
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான தொடரை இந்தியா வென்று சாதனை படைத்துள்ளது. இளம் இந்திய அணியின் சாதனையாக இது பார்க்கப் படுகிறது.
ஆஸ்திரேலியாவுக்குச் சென்றுள்ள இந்திய அணி, ஒரு நாள் தொடரை இழந்த போதும், டி20 தொடரைக் கைப்பற்றி சாதித்தது. தொடர்ந்து டெஸ்ட் தொடரில், ஒரு போட்டியில் மோசமான தோல்வியைத் தழுவியது இந்திய அணி. மூன்றாவது போட்டி, கடுமையான முயற்சியில் ட்ரா ஆனது, எனினும் இரு போட்டிகளில் அட்டகாசமாக வென்று, 4 போட்டிகள் கொண்ட தொடரை 2-1 என வென்று, ஆஸ்திரேலிய மண்ணில் வரலாற்று சாதனை படைத்துள்ளது.
கடைசி டெஸ்ட் போட்டியில், டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி, பேட்டிங் தேர்வு செய்தது. முதல் இன்னிங்ஸில் 369 ரன்கள் எடுத்தது அந்த அணி. இதில், ஆஸ்திரேலியாவின் மர்னஸ் லாபஸ்சேஞ் 108 ரன்னும், ட்ம் பெய்ன் 50 ரன்னும்ம் எடுத்தனர். இந்திய தரப்பில் வாஷிங்டன் சுந்தர் டி நடராஜன் தலா 3 விக்கெட் வீழ்த்தினர்.
தொடர்ந்து இந்திய அணி முதல் இன்னிங்ஸில் 336 ரன்கள் எடுத்தது. ஷர்துல் தாகுர் 67 ரன்னும், வாஷிங்டன் சுந்தர் 62 ரன்னும் எடுத்தனர். ஆஸ்திரேலிய தரப்பில் ஜோஸ் ஹஸ்ல்வுட் 5 விக்கெட்டும், மிட்செல் ஸ்டார்ச் 2 விக்கெட்டும் எடுத்தனர்.
தனது 2வது இன்னிங்ஸில் ஆஸ்திரேலிய அணி 294 ரன்னில் ஆட்டம் இழந்தது. ஸ்டீவ் ஸ்மித் 55 ரன்னும், டேவிட் வார்னர் 48 ரன்னும் எடுத்து கைகொடுத்தனர். இந்திய தரப்பில், சிராஜ் 5, ஷர்துல் தாகுர் 4 விக்கெட் எடுத்தனர்.
328 ரன் என்ற வெற்றி இலக்குடன் 2வது இன்னிங்ஸை விளையாடத் தொடங்கிய இந்திய அணியில், சுப்மான் கில் 91 ரன்னும், ரிஷப் பந்த் ஆட்டம் இழக்காமல் 89 ரன்னும் எடுத்து அணியின் வெற்றிக்குக் கைகொடுத்தனர். இந்திய அணி 7 விக்கெட் இழப்புக்கு 329 ரன் எடுத்து 3 விக்கெட் வித்தியாசத்தில் போட்டியை வென்றது. தொடரையும் 2-1 என கைப்பற்றியது..
விராட் கோலி, தோல்வியுற்ற முதல் போட்டியுடன் நாடு திரும்பிய நிலையில், கோலி இல்லாமல் அணி வென்றிருப்பதால், சமூகத் தளங்களில் இளம் இந்திய அணிக்கு பாராட்டுகள் குவிந்து வருகின்றன.