
அண்மையில் மேற்கு கோதாவரி மாவட்டம் ஏலூரில் பரபரப்பை ஏற்படுத்திய பிரச்சனை குண்டூர் மாவட்டத்திற்கும் பரவியுள்ளது. ஏலூரில் மக்கள் திடீர் திடீரென மயங்கி விழுவதும் நுரைதள்ளி ஃபிட்ஸ் வருவதும் விந்தையான கூச்சல் இடுவதும் நடந்தது.
தற்போது குண்டூரில் தாசேபல்லி மண்டலம் நடிகுடியில் பலர் மயக்கமடைந்து கீழே விழுந்து வருவதால் கவலை ஏற்பட்டுள்ளது. இந்த கிராமத்தைச் சேர்ந்த பல்லபு ராமகிருஷ்ணா (26) நினைவிழந்து விழுந்ததால் உள்ளூர் தனியார் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றார்கள்.
அதன்பிறகு மேல் மருத்துவத்திற்காக குண்டூரு மருத்துவ மனையில் சேர்த்து உள்ளார்கள். அதேபோல் அண்மையில் மேலும் இருவர் மயக்கமடைந்து விழுந்தனர். உள்ளூரில் உள்ள தொழிற்சாலைகளிலிருந்து வெளிவரும் கழிவுகள் காரணமாகவே இவ்வாறு உடல்நலக் கேடு ஏற்படுகிறது என்று கிராம மக்கள் ஐயம் தெரிவித்தனர்.
ஏலூரில் நடந்த பரபரப்பான சம்பவங்களுக்குப் பிறகு மருத்துவ அறிக்கையில்… நோயாளிகளின் ரத்த சாம்பிள்களை பரிசோதித்ததில் ஈயமும் நிக்கலும் மிக அதிக அளவு உடம்பில் கலந்து உள்ளது தெரியவந்துள்ளது.
இதற்கு தண்ணீர் மாசு மட்டுமே காரணமல்ல என்றும் பயிர்களில் தெளிக்கும் அதிகளவு பூச்சி மருந்துகளும் ஒரு காரணம் என்றும் கண்டறிந்துள்ளார்கள். இது மிகவும் கவலைக்குரியது என்று அறிவியலாளர் தெரிவிக்கின்றனர்.