மூணாறு நிலச்சரிவில் உயிரிழந்த தமிழர்கள்!மத்திய அரசு உதவ இமக., வேண்டுகோள்!

இந்தியா சற்றுமுன் லைஃப் ஸ்டைல்
munnaru
munnaru

மூணாறு நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்த தமிழர்களின் குடும்பங்களுக்கு உதவ மத்திய மாநில அரசுகள் முன் வர வேண்டும் என்று, இந்து மக்கள் கட்சித் தலைவர் அர்ஜுன் சம்பத் வேண்டுகோள் விடுத்திருக்கிறார். அவர் வெளியிட்ட அறிக்கையில்…

கேரள மாநிலம் இடுக்கி மாவட்டம் மூணாறு பகுதியில் புயல் மழை காரணமாக மண்சரிவு ஏற்பட்டு 80க்கும் மேற்பட்டோர் உயிர் இழந்து உள்ளனர்.

இந்தச் செய்தி அனைவரையும் வேதனையில் ஆழ்த்தியுள்ளது. கேரள மாநிலத்தில் ஏற்பட்ட விமான விபத்தில் பலியானவர்களுக்கு உடனடியாக மீட்புப் பணிகளும் இழப்பீடும் கொடுக்கப்பட்டுள்ளது. விமான விபத்து நடந்த இடத்திற்கு மாநில முதலமைச்சர் பினரயி விஜயன் உள்ளிட்ட அனைவரும் நேரடியாக சென்று நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

ஆனால் மூணாறுபகுதிக்கு இதுவரை கேரள மாநில முதலமைச்சரோ அல்லது மத்திய அரசாங்கம் சார்பிலோ ஒருவரும் செல்லவில்லை என்பது மிகுந்த வேதனை அளிக்கிறது. மூணாறு பகுதியில் சேவா பாரதி உள்ளிட்ட சங்கம் சார்ந்த அமைப்புகள் மீட்பு பணிகளில், நிவாரணப் பணிகளில் ஈடுபட்டு வருகின்றன.

மூணாறு பகுதியில் பலியாகியுள்ளார் பெரும்பாலானோர் ஐந்து தலைமுறைக்கு முன்பாக அந்தப் பகுதியில் சென்று விவசாயம் உள்ளிட்ட தோட்டத் தொழில் பணிகளில் தங்களை ஈடுபடுத்திக் கொண்டவர்கள். கனமழை, வெள்ளம் மற்றும் மண்சரிவு காரணமாக குடும்பத்தோடு பலியாகி உள்ளார்கள். அவர்கள் உடல்களை மீட்பது, அவர்களுக்கான ஈமச்சடங்கை செய்வது, உள்ளிட்ட காரியங்களுக்கும் தமிழகத்தைச் சேர்ந்தவர்களுக்கு அவர்களின் உடலை மீட்டு வருவதற்கு உறவினர்கள் சென்று பார்ப்பதற்கும் உள்ளிட்ட நடவடிக்கைகள் முறையாக மக்களைச் சென்றடையவில்லை.

பாதிக்கப்பட்டிருப்பது தமிழகத்தின் எல்லைப் பகுதி, கேரள மாநிலத்தில் இருந்தாலும் தமிழகத்தைச் சேர்ந்தவர்களும் இது விஷயத்தில் அக்கறை கொள்ள வேண்டும். தமிழக அமைச்சர்களும் மூணாறுக்கு அருகாமையில் உள்ள மாவட்டத்தைச் சேர்ந்த தமிழக அரசு அதிகாரிகளும் சம்மந்தப்பட்ட இடத்திற்கு உடனடியாக சென்று மக்களுக்கு தேவையான உதவிகளை செய்திட வேண்டும்.

தமிழக அரசின் சார்பிலும் இழப்பீடு வழங்கிட வேண்டும்.
கேரள மாநில அரசாங்கம் மூணாறு விபத்தில் பலியான குடும்பத்திற்கு தலா 50 லட்சம் ரூபாய் வழங்க வேண்டும். தேயிலைத் தோட்டத் தொழிலில் ஈடுபட்டுள்ள குடும்பங்களை சார்ந்தவர்களுக்கு சம்பந்தப்பட்ட தேயிலை தோட்ட அதிபர்கள் குறிப்பாக டாட்டா நிறுவனம் மற்றும் கண்ணன் தேவன் டி நிறுவனம் இது வரை இழப்பீடு பற்றிப் பேசாமல் இருப்பது வருத்தத்தைக் கொடுக்கிறது.

சம்பந்தப்பட்ட குடும்பங்களுக்கு உரிய வேலைவாய்ப்புகளும் அவர்கள் குடியிருக்க வீடுகளும் வழங்கப்பட வேண்டும். 5 லட்சம் ரூபாய் என கண்ணன் தேவன் டி நிறுவனம் அறிவித்திருக்கிறது. இது போதாது ஒரு குடும்பத்திற்கு 25 லட்சம் ரூபாய் வரை இழப்பீடு கொடுக்க வேண்டும்… என இந்து மக்கள் கட்சியின் சார்பில் கேட்டுக் கொள்கின்றோம்.

மத்திய மாநில அரசுகள் போர்க்கால அடிப்படையில் செயல்பட்டு பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவிடும் படி வேண்டிக் கொள்கிறோம்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.