
புது தில்லி:
‘ஊழலைத் தடுக்க ஆதார் உதவும் என்றும், நாடு முழுவதும் தனிநபர் பெயரில் உள்ள 10.52 லட்சம் போலி ‘பான்’ கார்டுகளை குறைந்த எண்ணிக்கையாக எடுத்துக் கொள்ள முடியாது, அது நாட்டின் பொருளாதாரத்தை பாதிக்கக் கூடும்’ என்றும் உச்ச நீதிமன்றம் கூறியுள்ளது.
வருமான வரி கணக்கு ஐ.டி., தாக்கல் செய்வதற்கும், வருமான வரி நிரந்தர கணக்கு எண் பான் அட்டை வாங்குவதற்கும், ஆதாரை கட்டாயமாக்கும் மத்திய அரசின் சட்டத்தை எதிர்த்துத் தொடரப்பட்ட வழக்கில், உச்ச நீதிமன்றம் அண்மையில் தீர்ப்பு அளித்தது. அதில், ‘ஆதார் எண்ணை கட்டாயமாக்கும் வகையில், வருமான வரிச் சட்டத்தில் கொண்டு வரப்பட்ட திருத்தம் செல்லும்’ என நீதிபதிகள் ஏ.கே.சிக்ரி, அஷோக் பூஷண் அடங்கிய அமர்வு கூறியது.
நீதிபதிகள் தாங்கள் அளித்த தீர்ப்பில் தெரிவித்ததாவது..
நாடு முழுவதும் உள்ள 11.35 லட்சம் போலி பான் கார்டுகளில், 10.52 லட்சம் போலி கார்டுகள் தனிநபர் பெயரில் வாங்கப்பட்டுள்ளன. தனிநபர்கள் தான், நிறுவனங்களை துவக்குகின்றனர். கறுப்புப் பணத்தை மாற்றுவதற்காக போலி நிறுவனங்களை உருவாக்க, இதுபோன்ற போலி பான் கார்டுகளை தனிநபர்கள் பயன்படுத்துவதாக மத்திய அரசு சார்பில் கூறப்பட்டதை ஏற்கிறோம். தனிநபர் பெயரில் உள்ள 10.52 லட்சம் போலி பான் கார்டுகள் என்பது மொத்த கார்டுகளில் 0.04 சதவீதம் என்றபோதிலும், இந்த போலி பான் கார்டுகள் நாட்டின் பொருளாதாரத்துக்கு பாதிப்பை ஏற்படுத்தக் கூடும். கறுப்புப் பணத்தை ஒழிப்பதற்கு பல்வேறு நடவடிக்கைகள் தேவை. அதில் ஒன்றாகவே இதை பார்க்கிறோம்… என்று கூறினர்.
அப்போது, முன்னாள் பிரதமர் ராஜிவ் காந்தியை மேற்கோள் காட்டிய நீதிபதிகள், “ஏழைகளுக்காக அரசு செலவிடும் ஒரு ரூபாயில், 15 காசுகள்தான் ஏழைகளுக்கு சென்றடைகிறது’ என முன்னாள் பிரதமர் ராஜிவ், 1985ல் ஒரு கருத்தைக் கூறியிருந்தார். மிகப் பெரிய பொருளாதார வளர்ச்சியை நாடு அடைந்த போதும் ஏழை எளிய மக்களுக்கு அதன் பலன்கள் முழுமையாகப் போய்ச் சேரவில்லை. ஆதார் திட்டத்தின் மூலம், இந்தக் குறையை களைய முடியும் என முழுமையாக நம்புகிறோம். திட்டப் பலன்கள், உரியவர்களுக்கு முழுமையாகச் சென்றடைவதற்கு ஆதார் உதவுகிறது. போலிகளுக்கும் தகுதியில்லாதவர்களுக்கும் அரசு திட்டப் பலன்கள் சென்றடைவதைத் தடுக்க முடியும்” என்று கூறினர்.
ஊழலைத் தடுக்க ஆதார் உதவும். தனிநபர் பெயரில் 10.35 லட்சம் போலி பான் கார்டுகள் ! நிறுவனங்கள் பெயரில் 83,000 போலி பான் கார்டுகள்! இந்த ஊழலை வெளிக்கொணர்ந்து தடுத்து நிறுத்துவது ஆதார். அரசின் நலத் திட்டங்களுக்காக ஒதுக்கப்படும் ஒரு ரூபாயில் 15 காசுகள் மட்டுமே பயனாளிகளுக்குப் போய் சேர்வதாக முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியால் அடையாளம் காட்டப்பட்ட குறையை ஆதார் போக்கும்… என்று உச்ச நீதிமன்றம் சுட்டிக் காட்டியுள்ளது குறிப்பிடத் தக்கது. இவ்வாறு ஊழலுக்கு எதிரான உறுதியான பயனுள்ள நடவடிக்கைகளை மோடியின் மத்திய அரசு எடுத்து வருவதை உச்ச நீதிமன்றம் அங்கீகரித்துப் பாராட்டியதாகவே இந்தத் தீர்ப்பினைக் கருதுவதாக பொதுவெளியில் கருத்துகள் பகிரப் படுகின்றன.



