2வது நாளாக ரெய்டு! சொகுசு விடுதியில் இருந்த 3 குஜராத் எம்.எல்.ஏ.,க்கள் மருத்துவமனையில்!

Published:

Rs-five-crore-cash-recovered-from-the-Delhi-residence

பெங்களூர்:

கர்நாடக மாநில அமைச்சர் சிவக்குமார் இல்லத்தில் 2ஆவது நாளாக இன்றும் வருமானவரித் துறையினர் சோதனை மேற்கொண்டனர்.

மின்சாரத் துறை அமைச்சருக்குக் கொடுக்கப்பட்ட திடீர் ’ஷாக்’ என்று இந்த வருமான வரித் துறை சோதனை குறித்துக் கூறுகின்றனர். இதனிடையே குஜராத் காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்களுக்கு அடைக்கலம் கொடுத்தவர் அமைச்சர் சிவக்குமார் என்பதால், அவரது வீடு, அலுவலகங்கள் உள்ளிட்ட 64 இடங்களில் வருமான வரி அதிகாரிகள் நேற்று திடீர் சோதனை நடத்தியதாக, ஆளும் காங்கிரஸ் தரப்பில் கூறப்பட்டது.

இந்த சோதனையில் ரூ.10 கோடி மற்றும் ஏராளமான நகைகள், ஆவணங்கள் சிக்கின. இந்த சோதனை குறித்து நாடாளுமன்றத்தில் காங்கிரஸ் உறுப்பினர்கள் அமளி துமளி கிளப்பி பிரச்னையை ஏற்படுத்தும் அளவுக்கு இந்த சோதனை அமைந்துவிட்டது. இதனிடையே இரண்டாவது நாளாக இன்றும் சிவக்குமாருக்கு சொந்தமான இடங்களில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தினர். இதனால் கோபம் அடைந்த டி.கே.சிவகுமார் ஆதரவாளர்கள், வருமான வரித்துறை சோதனை நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து பெங்களூருவில் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

ALSO READ:  ஆனி மாத பூஜை; சபரிமலை கோயில் நடை திறப்பு!

ஆனால், வருமானவரித் துறை தரப்பில் வெளியிடப்பட்ட அறிக்கையில், இந்த சோதனை நடவடிக்கை குறித்து வெகு நாட்களுக்கு முன்பே திட்டமிடப்பட்டது என்றும், வரி ஏய்ப்பு, சொத்துக் குவிப்பு, கணக்கில் காட்டாத பணப் புழக்கம் என்று பல்வேறு புகார்கள் வந்த நிலையில், சிவகுமார் வீட்டில் சோதனை நடத்த திட்டமிட்டதாகவும், ஆனால் இந்த நேரம் பார்த்து குஜராத் காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் பெங்களூருக்கு அனுப்பபட்டு, அவர்களை டிகே.சிவகுமார் தன் கட்டுப்பாட்டில் அடைக்கலம் கொடுத்ததாகவும், எனவே இரண்டுக்கும் தொடர்பில்லை என்றும் கூறினர். காக்காய் உட்காரப் பனம்பழம் விழுந்த கதை என்று கூறப்படுவது போல், இந்த சோதனை நடவடிக்கை ஆனதாகக் கூறப்படும் நிலையில், இந்த சோதனை நடவடிக்கையின் பின்னணியில் மாநில அரசியல் இருப்பதாக அரசியல் மட்டத்தில் பேச்சு எழூந்துள்ளது. குறிப்பாக, முதல்வர் சித்தராமையா இதன் பின்னணியில் இருக்கக் கூடும் என்றும் பேசப்படுகிறது.

வரும் ஆண்டில் மாநிலத்தில் பேரவைத் தேர்தல்கள் நடைபெறவுள்ளன. இந்நிலையில், மாநிலத்தில் மின்சாரத் துறை அமைச்சர் சிவக்குமார் பவர்புல்லாக வளர்ந்து வந்திருக்கிறார். இங்கே அதிகார அரசியல் தலை தூக்கியுள்ளது. இதனால், சித்தராமையா வைத்த குறியாகக் கூட இருக்கலாம் என்று பேசப்படுகிறது.

ALSO READ:  ஆப்கானிஸ்தான் அணி உடனான டெஸ்ட்; இந்திய அணி இன்னிங்ஸ் வெற்றி!

இந்நிலையில், சொகுசு விடுதியில் தங்கியிருந்த குஜராத் எம்.எல்.ஏக்களில் 3 பேருக்கு இன்று உடல் நலக் குறைவு ஏற்பட்டது. அவர்கள் மன அழுத்தத்தால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் இன்று அனுமதிக்கப்பட்டனர். பெங்களூரு கேங்கேரி பிஜிஎஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர்கள் வெளி நோயாளிகளாக சிகிச்சை அளிக்கப் பட்டு அனுப்பப் பட்டனர்.

வருமான வரித் துறை சோதனையை அடுத்து, குஜராத் எம்.எல்.ஏ.க்களில் பலருக்கு பயம் தொற்றிக் கொண்டதாகவும், தாங்கள் தான் அடுத்த இலக்கு என்று அவர்கள் கருதுவதாகவும், அதன் காரணத்தாலேயே மன அழுத்தம் ஏற்பட்டு உடல் நலக்குறைவு கண்டதாகவும் கூறப்படுகிறது. ஈகிள்டன் ரிசார்ட்டில் தங்கியிருக்கும் எம்.எல்.ஏக்கள் பலரும் இதனால் தங்கள் சொந்த மாநிலத்துக்குச் செல்லவே விரும்புவதாகவும் கூறப்படுவதால், இந்த விவகாரத்தில் இப்போது பரபரப்புத் திருப்பம் எழுந்துள்ளது.

Related articles

Recent articles

spot_img