
பெங்களூர்:
தமிழகத்தில் ஜெயலலிதா மறைவுக்குப் பின் அதிமுக., இரண்டாக உடைந்து ஆட்சிக்குப் பிரச்னை எழுந்தபோது, எப்படி கூவத்தூரில் எம்.எல்.ஏ.க்கள், அமைச்சர்கள் தங்க வைக்கப்பட்டு, நாடு முழுதும் பேசப்பட்டதோ, அதே போன்றதொரு காட்சி இப்போது குஜராத் காங்கிரஸ் எம்.எல்.ஏ.,க்கள் வடிவில் அரங்கேறியுள்ளது.
குஜராத்தில் அடுத்த மாதம் மாநிலங்களவை உறுப்பினர் பதவிக்கான தேர்தல் நடைபெற இருக்கிறது. 3 மாநிலங்களவை இடங்களுக்கான போட்டியில் காங்கிரஸ் சார்பில் ஒரு இடத்துக்கு அகமது பட்டேல் போட்டியிடுகிறார். மற்ற இரண்டு இடங்களிலும் பாஜகவின் அமித் ஷா, ஸ்மிருதி இரானி ஆகியோர் போட்டியிடுகின்றனர்.
இந்நிலையில், கடந்த வாரம் காங்கிரஸின் முக்கியத் தலைவரும், கட்சியின் சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவராகவும் இருந்த சங்கர் சிங் வகேலா, காங்கிரஸில் இருந்து விலகினார். அவருக்கு ஆதரவாக 11 காங்கிரஸ் எம்.எல்.ஏக்கள் உள்ளனர். இவர்கள் அனைவரும் குடியரசுத் தலைவர் தேர்தலில் பாஜக வேட்பாளரான ராம்நாத் கோவிந்துக்கு வாக்களித்தனர்.
இதை அடுத்து தற்போது, மாநிலங்களவை உறுப்பினரைத் தேர்ந்தெடுக்க தேர்தல் நடக்கும் நேரத்தில் காங்கிரஸ் வேட்பாளரான அகமது பட்டேலுக்கு எதிராக பாஜக வியூகம் அமைத்து வருகிறது. நேற்றும் இன்றும் மட்டும் 5 எம்.எல்.ஏக்கள் காங்கிரஸில் இருந்து விலகி பாஜக.,வில் இணைந்துள்ளனர். இவ்வாறு காங்கிரஸில் இருந்து பாஜக.,வில் இணைந்த எம்.எல்.ஏ பல்வாந்த் சிங் ராஜ்புத்-தையே காங்கிரஸ் வேட்பாளருக்கு எதிராக மாநிலங்களவை வேட்பாளராக நிறுத்தியுள்ளது பாஜக. இதனால், சோனியா காந்திக்கு நெருக்கமானவராக இருக்கும் அகமது பட்டேலின் வெற்றி வாய்ப்பு சந்தேகத்துக்கு இடமளிக்கும் வகையில் ஆகியுள்ளது.
இந்நிலையில், காங்கிரஸ் கட்சியிலிருந்து மேலும் சிலர் கட்சி மாறும் முடிவில் இருப்பதாகத் தகவல்கள் வெளியாகின. இதை அடுத்து, இருக்கும் காங்கிரஸ் உறுப்பினர்களைத் தக்க வைத்துக் கொள்ள, காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த 44 எம்.எல்.ஏ-க்களை அவசர அவசரமாக நேற்று இரவு குஜராத்தில் இருந்து காங்கிரஸ் ஆளும் மாநிலமான கர்நாடகாவிற்கு அனுப்பிவைத்தது கட்சி மேலிடம்.
இதன்படி, இன்று காலை கர்நாடகா வந்த எம்.எல்.ஏ-க்கள் அனைவரும் அங்குள்ள ஒரு ரிசார்ட்டில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். அங்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. இன்று காலை மேலும் 10 எம்.எல் ஏக்களும் அழைத்து வரப்பட்டனர். வரும் ஆகஸ்ட் மாதம் 8ஆம் தேதி மாநிலங்களவை உறுப்பினரைத் தேர்ந்தெடுக்க தேர்தல் நடைபெறவுள்ளது. அதற்குள் மற்ற எம்.எல்.ஏ-க்களும் கட்சி மாறுவதைத் தடுக்கவே இந்த நடவடிக்கை எடுக்கபட்டுள்ளதாகத் தெரிகிறது. எம்.எல்.ஏ-க்கள் அனைவரும் ஆகஸ்ட் 8ஆம் தேதிதான் குஜராத் திரும்புவார்கள் என காங்கிரஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் இதேபோன்று கூவத்தூர் சம்பவம் நடந்தபோது, திமுக.,வுக்கு ஆதரவாகக் களம் இறங்கியிருந்த தமிழக காங்கிரஸ் உறுப்பினர்கள், கூவத்தூர் விவகாரத்தை விமர்சித்து தொலைக்காட்சிகளில் பேட்டி அளித்தனர். விவாதம் செய்தனர். ஆனால், அதே போன்றதொரு செயலை தங்கள் கட்சியே இப்போது செய்துள்ளதை அவர்கள் நியாயப் படுத்தி வருகின்றனர்.



