இரு ‘கரன்’களுக்கு இடையே இணைப்பில்லையே! திமுக.,வுடன் ஒட்டுகிறார் ஒருவர்; வெட்டுகிறார் இன்னொருவர்!

"எனது ஆதரவாளர்கள் பங்கேற்பார்கள் என்று ஏதோ உணர்ச்சி வசப்பட்டு திவாகரன் கூறிவிட்டார். அது அவரது தனிப்பட்ட கருத்து" என்று தினகரன் செய்தியாளர்களிடம் கூறினார்.

சென்னை:
நீட் தேர்வு விவகாரத்தில் நாளை திமுக., தலைமையகமான அண்ணா அறிவாலயத்தில் அனைத்துக் கட்சிக் கூட்டம் நடைபெறும் என்றும், அதற்கு மற்ற கட்சிகளையும் அழைத்திருப்பதாகவும் மு.க. ஸ்டாலின் கூறியிருந்தார். அந்தக் கூட்டத்தில், அதிமுக., அம்மா அணியின் தினகரன் ஆதரவாளர்கள் கலந்து கொள்வார்கள் என்று புதுக்கோட்டையில் செய்தியாளர்களிடம் பேசிய திவாகரன் கூறினார். இது பலரது புருவங்களை உயர்த்தியது. ஆனால், அவரது கருத்தை மறுத்து தினகரன் அளித்த பேட்டியில், எனது ஆதரவாளர்கள் இந்தக் கூட்டத்தில் கலந்து கொள்ள மாட்டார்கள் என்று கூறினார். இப்படி, இரு கரன்களுக்கும் இடையேகூட ஒருங்கிணைப்பு இல்லாத நிலை உள்ளது.

நீட் தேர்வால் பாதிக்கப்பட்டு தற்கொலை செய்து கொண்ட மாணவி அனிதாவுக்கு நீதி கிடைக்க வேண்டும்; நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும் என்று வலியுறுத்தி போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. அனிதாவின் உடல் அவரது சொந்த ஊரான குழுமூர் கிராமத்தில் நேற்று எரிக்கப்பட்டது. அவரது உடலுக்கு, தி.மு.க செயல் தலைவர் ஸ்டாலின், விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன், நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான், அ.தி.மு.க அம்மா அணி துணைப் பொதுச் செயலாளர் டி.டி.வி. தினகரன் உள்ளிட்டோர் நேரில் சென்று அஞ்சலி செலுத்தினர்.

அப்போது அனிதாவின் குடும்பத்துக்கு ரூ.10 லட்சம் உதவித் தொகையை மு.க. ஸ்டாலின் வழங்கினார். மேலும், நீட் தேர்வு ரத்து செய்யப்படுவது தொடர்பாக அடுத்த கட்ட நடவடிக்கைகள் குறித்து திங்கள்கிழமை மாலை 5 மணிக்கு அனைத்துக் கட்சிக் கூட்டத்துக்கு ஸ்டாலின் அழைப்பு விடுத்துள்ளார். காங்கிரஸ், விடுதலைச் சிறுத்தைகள், உள்ளிட்ட 9 கட்சிகளுக்கு அழைப்பு விடுக்கப் பட்டுள்ளது என்றும் பாஜக., பாமக., ஆகிய கட்சிகள் நீங்கலாக பிற கட்சியினர் இந்தக் கூட்டத்தில் கலந்து கொள்வார்கள் என்றும் கூறப்பட்டது.

இதனிடையே இன்று காலை புதுக்கோட்டையில் செய்தியாளர்களிடம் பேசிய சசிகலாவின் சகோதரர் திவாகரன், “தி.மு.க.வின் ஆலோசனைக் கூட்டத்தில் தினகரன் ஆதரவாளர்கள் பங்கேற்பார்கள்” என்று கூறியிருந்தார். மேலும் அவர், தினகரனுக்கு 60 எம்.எல்.ஏ,க்கள், 9 அமைச்சர்கள் ஆதரவு உள்ளது என்றும், பேசாமல் ஆட்சியை விட்டுவிட்டுப் போங்களேன் என்றும் எரிச்சலுடன் கூறினார்.

திவாகரனின் இந்தப் பேச்சு பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்திய நிலையில், “நாளை நடைபெறும் தி.மு.க ஆலோசனைக் கூட்டத்தில் எனது ஆதரவாளர்கள் பங்கேற்க மாட்டார்கள்” என்று மறுப்பு தெரிவித்தார் தினகரன். மேலும், “எனது ஆதரவாளர்கள் பங்கேற்பார்கள் என்று ஏதோ உணர்ச்சி வசப்பட்டு திவாகரன் கூறிவிட்டார். அது அவரது தனிப்பட்ட கருத்து” என்று தினகரன் செய்தியாளர்களிடம் கூறினார்.