
புது தில்லி:
தமிழக மக்களுக்கு எது நன்மை பயக்குமோ அந்த முடிவினை நாங்கள் எடுப்போம் என்று ஓ.பன்னீர்செல்வம் கூறினார். பிரதமர் மோடியை சந்தித்தபின்னர் அவர் செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது இந்தக் கருத்தைத் தெரிவித்தார்.
குடியரசுத் துணைத்தலைவர் வெங்கய்ய நாயுடுவின் பதவி ஏற்பு விழாவில் பங்கேற்பதற்காக தமிழக முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தில்லி சென்றிருந்தார். பின்னர் வட மாநிலங்களில் உள்ள ஆன்மிகத் தலங்களுக்கு சுற்றுலா சென்று, அங்கங்கே பூஜைகளிலும் கலந்துகொண்டார். மராட்டிய மாநிலத்தில் உள்ள ஷீரடி சாய்பாபா கோவில், சனி சிங்கனாப்பூரில் உள்ள சனீஸ்வரர் ஆலயம் உள்ளிட்ட ஆன்மிகத் தலங்களுக்கு சுற்றுப் பயணம் சென்றார். இந்நிலையில் நேற்று அவர் பிரதமர் மோடியைச் சந்தித்தார். அதன் பின்னர் மீண்டும் தனது ஆன்மிக சுற்றுப் பயணத்தைத் தொடர்ந்த ஓபிஎஸ், தில்லியில் இருந்து கேரளாவுக்குப் புறப்பட்டுச் சென்றார். அங்கே குருவாயூர் கோவிலில் சுவாமி தரிசனம் செய்ய அவர் சென்றிருப்பதாக கட்சி நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர்.
முன்னதாக, வெங்கய்ய நாயுடு பதவியேற்பு விழாவில் கலந்து கொண்ட பின்னர் அவருக்கு உடனடியாக மோடியைச் சந்திக்க அனுமதி கிடைக்கவில்லை. இதனால், ஓபிஎஸ்ஸை மோடி புறக்கணிக்கிறார் என்று ஓரிரு நாளிதழ்களில் செய்திகள் வெளியாகின. இந்நிலையில் நேற்று அவர் தில்லியில் பிரதமர் மோடியை அவரது இல்லத்தில் சந்தித்துப் பேசினார். அவருடன் மைத்ரேயன் எம்.பி.யும் சென்றிருந்தார். மோடியைச் சந்தித்துப் பேசிய பின்னர், செய்தியாளர்களிடம் பேசினார் ஓ.பன்னீர்செல்வம். அவரது பேட்டியின்போது எம்.பி.க் கள் டாக்டர் மைத்ரேயன், அசோக்குமார், சுந்தரம், முன்னாள் அமைச்சர்கள் கே.பி. முனுசாமி, நத்தம் விஸ்வநாதன் ஆகியோர் உடனிருந்தனர்.
அப்போது பேசிய ஓ.பன்னீர்செல்வம், “இந்திய குடியரசுத் துணைத் தலைவர் பதவி ஏற்பு விழாவுக்கு வந்திருந்த நான் பிரதமரைச் சந்தித்து தமிழ்நாட்டின் அரசியல் சூழ்நிலைகள் பற்றி பல்வேறு கருத்துகளை பரிமாறிக் கொண்ட நல்ல சூழல் ஏற்பட்டது. இன்று நடைபெற்றுக் கொண்டிருக்கும் தமிழக அரசின் நிலைப்பாட்டினை பிரதமரிடம் விரிவாக விளக்கிக் கூறினேன். பொதுவாக தமிழக அரசின் சூழ்நிலைகள், நிலைப்பாடுகள், நடக்கும் பிரச்னைகள் பற்றி விரிவாகப் பேசினோம். அணிகள் இணைப்பு விஷயத்தைப் பொறுத்தவரை, தமிழக மக்கள், அ.தி.மு.க. தொண்டர்களின் எண்ணங்கள், கருத்துகளின் அடிப்படையில்தான் அது இருக்கும். இதுவரை எங்களது நிலைப்பாடு அதுவாகவே இருக்கிறது. எந்த முடிவு எடுத்தால் தமிழக மக்களுக்கு நன்மை பயக்கும் விஷயமாக இருக்குமோ, அந்த முடிவை நாங்கள் எடுப்போம்” என்றார்.



