏன்… எல்லையில் கூட அவர்களை விட்டுவிட முடியவில்லை. பின்னர் ஸ்ரீ யோகி ஆதித்யநாத் அவர்கள் இரவு முழுதும் செலவு செய்து, மீண்டும் பேருந்துகளில் அவர்களைக் கொண்டு வந்தார். ராஜஸ்தான் முதல்வரும் அதை பாராட்டினார். ”
காங்கிரஸ் தலைவர் பிரியங்கா வத்ரா, உத்தர பிரதேசத்தில் உள்ள சொந்த இடங்களுக்குத் திரும்ப விரும்பும் ஆயிரக்கணக்கான புலம்பெயர்ந்த தொழிலாளர்களை அழைத்துச் செல்ல 1,000 பேருந்துகளை அனுப்புவதாகவும் அவை எல்லையில் காத்துக் கொண்டிருப்பதாகவும் தயாராக இருப்பதாகவும் சொன்னார். இதனால், பாஜகவுக்கும் காங்கிரசுக்கும் இடையில் வார்த்தைப் போர் வெடித்தது. இதையடுத்து, உ.பி. முதல்வர் யோகி ஆதித்யநாத் இந்த வாய்ப்பை ஏற்று செவ்வாய்க்கிழமை பிற்பகலுக்குள் நொய்டா மற்றும் காசியாபாத்துக்கு பேருந்து குறித்த தகவல்களை அனுப்புமாறு பிரியங்கா காந்தியிடம் கேட்டுக்கொண்டார்.
ஆனால் உ.பி. அரசாங்கத்தின் அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகள், காங்கிரஸ் அனுப்பிய பேருந்துகளின் பதிவு எண்கள் பல இரு சக்கர வாகனங்கள், முச்சக்கர வண்டிகள் அல்லது போலி எண்கள் என்று கூறினார்.
இதற்கிடையில், உத்தரப்பிரதேச காங்கிரஸ் தலைவர் அஜய் குமார் லல்லு மற்றும் பிரியங்கா வாத்ராவின் செயலாளர் மீது செவ்வாய்க்கிழமை வழக்கு பதிவு செய்யப்பட்டது. மற்ற வாகனங்களின் எண்ணிக்கையைக் கொண்ட தங்களது பட்டியலில் உள்ள வாகனங்கள் குறித்த உ.பி. அரசாங்கத்தின் கூற்றை காங்கிரஸ் நிராகரித்தது, பேருந்துகளை நேரடியாக சரிபார்க்கலாம் என்று சவால் விடுத்தது. அந்நிலையில், மாநில அரசின் செய்தித் தொடர்பாளர் ஒருவர், காங்கிரஸ் பட்டியலில் சுமார் 100 வாகனங்கள் பேருந்துகளே அல்ல என்று கூறினார். இந்த சர்ச்சை உபி., அரசியலில் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியது.