தீபாவளிக்கு பின்னர் பீகார் மாநில முதலமைச்சராக நிதீஷ் குமார் மீண்டும் பொறுப்பு ஏற்பார் என கூட்டணி கட்சியான பாரதிய ஜனதா கட்சி மற்றும் ஐக்கிய ஜனதா தளம் ஆகியவை அறிவித்துள்ளன.
முதல்வர் பதவி குறித்து செய்தியாளர்களிடம் பேசிய பா.ஜ.க மூத்த தலைவர்களின் ஒருவரும் துணை முதலமைச்சருமான சுசில் மோடி, பீகாரின் அடுத்த முதலமைச்சராக நிதீஷ் குமார் பதவி ஏற்பார்… கூட்டணியில் எந்தக் கட்சி எத்தனை தொகுதியில் வென்றுள்ளது என்பது முக்கியமல்ல! பா.ஜ.கவின் வெற்றிக்கு கூட்டணியின் இதர கட்சிகள் துணை புரிந்துள்ளன. கூட்டணி வெற்றி பெற்றால் நிதிஷ்குமார் தான் முதலமைச்சர் என்பது ஏற்கெனவே முடிவு செய்யப்பட்ட ஒன்றுதான் என்று கூறினார்.
அதேபோல், பாட்னாவின் செய்தியாளர்களிடம் பேசிய ஐக்கிய ஜனதாதள கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரான கே.சி.தியாகி, பீகாரின் முதலமைச்சராக நிதிஷ்குமார் தீபாவளிக்கு பின்னர் பொறுப்பு ஏற்பார் என்றார்.
முன்னதாக பீகாரில் நடைபெற்ற சட்டமன்ற தேர்தல் முடிவுகள் இரு தினங்களுக்கு முன் வெளியானது. இதில், தனிப்பெரும் கட்சியாக லல்லு பிரசாத் யாதவின் மகன் தேஜஸ்வி யாதவ் தலைமையிலான ராஷ்ட்ரிய ஜனதா தளம் 75 தொகுதிகளுடன் திகழ்கிறது அதேநேரம் ஒரே ஒரு தொகுதி குறைந்து பாஜக 74 தொகுதியுடன் இரண்டாவது பெரிய கட்சியாக திகழ்கிறது
தேசிய.ஜனநாயக கூட்டணியில் பாஜகவை அடுத்து ஐக்கிய ஜனதா தளம் 43 இடங்களில் வென்றுள்ளது. விகாஷீல் இன்சான் கட்சி 4 தொகுதிகளில் வென்றுள்ளது. மற்றொரு கூட்டணி கட்சியான முன்னாள் முதல்வர் ஜிதன்ராம் மஞ்சியின் ஹிந்துஸ்தானி ஆவாம் மோர்ச்சா 4ல் வெற்றி பெற்றுள்ளது.
எதிர்க்கட்சிகளின் கூட்டணியான மகாகட்பந்தனில் தேஜஸ்வி யாதவ் தலைமையிலான ராஷ்ட்ரீய ஜனதா தளம் 75 தொகுதிகளிலும், காங்கிரஸ் 19 தொகுதிகளிலும், கம்யூனிஸ்ட் கட்சிகள் 16 தொகுதிகளிலும் வெற்றி பெற்றுள்ளன. மகாகட்பந்தன் கூட்டணிக்கு மொத்தம் 110 தொகுதிகள் கிடைத்துள்ளது.
பீகார்தேர்தலில் அனைவரும் ஆச்சரியத்துடன் பார்க்கப்படும் விஷயமாக அசாதுதீன் ஓவைசியின் நடவடிக்கை அமைந்துள்ளது.
பீஹார் சட்டசபை தேர்தல் முடிவுகள் வெளிவந்த நிலையில் யாரும் எதிர்பாராத விதமாக தனித்துப்போட்டியிட்ட ஓவைஸியின் கட்சியான ஏ.ஐ.எம்.ஐ.எம்., கட்சி 5 தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ளது.
இந்த வெற்றி குறித்து ஓவைஸி கூறியபோது: அரசியலில் தவறுகளில் இருந்து பாடம் கற்க வேண்டும். பீஹாரின் பெரிய கட்சிகள் ஒன்று கூட கூட்டணிக்காக எங்களை அணுகவில்லை. அனைத்து கட்சிகளும் எங்களை தீண்டத்தகாதவர்களாக நடத்தின. எங்களுக்கு மகிழ்ச்சியான தினமாக அமைந்துள்ளது. பீஹார் மக்கள் எங்களுக்கு ஓட்டளித்து ஆசிர்வதித்துள்ளனர். அவர்களுக்கு நான் எப்படி நன்றி சொல்வது என தெரியவில்லை என்று கூறியுள்ளார்
மேலும் இந்த தேர்தலில் முஸ்லிம்களின் வாக்கு தேவையில்லாமல் ராஷ்ட்ரிய ஜனதா தளத்துக்கு காங்கிரஸிற்கும் செல்வதை நாம் விரும்பவில்லை என்றும் முஸ்லிம்கள் தனித்து போட்டியிட்டால் வெற்றி பெற முடியும் என்றும் பார்த்து இருப்பதாகவும் அவர் கூறியுள்ளார்
கட்சி நின்றது வென்றது வெற்றி %
RJD 144 75 52
JDU 115 43 37
BJP 110 74 67
Congress 70 19 27
பிஹார் தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணி 125 இடங்களில் வெற்றி பெற்று ஆட்சியை தக்க வைத்துக் கொண்டுள்ளது. ராஷ்ட்ரீய ஜனதா தளம் கட்சி தலைமையிலான கூட்டணி 110 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது. ஏஐஎம்ஐஎம் 5 இடங்களிலும், பகுஜன் சமாஜ் மற்றும் சுயேட்சை ஆகியவை தலா ஒரு இடங்களிலும் வெற்றி பெற்றன.
இந்த தேர்தலில் ஆர்ஜேடி கட்சிக்கு அதிக ஓட்டுகள் கிடைத்துள்ளது. 75 தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ள ஆர்.ஜே.டி.,க்கு 23.08 சதவீத ஓட்டுகளும்,
74 தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ள பா.ஜ.,வுக்கு 19.46 சதவீத ஓட்டுகளும்,
43 தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ள ஐ.ஜ.த.,வுக்கு 15.40 சதவீத ஓட்டுகளும்,
19 தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ள காங்கிரசுக்கு 9.49 சதவீத ஓட்டுகளும்,
5 தொகுதிகளில் வெற்றி பெற்ற ஏஐஎம்ஐஎம் கட்சிக்கு 1.25 சதவீத ஓட்டுகளும்,
2 தொகுதிகளில் வெற்றி பெற்ற சி.பி.ஐ., கட்சிக்கு 0.82 சதவீத ஓட்டுகளும்,
2 தொகுதிகளில் வெற்றி பெற்ற சிபிஐ(எம்) கட்சிக்கு 0.65 சதவீத ஓட்டுகளும்
1 தொகுதியில் வெற்றி பெற்ற பகுஜன் சமாஜ் கட்சிக்கு 1.51% ஓட்டுகளும் கிடைத்துள்ளன.
இந்தத் தேர்தலில் விஐபி கட்சி 4, சிபிஐ-எம்எல் 12, எச்ஏஎம் 4 தொகுதிகளில் வெற்றி பெற்றிருந்தன.
202 தொகுதிகளில் மட்டும் சுமார் 6,89,135 பேர் அதாவது 1.69 சதவீதம் பேர் நோட்டாவுக்கு ஓட்டு போட்டுள்ளனர்.