
கேந்த்ரபாரா:
நாடு சுதந்திரம் அடைந்து 70 ஆண்டுகள் கடந்த நிலையில், இப்போது தான் ஓர் அடிமைச் சின்னமாக இருந்த தீவின் பெயரை மாற்றியிருக்கிறார்கள்.
ஒடிசா மாநிலத்தில், ஐடிஆர் ஏவுகணைகளை சோதிக்கும் ஏவுதள மையம் அமைந்துள்ள வீலர் தீவு என்னும் பெயரை ஏபிஜே அப்துல் கலாம் பெயரில் மாற்றியிருக்கிறார்கள். 1857 முதல் இந்திய சுதந்திரப் போரின் போது, கான்பூரில், சுதந்திரப் போர் வீரர்களைக் கொன்று குவித்த கிழக்கிந்தியக் கம்பெனியின் ராணுவ அதிகாரியாக இருந்த ஹக் மாசே வீலர் என்பவர் பெயரை இந்தத் தீவுக்கு சூட்டியிருந்தார்கள். ஆனால், பாரதக் குடியரசின் முன்னாள் தலைவர் அப்துல் கலாமின் இரண்டாவது நினைவு நாளான ஜூலை 27 வியாழன் அன்று, அந்தத் தீவின் பெயரை அதிகாரபூர்வமாக, கலாம் தீவு என்று பெயர் மாற்றி அறிவித்தார் ஒடிஷா முதல்வர் நவீன் பட் நாயக்.
வீலர் என்பவர், 1838-39ல் முதல் ஆங்கில ஆப்கன் போரிலும், பின்னர் நடந்த ஆங்கில சீக்கியர் போரிலும் கமாண்டராகப் பணியாற்றியவர். பின்னர் 1857ஆம் ஆண்டில் சிப்பாய் கலகம் என்று சொல்லப்படும் முதல் சுதந்திரப் போர் நடைபெற்ற போது, இந்திய சுதந்திரப் போர் வீரர்கள் பலரைக் கொன்று குவித்தவர். இதைக் குறிப்பிடும் வரலாற்று ஆராய்ச்சியாளர்கள், நம் நாட்டின் அடிமைச் சின்னமாகத் திகழ்ந்த, நம் வீரர்களைக் கொன்று குவித்த ஒருவரின் பெயரை மாற்ற வேண்டும் என்று நாடு சுதந்திரம் அடைந்து 70 ஆண்டுகளுக்குப் பின் தான் தோன்றியிருக்கிறது. ஆனால், இதற்காக முதல்வர் நவீன் பட் நாயக் பாராட்டுக்குரியவர் என்று கூறியுள்ளனர்.
முதல் சுதந்திரப் போராட்டத்தின் போது, மீரட்டையும் கான்பூரையும் பலமாகத் தாக்கி, பலரை ஈவிரக்கமில்லாமல் கொன்று குவித்தனர் ஆங்கிலேயர். அப்போது, 1857 ஜூன் 27ஆம் தேதி கான்பூருக்கு அருகே சட்டிசௌரா கட் அருகே கங்கையைக் கடந்து போகும்போது, வீலர், அவர் மனைவி, மூத்த மகள் ஆகியோர் சுதந்திரப் போர் வீரர்களால் சுட்டுக் கொல்லப்பட்டனர். அதன் பின்னர் பிரிட்டிஷார் இவ்வாறு போரில் உயிர்நீத்த ஆங்கில ராணுவ அதிகாரிகள் நினைவாக, பல இடங்களுக்கும், நகரங்களுக்கும், தீவுகளுக்கும் பெயர்களைச் சூட்டி வைத்தனர்.
கடந்த மார்ச் மாதம், பாஜக., மாநிலங்களவை உறுப்பினர் இல.கணேசன், இதே போன்று அந்தமானில், பிரிட்டிஷ் ராணுவ அதிகாரியாக இருந்த மேஜர் ஜெனரல் ஹென்றி ஹாவ்லாக்கின் பெயரில் உள்ள ஹாவ்லாக் தீவுகளின் பெயரை மாற்ற வேண்டும் என்று கோரிக்கை விடுத்தார் என்பது குறிப்பிடத் தக்கது.



