
மதுரை:
தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி உள்ளிட்ட அமைச்சர்களை 420 என்று வர்ணித்த தினகரன், மதுரையில் நடந்த பொதுக்கூட்டத்துக்குப் பின் செய்தியாளர்களிடம் பேசியபோது, அவர்களை அற்பர்கள் என்று உவமையுடன் கூறினார்.
மதுரை மேலூரில் தினகரன் ஆதரவாளர்களின் சார்பில் எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழாப் பொதுக் கூட்டம் நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட அ.தி.மு.க. (அம்மா) அணி துணை பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன் , அதன் பின்னர் மதுரையில் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் “நான் நிர்வாகிகளை நியமித்தது செல்லாது என்று தீர்மானம் நிறைவேற்றி இருக்கிறார்கள். தேர்தல் கமிஷனில் அளிக்கப்பட்ட பிரமாணப் பத்திரத்தில் ஒன்றைக் கூறி விட்டு இங்கே பொய்யான தீர்மானம் ஒன்றை நிறைவேற்றியிருக்கிறார்கள். முதலமைச்சர் மற்றும் அமைச்சர்களின் இதுபோன்ற மோசடி செயலைத்தான் நான் ‘420’ என்று கூறினேன். முதலமைச்சரைப் பார்த்து இப்படிக் கூறலாமா என்று என்னிடம் யாராவது கேள்வி கேட்டால்… எனக்கு ஒன்றும் பயம் இல்லை. யாரைப் பார்த்தும் எனக்கு பயம் இல்லை.” என்று கூறினார்.
இவரது 420 விமர்சனம் இவர் மீதே முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி மற்றும் அமைச்சர்களால் முன்வைக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த 420 விமர்சனம் அதிமுக.,வின் இரு அணிகள் மீதே மாறி மாறிக் கூறப்பட்டு வந்ததில் குஷியடைந்த திமுக.,வினர், களத்தில் புக, திமுக.,வின் ஜெ. அன்பழகன், “அ.தி.மு.க.வில் உள்ள 3 அணியினரும் ஒருவர் மீது ஒருவர் குற்றச்சாட்டுகளை கூறி வருகின்றனர். டி.டி.வி.தினகரன் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியை பார்த்து 420 என்கிறார். எடப்பாடி பழனிசாமி டி.டி.வி.தினகரனை 420 என்கிறார். இவர்களை பார்த்து ஓ.பன்னீர்செல்வம் அணியினர் 420 என்கிறார்கள். மொத்தத்தில் அ.தி. மு.க.வில் உள்ள 3 அணியுமே 420 தான். அ.தி.மு.க.வில் நம்பர் ஒன் 420 யார் என்பதில்தான் அவர்களுக்குள் போட்டி நிலவுகிறது.” என்று கூறினார். அவரது இந்தக் கருத்துக்கு பதிலளித்த அதிமுக.,வினர், திமுக.,வில் உள்ள ஒவ்வொருவருமே 420 தான் என்றனர். இப்படி, தினகரனால் துவங்கப்பட்ட ‘420’ பட்டமளிப்பு இயக்கமானது, திமுக., அதிமுக., என இரு பெரும் திராவிடக் கட்சிகளின் தொண்டர்கள் வரை அனைவரும் 420 என்று பட்டம் கொடுக்கும் அளவுக்கு வளர்ந்துவிட்டது.
அண்மையில் நமது எம்.ஜி.ஆர். நாளேட்டில் சில பிரச்னைகள் எழுந்தது. பணியாளர்கள் பாதிக்கப்பட்டனர். இது குறித்து கேள்வி எழுப்பப் பட்டபோது, தினகரன் அதற்கு, “நமது எம்.ஜி.ஆர். நாளேடு சின்னம்மா மேற்பார்வையில் இருந்தது. இப்போது உறவினர் விவேக் மேற்பார்வையில் நடைபெறுகிறது. அந்தப் பத்திரிகையில் நிர்வாகத்துக்கு எதிராக செயல்பட்ட கருப்பு ஆடுகளைக் ‘களை’ எடுத்து விட்டோம். நிர்வாகத்தின் ஒப்புதலின்றி நிர்வாகத்துக்கு எதிராக கட்டுரைகள் வந்ததால் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.” என்று பதிலளித்தார்.
கமல்ஹாசன் மற்றும் அமைச்சர்களுக்கு இடையே வாய்த்தகராறு ஏற்பட்டபோது, அதை விமர்சித்துப் பேசினார் தினகரன், அதை மீண்டும் நினைவு கூர்ந்த தினகரன், “கட்சிக்காக பேசும்போது எங்களைப் பேசவிடாமல் தடுக்கிறார்கள். சிலரின் செயல்பாட்டால்தான் நாங்கள் பதில்சொல்ல வேண்டியுள்ளது. அதையும் பெருந்தன்மையாக யாரையும் தாக்காமல் பதில் சொல்கிறோம். அதை எதிர்கொள்ள முடியாதவர்கள் பதிலுக்கு பேசுகிறார்கள். உதாரணத்துக்கு சொல்ல வேண்டுமானால், நடிகர் கமல்ஹாசன் கேட்ட கேள்விகளுக்கு அமைச்சர்கள் கண்ணியத்துடன் பதில் சொல்லியிருக்க வேண்டும். ஒருமையில் பேசியிருக்க கூடாது. கிராமத்தில் ஒரு பழமொழி சொல்வார்கள் அர்ப்பனுக்கு வாழ்வுவந்தால் அர்த்த ராத்திரியில் குடை பிடிப்பான் என்பார்கள். அதைப்போல் தான் அமைச்சர்களின் செயல்பாடும் உள்ளது.” என்றார். இதன்மூலம், அமைச்சர்களுக்கு அற்பர்கள் என்ற ரீதியில் பட்டம் கொடுத்து உவமைப்படுத்தியுள்ளார்.
இந்த ஆட்சி பாதை மாறிச் செல்கிறது என்று குற்றம் சாட்டிய தினகரன், “அம்மா இருந்தபோது, இவர்கள் எப்படி இருந்தார்கள். இப்போது எப்படி பேசுகிறார்கள் என்பதை பார்த்தாலே புரியும். இன்று தறிகெட்ட நிலையில் உள்ளனர். அப்படி அடங்காமல் செல்லும் காளைகளை மூக்கனாங்கயிறு போட்டு அடக்குவோம். இந்த ஆட்சி அம்மா பாதையில் செல்லும் வரை ஆபத்தில்லை. இப்போது ஆட்சி நடக்கிறது. அவ்வளவு தான். இந்த ஆட்சி பாதையை விட்டு மாறிச் சென்றால் அது ஆபத்தாகத்தான் முடியும்.” என்று எச்சரிக்கை விடுத்தார்.
“தாலிக்குத் தங்கம் வழங்குவதில் லஞ்சம் கேட்பதாக அமைச்சர் மீது வெற்றிவேல் எம்.எல்.ஏ. குற்றம் சுமத்தியுள்ளார். அவர் மட்டுமல்ல, பலரும் இதையே கூறுகிறார்கள். இந்த இயக்கத்தை வலுப்படுத்த நம்மால்தான் முடியும் என்று எம்.எல்.ஏ.க்கள் எங்கள் பக்கம் வந்த வண்ணம் உள்ளனர். எனக்கு எந்த வித அச்சுறுத்தலும் இல்லை. மிரட்டலுக்கும் பயப்பட மாட்டேன். முன்னாள் நண்பர்களால் இடையூறு ஏற்பட்டுள்ளது. அதை விரைவில் சரிசெய்து விடுவேன்” என்று கூறினார் தினகரன்.



