புது தில்லி:

மத்திய அமைச்சரவையில் கேபினட் அந்தஸ்து வழங்கப்பட்ட நிர்மலா சீதாராமனுக்கு பாதுகாப்புத்துறை வழங்கப்பட்டுள்ளது. இந்திரா காந்திக்குப் பின்னர் பாதுகாப்புத் துறைக்கு அமைச்சர் ஆகியுள்ள பெண்மணி நிர்மலா சீதாராமன் என்பது குறிப்பிடத் தக்கது.

பிரதமர் மோடி, மத்திய அமைச்சரவையில் மாற்றம் செய்தார். இன்று அவரது தலைமையிலான அமைச்சரவையில் 9 பேர் புதிதாக அமைச்சர்களாக பொறுப்பேற்றுக் கொண்டனர். மேலும், தர்மேந்திர பிரதான், பியூஸ் கோயல், நிர்மலா சீதாராமன், முக்தர் அப்பாஸ் நக்வி ஆகிய 4 இணை அமைச்சர்கள், சிறப்பாக செயல்பட்டதன் அடிப்படையில் கேபினட் அந்தஸ்துக்கு உயர்த்தப் பட்டனர். குடியரசுத் தலைவர் மாளிகையில் இன்று நடைபெற்ற விழாவில் அவர்கள் அமைச்சர்களாக பதவி ஏற்றுக் கொண்டனர். அவர்களைத் தொடர்ந்து புதிய அமைச்சர்கள் பதவி ஏற்றனர். குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் அவர்களுக்கு பதவி பிரமாணம் செய்து வைத்தார்.

மத்திய அமைச்சரவையில் மிகவும் முக்கியமான பதவியான பாதுகாப்புத் துறை, நிர்மலா சீதாராமனுக்கு வழங்கப்பட்டுள்ளது. இந்தியாவின் மிகவும் முக்கியமான பொறுப்பை, முன்னாள் பிரதமர் இந்திரா காந்திக்குப் பின்னர் இரண்டாவது முறையாக ஒரு பெண் பெற்றுள்ளார். பாதுகாப்புத் துறை அமைச்சராகப் பொறுப்பு வகிக்கும் இரண்டாவது பெண் என்ற பெருமையை நிர்மலா சீதாராமன் பெற்றுள்ளார்.

தொடர் ரயில்வே விபத்துகளால் ரயில்வே அமைச்சர் பதவியை ராஜினாமா செய்த சுரேஷ் பிரபுவுக்கு பதில், பியூஸ் கோயல் ரயில்வே அமைச்சர் ஆகியுள்ளார். தர்மேந்திர பிரதான் பெட்ரோலிய துறையில் கேபினட்டுடன், கூடுதல் பொறுப்பாக திறன்மேம்பாட்டுத்துறை வழங்கப்பட்டுள்ளது. சுரேஷ் பிரபு வர்த்தகத் துறை அமைச்சர் ஆகியுள்ளார். சாலை போக்குவரத்து அமைச்சர் நிதின் கட்கரிக்கு நதிநீர் மேம்பாட்டுத் துறை கூடுதலாக ஒதுக்கப்பட்டுள்ளது. தமிழகதைச் சேர்ந்த பொன் ராதாகிருஷ்ணன், கப்பல் போக்குவரத்துத் துறையுடன், நிதித்துறையையும் கூடுதலாகப் பெற்றிருக்கிறார்.

ALSO READ:  இலவச பஸ் வேண்டாம்; கட்டண பஸ் அனுப்பி உரிய மரியாதை கொடுங்க போதும்!

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Trending