திருச்சியில் இடிந்து விழுந்த 3 மாடி கட்டடம்: உயிருடன் மீண்ட குழந்தை!

உள்ளூர் செய்திகள் சற்றுமுன் தமிழகம் திருச்சி

திருச்சி:

திருச்சி மலைக்கோட்டையில் 3 மாடி கட்டிடம் இடிந்து விழுந்து விபத்து நேரிட்டதில் 4 பேர் உயிரிழந்தனர். இடிபாடுகளுக்கு இடையில் இருந்து குழந்தை ஒன்று உயிருடன் மீட்டெடுக்கப் பட்டது.

திருச்சி மலைக்கோட்டையில் தஞ்சை குளத் தெருவில் 3 மாடி கட்டடம் அதிகாலை 3.45 மணி அளவில் பலத்த சத்தத்துடன் இடிந்து விழுந்து கட்டடம் முழுவதும் தரைமட்டமானது.

பெரும் சத்தத்தைக் கேட்டு அருகில் உள்ளவர்கள் வீதிக்கு ஓடிவந்தனர். வீடு தரை மட்டமானதைப் பார்த்து உடனடியாக தீயணைப்பு நிலையம், போலீஸ் நிலையங்களுக்கு தகவல் கொடுத்தனர். அதை அடுத்து விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள், போலீசார், பொதுமக்கள் மீட்பு பணியில் ஈடுபட்டனர். 2 பொக்லைன் இயந்திரங்கள் மூலம் இடிபாடுகள் சிறிது சிறிதாக அகற்றப்பட்டன. கட்டிடம் ஒரே நேர்கோட்டில் தரைமட்டமானதால் உள்ளே சிக்கியிருந்தவர்களை மீட்பதில் சிரமம் ஏற்பட்டது.

கட்டட இடிபாடுகளை அகற்றி வந்தபோது, திடீரென குழந்தையின் அழுகுரல் கேட்டது. இதனால் பொக்லைன் மூலம் இடிபாடுகளை அகற்றும் பணி நிறுத்தப் பட்டு, உடனடியாக அந்தக் குழந்தையை உள்ளிருந்து மீட்டனர். அங்காள பரமேஸ்வரி என்ற ஒன்றரை வயதுக் குழந்தை உயிருடன் மீட்கப் பட்டு அருகில் இருந்த ஆம்புலன்ஸில் ஏற்றப்பட்டு அங்கே முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது. குழந்தை மீட்கப் பட்ட நிலையில், அதன் பெற்றோர் பழனி, ராஜாத்தி இருவரும் உயிரிழந்த நிலையில், சடலமாக மீட்கப் பட்டனர்.

இந்தச் சம்பவத்தில் அந்தக் கட்டடத்தில் இருந்த கார்த்திக், ஹரீஷ் உள்பட 4 பேர் உயிரிழந்தனர். கட்டடம் இடிந்த பகுதியில் அதிகாரிகள் ஆய்வு செய்துள்ளனர். அந்தக் கட்டடம் சுமார் 70 ஆண்டுகளுக்கு முன்னர் கட்டப்பட்டதாகக் கூறப்படுகிறது.

முன்னதாக, நேற்று இரவு 7 மணி முதல் திருச்சி நகர் மற்றும் புறநகர் பகுதியில் சுமார் 2 மணி நேரத்திற்கும் மேலாக பலத்த மழை கொட்டித் தீர்த்தது. சாலைகளில் மழைநீர் வெள்ளம்போல் பெருக்கெடுத்து ஓடியது. பல இடங்களில் மரங்கள் ரோட்டில் வேருடன் சாய்ந்தன. இந்நிலையில் இன்று அதிகாலை கட்டடம் இடிந்து விழுந்துள்ளது.

இது குறித்து அறிந்ததும், அமைச்சர் வெல்லமண்டி நடராஜன் அந்த இடத்தை நேரில் சென்று பார்வையிட்டு தேவையான உதவிகளைச் செய்ய அறிவுறுத்தினார்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.