
தில்லி – நொய்டா சாலையில் போக்குவரத்தைத் தடை செய்து தடுப்புகளைப் போட்டு போராட்டத்தில் ஈடுபட்டிருந்த போராட்டக்காரர்கள், அரசுடனான பேச்சுவார்த்தைகளின் போது வேண்டுகோளை ஏற்று, சாலைத் தடுப்புகளை அகற்றி, போக்குவரத்துக்கு வழி விட்டுள்ளனர்.
மத்திய அரசு கொண்டு வந்துள்ள மூன்று வேளாண் சட்டங்களை திரும்பப் பெற வலியுறுத்தி பஞ்சாப் மற்றும் அரியானா உள்ளிட்ட மாநிலங்களைச் சேர்ந்த விவசாயிகள் தில்லியில் தொடர்ந்து போராடி வருகின்றனர். 18வது நாளை எட்டியிருக்கிறது இந்தப் போராட்டம்.
விவசாயிகளுடன் மத்திய அரசு நடத்திய 5 சுற்று பேச்சுவார்த்தைகளின் போதும் எந்த முடிவும் எட்டப்படவில்லை. இந்த இடைப்பட்ட காலத்தில், விவசாய சங்கங்களுடன் இணைந்து, காலிஸ்தான் பயங்கரவாதிகள், பிரிவினைவாதிகள், உள்நாட்டுக் கலகக்காரர்கள், மாவோயிஸ்டுகள் என சில குழுக்கள் இணைந்து, போராட்டத்தை தீவிரப்படுத்தி உள்ளன.
முக்கியமாக தில்லி போக்குவரத்தை முற்றிலும் தடை செய்யும் நோக்கத்தில், தில்லியை இணைக்கும் சாலைகளை முற்றுகையிட்டு போராட்டம் நடத்திவருகின்றனர். சுங்கச்சாவடிகளில் கட்டணம் செலுத்தாமல் செல்லும் போராட்டத்தை நடத்தினர்.

இந்த நிலையில், விவசாய சங்கங்களை சமாதானம் செய்யும் முயற்சியில் தொடர்ந்து ஈடுபட்டு வரும் மத்திய அரசு அவர்களுக்கு இந்த சட்டங்களைக் குறித்து விளக்கியும் வருகிறது.
இதனிடையே மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், வேளாண் அமைச்சர் நரேந்திர சிங் தோமர் ஆகியோர் விவசாய சங்கங்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். தில்லி-நொய்டா நெடுஞ்சாலையில் உள்ள சில்லா எல்லையில், கடந்த 2 வாரங்களுக்கும் மேலாக சாலையில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டுவந்த விவசாயிகளுடன் நடத்திய பேச்சுவார்த்தைகளின் போது, பிரச்னைக்கு தீர்வு காண தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்தப்படும் என்றும், வாகன போக்குவரத்துக்கு இடையூறு செய்ய வேண்டாம் என்றும் கேட்டுக் கொள்ளப் பட்டது.
இதை அடுத்து போராட்டத்தில் ஈடுபட்டிருந்த விவசாயிகள், சாலையை காலி செய்வதாகக் கூறினர். இதனால் அந்த சாலையில் இன்று காலை முதல், சில்லா எல்லை வழியாக தில்லி-நொய்டா இடையே வழக்கமான வாகன போக்குவரத்து தொடங்கியது.
சாலையை விட்டு வெளியேறிய விவசாயிகள் தொடந்து சாலையோரம் முகாமிட்டு போராட்டத்தை தொடர்ந்து வருகின்றனர்.