
லடாக் பகுதியில் சீன ராணுவத்தினர் அத்துமீறலில் ஈடுபட்டு வரும் நிலையில், பிரதமர் மோடி முக்கிய ஆலோசனையில் ஈடுபட்டார்.
இந்திய எல்லையில் மீண்டும் வாலாட்டி வருகிறது சீனா. இந்திய எல்லையை ஒட்டியுள்ள பகுதிகளில் இரு நாடுகளின் ராணுவமும் உள்கட்டமைப்புகளை மேற்கொள்ளும்போது அவ்வப்போது பதற்றம் உருவாகிறது.
கடந்த 5ஆம் தேதி லடாக்கில் உள்ள பாங்காங் ஏரி பகுதியில் இந்திய, சீன ராணுவ வீரர்களிடையே மோதல் ஏற்பட்டதாகத் தெரிகிறது. சீன வீரர்கள் கைகலப்பில் ஈடுபட்டதுடன், கம்புகள் மற்றும் கற்களாலும் தாக்கியுள்ளனர். இதில் பலர் காயமடைந்துள்ளனர். அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தியதை அடுத்து மோதல் முடிவுக்கு வந்துள்ளது.

இதேபோல் கல்வான் பள்ளத்தாக்கிலும் மோதல் போக்கு நீடிக்கிறது. ஆயினும், பதற்றத்தை தணிக்க கமாண்டர் நிலை அதிகாரிகளிடையே நடத்தப்பட்ட பேச்சுவார்த்தையில் முன்னேற்றம் ஏற்படவில்லை. இந்நிலையில், தற்போது லடாக் எல்லையை ஒட்டிய பாங்காங் ஏரி, கல்வான் பள்ளத்தாக்கு பகுதியில் சீன படைகள் அதிக அளவில் குவிக்கப்பட்டுள்ளன.
அந்தப் பகுதிகளில், சீனப் படையினர் தற்காலிக கூடாரங்களை அமைத்து, சாலை போடும் பணிகளை தொடங்கி உள்ளனர். மேலும், பதுங்கு குழிகளை அமைக்கும் நோக்குடன் கனரக இயந்திரங்களையும் அங்கே கொண்டு வந்திருப்பதாகக் கூறப்படுகிறது. இந்நிலையில் சீன நடவடிக்கைக்குப் பதிலடி தரும் வகையில் இந்தியாவும் படைகளை குவித்து வருகிறது.
கிழக்கு லடாக் எல்லையின் பல்வேறு பகுதிகளில் இரு நாடுகளும் படைகளைக் குவித்து வருவதால் பதற்றம் அதிகரித்து உள்ளது.

இந்நிலையில், இந்த விவகாரம் தொடர்பாக பிரதமர் மோடி, முக்கிய ஆலோசனை நடத்தியதாக தில்லியில் இருந்து வரும் செய்திகள் தெரிவிக்கின்றன. இந்த முக்கிய ஆலோசனைக் கூட்டத்தில் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல், முப்படை தலைமை தளபதி பிபின் ராவத் மற்றும் முப்படைகளின் தளபதிகளும் கலந்து கொண்டனர். முன்னதாக முப்படை தளபதிகள் பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத்தை சந்தித்து எல்லையில் நிலவும் சூழ்நிலை குறித்து விளக்கியுள்ளனர்.